Published : 02 Dec 2017 09:01 AM
Last Updated : 02 Dec 2017 09:01 AM

‘அல்லாதான் என்னை கருணைகொண்டு கேட்க வைக்கிறார்’: ஜோதிடம் சொல்லும் மத்தம்பாளையம் பாயம்மா

பெ

ரும்பாலும் இந்துக்கள் தான் ஜோதிடம், ஜாதகம் இவைகளை பெரிதும் நம்புவார்கள். இதனால், ஜோதிடம் கணிப்பவர்களும், பார்த்து பலன் சொல்பவர்களும் பெரும்பாலும் இந்துக்களாகவே இருப்பார்கள். இப்படியிருக்க, முஸ்லிம் பெண்மணி ஒருவர் இந்துக்களின் நம்பிக்கைப் படி, ஜாதகம் பார்த்து ஜோதிடம் சொல்கிறார் என்று கேள்விப்பட்ட போது சற்று வியப்பாகத்தான் இருந்தது!

மத்தம்பாளையம் பாயம்மா

தினமும் ஐந்து வேளை தொழுகிறார் ஷாபிருன்னிசா. நாளும் குர் - ஆனில் நான்கு வரியையாவது வாசிக்க மறந்ததில்லை இவர். இப்படி, இஸ்லாம் மார்க்கத்தை முழுகையாக கடைபிடிக்கும் இவர், அச்சு அசலாய் இந்துமத சம்பிரதாயங்களைக் கற்றுத் தேறியவர் போல் ஜோதிடம் கணித்து பலா பலன்களைச் சொல்லி அசத்துகிறார்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 25-வது கிலோ மீட்டரில் இருக்கிறது மத்தம்பாளையம். இங்கே, பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஜோசியம் பார்க்கிறாங்களே பாய் அம்மா.. அவங்க வீடு எங்க இருக்கு?” என்று கேட்டால், “இப்படியே மேற்கால 3 கிலோ மீட்டர் போனா கட்டாஞ்சி மலையடிவாரம் வரும். அங்க இருக்கிற தோட்டத்துல தெரியுற சாளை வீடுதான் பாயம்மா வீடு” என்று சிறுபிள்ளைகூட அழகாய் வழிகாட்டி விடுகிறது.

“வாங்க, மோர் சாப்பிடுங்க. ஜாதகம் பார்க்கணுமா.. பொருத்தம் பார்க்கணுமா.. ஏற்கெனவே போன்ல புக் பண்ணிருக்கீங்களா..?” என்று கேள்விகளை அடுக்குகிறார் பாயம்மா என்றழைக்கப்படும் 62 வயது ஷாபிருன்னிசா. பத்திரிகையிலிருந்து வருகிறோம் என்றதுமே நம்மிடம் பேசத் தயங்கினார். வெகுநேரம் போராடித்தான் அவரைப் பேசவைத்தோம்.

மார்க்கத்துக்கு எதிரானது அல்ல

“நான் செய்யும் இந்தத் தொழில் முஸ்லிம் மார்க்கத்துக்கு எதிரானது அல்ல. ஆனா சிலபேர், இது மார்க்கத்துக்கு எதிரான காரியம்னு தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க. எனக்கு ரெண்டு பசங்க; ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. என்னோட கணவர் அனீர்ஜான் 8 மாசம் முன்னாடி இறந்துட்டாங்க. மூணு பிள்ளைங்களுக்கு நிக்காஹ் ஆகிருச்சு. இன்னொரு புள்ளைக்கும் நிக்காஹ் செஞ்சுவச்சுட்டு ஹஜ்ஜுக்குப் போகலாம்னு இருக்கேன். அதுக்கப்புறம் ஜோசியம் பார்க்கிறதா இல்லை” என்று சொன்னவர், தான் ஜோதிடம் பார்க்க வந்த கதையை விவரித்தார்.

 

 

 

கோவையில மணிக்கூண்டுக்கு பக்கத்துல எங்க வீடு. அங்கருக்கிற கத்தோலிக்க சர்ச் கிட்ட எங்கப்பா புத்தகக் கடை வெச்சிருந்தார். கூடவே, நகைகளுக்கான கல் வியாபாரம் செஞ்சவர், ஜாதகம், கைரேகை, சித்த வைத்தியம்ன்னு தனக்குத் தெரிஞ்ச வேலைகளை எல்லாம் பாத்துட்டு இருந்தார். கஷ்டம்னு வர்றவங்கள ஆறுதலா நாலு வார்த்தையாச்சும் பேசி அனுப்பணும்கிறது அப்பாவோட கொள்கை. எங்க அப்பாவுக்கு தாரம் மூணு. நான் மூணாம் தாரத்தோட கடைசிப் புள்ள. நான் படிச்சது அஞ்சாப்புத்தான். ஆனா, அப்பா ஜோதிடம் சொல்றப்ப பக்கத்துல உக்காந்து ஆர்வமா கவனிப்பேன்.

