Published : 17 Jan 2018 11:15 AM
Last Updated : 17 Jan 2018 11:15 AM

பர்மா சு வியாசர்பாடி: 42 ஆண்டுகள்.. மறக்காத நினைவுகள்

ம்ஜிஆர் நடித்த ‘நாளை நமதே’ திரைப்படத்தில் அண்ணன், தம்பிகள் 3 பேர் எதிர்பாராதவிதமாக பிரிந்துவிடுவார்கள். ஒருவரை ஒருவர் யார் எனத் தெரியாமல் வளர்வார்கள். ஒரு கட்டத்தில் அனைவரும் ஒன்றாகச் சேர்வார்கள். “அன்பு மலர்களே.. நம்பி இருங்களே.. நாளை நமதே.. இந்த நாளும் நமதே” என்ற பாடலுடன் ‘சுபம்’ போடப்பட்டு படம் முடியும். அப்படி ஒரு சுப நிகழ்வு சென்னையில் நடந்திருக்கிறது. பின்னணி பாடல் ஒலிக்காத குறைதான்.

குடும்ப வறுமையால் தொலைந்து போனவர் 42 ஆண்டு கள் கழித்து மீண்டும் தேடி வந்ததால், புதையலைக் கண்டதுபோல அந்த குடும்பமே ஆனந்தத்தில் மிதக்கிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் ஜீவ ஊற்றுபோல பொங்கி வழிகிறது பாசம்.

இதன் சுவாரசிய ‘பிளாஷ்பேக்’

தமிழகத்தை பூர்வீமாகக் கொண்டவர்கள் பர்மாவில் அதிக அளவில் வசித்துவந்த காலம். அவர்களில் பலர் 1970-களில் தமிழகத்துக்கு புலம்பெயர்ந்தனர். அவர்கள் குடியிருக்க வியாசர்பாடி சாஸ்திரிநகர் பகுதியில் இடம் வழங்கியது தமிழக அரசு. இன்றும் அப்பகுதி யில் உள்ள பலரும் பர்மாவில் இருந்து திரும்பியவர்கள்தான். அவ்வாறு 1972-ல் இங்கு குடியேறியவர்தான் பாலகிருஷ்ணன். அவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள். வருமானமின்றி குடும்பம் வறுமையில் உழன்றது. குழந்தைகளுக்கு போதுமான உணவுகூட வழங்க முடியாத நிலை.

வறுமை தாங்காமல் பாலகிருஷ்ணனின் 2-வது மகன் குணசேகரன் 1976-ல் திடீரென காணாமல் போனார். அப்போது அவருக்கு 18 வயது. அவரைத் தேடி எங்கெங்கோ அலைந்தார்கள். ஆனால், எந்தத் தகவலும் இல்லை. அவர் இருக்கிறாரா, இல்லையா என்றே தெரியவில்லை. திடீரென எப்போதாவது அவரைப் பற்றி நினைத்துக் கொள்வார்கள். மெல்ல, இயல்பு நிலைக்குத் திரும்பி வாழ்க்கையை ஓட்டத் தொடங்கினர்.

இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி. அது நடக்கும் என்று அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. 42 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன குணசேகரன் திடீரென வீட்டு வாசலில் வந்து நின்றார். “நான்தான் குணசேகரன்” என்றார். உறவுகளால் அவரை அடையாளம் காணமுடியவில்லை. திகைத்து நின்று பார்த்தவர்கள், அவரை முழுமையாகத் தெரிந்து கொண்டதும் கட்டித் தழுவி மகிழ்ச்சியில் திளைத்தனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அவரது சகோதர, சகோதரிகள் அவர்களது வாரிசுகள் என குடும்பத்துடன் படையெடுத்து வந்து குணசேகரனைப் பார்த்து பரவசத்துடன் பாசத்தைப் பொழிகின் றனர்.

