Last Updated : 04 Jan, 2018 10:26 AM

 

Published : 04 Jan 2018 10:26 AM
Last Updated : 04 Jan 2018 10:26 AM

போடியில் ஒரு பிதாமகள்

ள்ளிரவில் சுடுகாட்டுக்குள் நடந்து செல்லவே தயக்கம் காட்டும் ஆண்கள் மத்தியில் எந்தவொரு சலனமும் இன்றி சுடுகாட்டிலேயே இரவு, பகலாக தங்கி சடலங்களுக்கு எரியூட்டும் வேலை செய்து வருகிறார் ஒரு பெண்.

தேனி மாவட்டம் போடி நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு மயானத்தில் வெட்டியான் வேலை செய்து வருகிறார் முருகேஸ்வரி. பெண் ஒருவர் வெட்டியான் வேலை செய்து உள்ளூரில் இருக்கும் பலருக்கும் தெரியாது. கடந்த 5 ஆண்டுகளில் 1,890 சடலங்களை தொட்டு தூக்கி எரியூட்டியுள்ளார். 500-க்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்து ஈமகாரியங்களைச் செய்திருக்கிறார்.

போடியில் இருந்து 2 கிமீ தூரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்துள்ள எரிவாயு மயானத்துக்கு முருகேஸ்வரியை சந்திக்க நாம் சென்றிருந்தபோது எரியூட்ட ஒரு சடலம் கொண்டு வரப்பட்டிருந்தது. சடலத்தின் நெருங்கிய உறவினர்கள் அழுது கொண்டிருக்க வெளியூர் உறவினர்கள் வருவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அவரிடம் பேசினோம்.

“சார் எனது சொந்த ஊர் மதுரை ஆனையூர். எனது தந்தை சலவை தொழில் செய்து வந்தார். என் கூட பிறந்தது ஒரு அக்காள் மட்டும்தான் அவரும் மனவளர்ச்சி குன்றிவர். குடும்பத்தின் ஏழ்மை காரணமாக நான் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். 2003-ல் போடியைச் சேர்ந்த கருப்பையாவை திருமணம் செய்து கொண்டேன். எங்களது தொழில் சலவை செய்து கொடுப்பது என்பதால் நானும் எனது கணவரும் ஊருக்கு வெளியில் உள்ள கொட்டக்குடி ஆற்றங்கரை ஓரத்தில் தற்போது உள்ள சுடுகாட்டின் அருகில் குடிசை போட்டு தங்கியிருந்தோம். ஊருக்குள் சென்று பொதுமக்களிடம் அழுக்கு துணிகளை வாங்கி வைத்து அதனை துவைத்து காயப்போட்டு மீண்டும் ஊருக்குள் சென்று கொடுத்து விட்டு இரவில் திரும்புவோம்.

பொதுமக்கள் கொடுக்கும் சொற்ப பணத்தில் எங்களது வாழ்க்கை ஓடி கொண்டிருந்தது. எங்களுக்கு அடுத்தடுத்து 2 ஆண் குழந்தைகள் பிறந்தது. சொந்த வீடு எதுவும் இல்லாமல் தங்க இடவசதியும் இன்றி ஆற்றங்கரை ஓரத்தில் போட்டிருந்த குடிசையில் வெயில், மழை, பனி என்று அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு சலவைத் தொழில் செய்து வந்தோம். மாலை 6 மணிக்கு மேல் யாரும் ஆற்றங்கரை பகுதிக்கு வருவதில்லை.

முதலில் சுடுகாடு அருகே வசிப்பதற்கு சற்று தயக்கமாக இருந்தது. பின்னர் போக போக பயம் நீங்கி பழகிவிட்டது. வாசிங்மிஷின், அயன்பாக்ஸ் புழக்கத்துக்கு வந்தபிறகு சலவை வேலை கிடைக்கவில்லை. வறுமை தாண்டவமாடியது. எனது கணவருக்கு சலவை தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாது. குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுக்க முடியவில்லை. ரேசன் கார்டு இல்லாததால் இலவச அரிசியும் வாய்க்கவில்லை. பல நாட்கள் பட்டினிதான்.