12 வயசுல ஜாதகம் பார்த்தேன்

‘ஜோதிடம்கிறது மத்த தொழில் மாதிரி இல்ல. வான சாஸ்திரம், பூமி சாஸ்திரம் இதெல்லாம் கத்துக்கிற மனப் பக்குவம் இருந்தால் தான் ஜோதிடம் சொல்ல முடியும்’னு சொன்ன எங்க அப்பா, அந்த மனப் பக்குவம் எனக்கு இருக்கிறதா சொல்லி சாஸ்திரங்களைப் படிக்கச் சொன்னார். கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், மகாபாரதம் இதையெல்லாம்கூட படிக்க வெச்சார். அப்பா சொல்லிக் குடுத்ததை வெச்சு, 12 வயசுலயே நான் ஜாதகம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஜாதகம், ஜோதிடம்னு இருந்தாலும் நானும் அப்பாவும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டு சற்றும் விலகியதில்லை.

 

நல்ல இடத்துலதான் என்னைய கட்டிக் குடுத்தாங்க. ஆனா, கெட்ட நேரம் எங்கள நொடிக்க வெச்சிருச்சு. அதனால, அப்பா வாங்கிப் போட்டுருந்த இந்த பூமியைப் பாத்துக்கிறதுக்கு என் கணவரை இங்க அனுப்பி வெச்சார். அவர மட்டும் இங்க தனியா விட்டுட்டு எனக்கு டவுன்ல இருக்க இஷ்டமில்ல. அதனால, நானும் இங்கயே வந்துட்டேன். இங்க வந்து முப்பத்திரண்டு வருசம் ஆகிருச்சு. இங்க தோட்டத்தைப் பார்த்துக்கிட்டும் ஆடு, மாடுகளை மேய்ச்சுக்கிட்டும் காலத்தைக் கடத்தியாச்சு.

இங்க தோட்ட வேலைக்கு வர்றவங்க, என்கிட்ட தங்களோட கஷ்டங்களச் சொல்லிப் புலம்புவாங்க. அப்ப, அவங்களோட ஜாதகத்தைக் கொண்டுட்டு வரச் சொல்லி பார்ப்பேன். அதுல இருக்கிற பலா பலன்களை பார்த்துட்டு, அவங்களுக்கு நல்லதா நாலு வார்த்தை சொல்லுவேன். அதைக்கேட்டுட்டு நம்பிக்கையோட போவாங்க. நான் சொன்னது நடந்துட்டா அவங்க நாலு பேருக்கிட்ட சொல்லுவாங்க. அவங்களும் என்னைத் தேடி வருவாங்க. இப்படியே சேதி பரவித்தான் இப்ப இங்க, மில் முதலாளிகள், சங்கத் தலைவர்கள்னு வந்துட்டு இருக்காங்க.

முதலில் எனக்கு அல்லா

இதையெல்லாம் கேள்விப்பட்டு எங்க ஜமாத்துல இருந்து என்கிட்ட பேசினாங்க. இது மார்க்கத்துக்கு எதிரானதுன்னும் சிலர் சொன்னாங்க. அவங்கட்ட, ‘இது நிச்சயம் நம்ம மார்க்கத்துக்கு எதிரானதில்லை. நான் யாருக்கும் தேடிப்போய் ஜாதகம் பார்க்கல; மாய, மந்திரமும் செய்யுறதில்லை. ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்லுதோ, அதை மட்டும்தான் ஜனங்களுக்குச் சொல்றேன்’ன்னு சொன்னேன்.

 

 

இதைக் கேட்டு அவங்களும் சமாதானம் ஆகிட்டாங்க” என்று சொன்னவர் நிறைவாக, “முதலில் எனக்கு அல்லா தான். அவர்தான் என்னை இந்த மலங்காட்டில் உட்கார வெச்சிருக்கார். இங்கிருக்கிற ஜனங்களோட கஷ்டத்தை அவர்தான் என்னைக் கருணை கொண்டு கேட்க வைக்கிறதா நான் நம்புறேன். இந்த மலையடிவாரத்துல உட்கார்ந்தால் தான் உனக்குச் சாப்பாடுன்னு அவரே எனக்கு இங்கே வழிகாட்டிவிட்டதா நினைக்கிறேன்” என்று சொல்லி நமக்கு விடை கொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x