கடந்த 42 ஆண்டுகளில் தான் சந்தித்த அனுபவங்களை, கேட்பவர்களிடம் எல்லாம் சளைக்காமல் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார் குணசேகரன். குடும்ப உறுப்பினர் கள் அனைவரும் ஒன்றுகூடி விருந்துண்டு மகிழ்கின்றனர். அந்த வீடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

இத்தனை ஆண்டுகளில் என்ன தான் நடந்தது என்று அறிய குணசேகரனிடம் பேசினோம்..

“தாங்க முடியாத கஷ்டத்தால் ரயிலேறி நாகாலாந்து சென்றேன். அங்கு உணகத்திலும், பின்னர் தமிழர்கள் அறிமுகத்தின்பேரில் கொத்தனாராகவும் வேலை செய்தேன். பின்னர் படிப்படியாக உயர்ந்து கட்டிட ஒப்பந்ததாரராக இருக்கிறேன். என்னிடம் 25 பேர் வேலை செய்கின்றனர். அங்கு சிமென்ட், டைல்ஸ் கடை வைத்திருக்கிறேன்.

நாகாலாந்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். அதில் ஒரு குடும்பம்தான் எனக்கு அடைக்கலம் கொடுத்தது. பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டேன். அவர் உடல்நலக் குறைவால் இறந்தபிறகு, அங்கு வசித்த ஆந்திர மாநில ராணுவ வீரரின் மகளைதிருமணம் செய்துகொண்டேன். எனக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

தொடக்கத்தில் நிலையான வேலை இல்லை. பின்னர் குடும்பம், குழந்தைகள் கவனிப்பு, முதல் மனைவி மறைவு, பின்னர் வேலைப்பளு என காலம் கடந்தது. அதனால், அவ்வப்போது குடும்பத்தினரின் நினைவு வந்தாலும், சென்னைக்கு வரமுடியவில்லை.

தற்போது வேலூரில் உள்ள நண்பர் மூலமாக எனது சகோதரரின் வீட்டைக் கண்டுபிடித்து மீண்டும் குடும்பத்தில் இணைந்திருக்கிறேன். நாங்கள் சிறுவயதில் வசித்த அதே பகுதியிலேயே அவர்கள் வசித்து வந்ததால், எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது’’ என்கிறார் குணசேகரன் மகிழ்ச்சி பொங்க.

42 ஆண்டுகள் கழித்து வந்திருக்கிறீர்கள். நீங்கள்தான் குணசேகரன் என்று உறவினர்கள் உடனே அடையாளம் கண்டுகொண்டார்களா? என்று கேட்டதற்கு..

‘‘என் தம்பி மோகன், போலீஸ் எஸ்.ஐ.யாக இருக்கிறார். சொன்னதும், பாசத்தோடு ஓடிவந்து கட்டிக்கொள்வார் என்ற எதிர்பார்ப்புடன் ‘நான்தான் உன் அண்ணன் குணசேகரன் வந்திருக்கிறேன்’ என்றேன். அவரோ, என்கொயரியை ஆரம்பித்துவிட்டார். சிறுவயதில் வறுமையால் தவித்தபோது, சாப்பாடு போடுவார்கள் என்பதற்காக, காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் நாங்கள் இருவரும் படித்தோம். அதைச் சொன்னேன். கண்கள் பனிக்க ஓடிவந்து கட்டிக்கொண்டார். அப்பா, அம்மாதான் இறந்துவிட்டார்கள். அதுதான் வருத்தமாக இருக்கிறது’’ என்று நெகிழ்கிறார் குணசேகரன்.

இவரது அண்ணன் ராஜகோபால் கூறும்போது, “எங்கள் அப்பாவின் சாயலிலேயே இருந்தார். நடையும் அவரைப் போலவே இருந்தது. அதனால், எளிதில் அடையாளம் கண்டுகொண்டோம்’’ என்றார்.

படம்: ச.கார்த்திகேயன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x