அந்த நேரத்தில் 2012-ம் ஆண்டு சுடுகாட்டுக்குள் எரிவாயு மயானம் அமைக்கப்பட்டது. இதனை ஒப்பந்தம் எடுத்த பெரியார் சமத்துவ நிர்வாகிகளான ரகுநாகராஜனும் சுருளிராஜும் வெட்டியான் வேலைக்கு ஆட்கள் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது நானும் எனது கணவரும் வேலை கேட்டுச் சென்றோம். பல ஆண்டுகளாக சுடுகாடு அருகிலேயே வசிப்பதை அவர்கள் பார்த்துள்ளனர். இதனால் எதுவும் பேசாமல் எங்கள் இருவருக்கும் வெட்டியான் வேலை போட்டுக் கொடுத்தனர். மேலும் தகன மேடை அமைந்துள்ள கட்டிடத்தின் ஒட்டியுள்ள அறையில் தங்கி கொள்ளவும் அனுமதித்தனர்.

அதன்பிறகு குடிசையைக் காலி செய்து விட்டு கடந்த 5 ஆண்டுகளாக இந்த அறையைத்தான் வீடாக பயன்படுத்தி வருகிறோம். ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தபோது குடியிருப்பு முகவரியாக மயானம் என்று கூறியிருந்ததால் அதிர்ந்து போன அதிகாரிகள் முதலில் ரேசன் கார்டு தர மறுத்தனர். பின்னர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரித்தனர். மயானம்தான் எங்களின் முகவரி எனத் தெரிந்த பிறகு ரேசன் கார்டு கொடுத்தனர்.

இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த போது எனது கணவருக்கு திடீர் என கண்பார்வை குறைந்தது. இதனையடுத்து நானே முழுவேலைகளையும் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். தீ வைத்துக் கொண்டவர்கள், தூக்கிட்டவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், விபத்தில் உயிரிழ்தோர் என பலதரப்பட்ட சடலங்கள் வரும். உறவினர்கள் விருப்பப்படி எரியூட்டவோ அல்லது புதைக்கவோ செய்வேன்.

சில நேரங்களில் ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு சடலங்கள் கொண்டு வரப்படும். அப்போது சாப்பிடக் கூட நேரமிருக்காது. சடலங்களுடன் வரும் உறவினர்கள் சிலர் குடிபோதையில் ‘நாங்கள் சுமந்து வந்த சடலத்தைத்தான் முதலில் எரியூட்ட வேண்டும்’ என தகராறு செய்வார்கள். அந்தநேரத்தில் அவர்களிடம் பொறுமையாக பேசி எனது வேலையைச் செய்வேன். தகராறு செய்தவர்கள் அஸ்தியை வாங்கிச் செல்ல வரும்போது என்னிடம் மன்னிப்பும் கேட்டதுண்டு.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என்று சடலத்துக்கு எந்த பெயரும் இல்லை. சலவை தொழில் செய்பவர்கள் யாரும் வெட்டியான் வேலை செய்வதில்லை. ஆனால் நான் செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவதால் எனது வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் 1,890 சடலங்களுக்கு எரியூட்டியுள்ளேன். 500-க்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்துள்ளேன். என்று கூறிக்கொண்டிருந்தவ ரிடம், “முருகேஸ்வரி நேரமாகுது வந்து தேவையான ஈமகாரியங்களை செய்ங்க” என்று குரல் வர 1891-வது சடலத்துக்கு எரியூட்ட கிளம்பிச் சென்றார் இந்த பிதாமகள்.

சகல துறைகளிலும் ஆணுக்கு சமமாக இணைந்து நிற்கும் பெண்களின் எழுச்சி இப்போது மயானம் வரை நீண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x