Published : 31 Dec 2017 07:10 PM
Last Updated : 31 Dec 2017 07:10 PM

யானைகளின் வருகை 109: சித்ரவதைப்பட்ட சிங்காரா...

ஒரு முறை முன்னணி நடிகர் ஒருவரின் படப்பிடிப்பின்போது அதில் கலந்து கொள்ள ஒரு ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டதாம். அதை உடனடியாக பிடித்து வனத்துறையினர் லட்சக்கணக்கில் அபாரதம் விதித்துள்ளனர்.

அதேபோல் 1989-ம் ஆண்டில் வீரப்பனை பிடிப்பதற்கு இந்தப் பகுதியில் ஹெலிகாப்டரை பயன்படுத்த அரசு திட்டமிட்டது. அதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல 2002-ம் ஆண்டில் தொட்டபெட்டா மலைச் சிகரத்தை சுற்றுலாவாசிகள் கண்டுகளிப்பதற்காக ஊட்டி டூ தொட்டபெட்டாவிற்கு ஒரு சுற்றுலா ஹெலிகாப்டர் விடப்பட்டது. அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்தப்பட்டது.

ஒரு முறை மசினக்குடிக்கு மேலாக இரண்டு கிளைடர் விமானங்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பறக்க விட, அதையும் கையும், களவுமாக பிடித்து லட்சங்களில் அபாரதம் விதித்தனர் வனத்துறையினர்.

இப்படிப்பட்ட வன உயிரின சென்சிடிவ் ஏரியாவில் அப்போதைய முதல்வரே ஹெலிகாப்டரில் வந்திறங்க, அதிகாரிகளே உறுதுணையாக நின்று பொக்கே கொடுக்க வன உயிரின ஆர்வலர்கள் உள்ளூர கொதித்துப் போயினர். அவர் அப்படி ஹெலிகாப்டரில் அங்கு வந்திறங்குவதற்கு முன்பே கண்டனக் குரல்கள் எழுப்பினர். ஆனால் எடுபடவில்லை. அன்றைய தினம் மதியம் பனிரெண்டு மணியளவில் சிங்காராவிற்கு வரும் முதல்வரை வரவேற்பதற்காகவும், விழாவில் கலந்து கொள்வதற்காகவும் அதிகாலையிலிருந்தே ஆட்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.

இதில் மசினக்குடிக்கு வந்த வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 5 ஆயிரத்தைத் தாண்டும். சிறப்பு அரசுப் பேருந்துகள் மட்டும் நூற்றுக்கணக்கில், மசினக்குடியிலிருந்து சிங்காரா செல்லும் பாதையில் (பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி) அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள், அவர்களுக்கு நெருங்கியவர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

மீதி வாகனங்களுக்கு தடை என்றாலும் அப்பாதையின் இருபுறமும் (6 கிலோமீட்டர் தூரமும்) ஆயிரக்கணக்கான வாகனங்களும் வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருந்தன. மக்கள் பொடிநடையாகவே சிங்காரா நோக்கிச் செல்ல, அவர்கள் குடித்த தண்ணீர் பாட்டில்கள், உபயோகப்படுத்திய பாலிதீன் பைகள் ஆங்காங்கே வீசப்பட்டு குப்பைக் கூளங்களாகின. அதைப் பார்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இவற்றை மான்களோ, காட்டு மாடுகளோ, வேறு வனவிலங்குகளோ தின்றால் என்ன ஆகும் என்று கவலைப்பட்டனர்.

மசினக்குடிக்கு கோவையிலிருந்து ஹெலிகாப்டரில் வந்து, தொண்டர் குழாத்தையும் திரட்டி நின்று சிங்காராவில் உரையாற்றின ஜெயலலிதா நகை முரணாக இந்த நீர்மின் திட்டத்திற்கு சூழல் காரணம் காட்டி முட்டுக்கட்டை போட முயன்றதாக அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக இருந்த ராஜாவை குத்திக் காட்டினார்.

அத்துடன், 'சுற்றுச்சூழல் பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல், கடல் வாழ் உயிரினங்களுக்கும் மதிப்பு வாய்ந்த, மதிப்பு வாய்ந்த பவளப்பாறைகளுக்கும் மற்றும் மீனவர்களின் வாழ்வுக்கும் ஒட்டுமொத்த அழிவை ஏற்படுத்தி, சேது சமுத்திர திட்டத்தை திமுக அமைச்சர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் அணிந்திருந்த அழகு முகமூடி கிழிந்து அவர்களின் அலங்கோல முகம்தான் நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரிந்து கொண்டு இருக்கிறது!' என உணர்ச்சி பொங்கிடப் பேசினார் அவர்.

இதைக் கேட்டு, 'நம்ம ஊருக்கு வந்து இங்கே வரலாறு காணாத மாபெரும் சுற்றுச்சூழல் கேட்டை ஏற்படுத்திவிட்டு நம்ம அமைச்சரையே அசிங்கப்படுத்த விட்டு போகிறாரே முதல்வர்!' என்று உள்ளூர் திமுகவினர் பொங்கி விட்டார்கள். அதில் திமுக நீலகிரி மாவட்ட செயலாளர் இளித்துறை ராமச்சந்திரன் முதல்வருக்கு எதிராக நீண்ட ஓர் கண்டன அறிக்கையே வெளியிட்டார். 'இந்த சுரங்கப்புனல் மின் நிலையத்தில் ஒரு மணி நேர விழா நடத்த மூன்று கோடி ரூபாய் அரசுப் பணம் விரயம் செய்யப்பட்டுள்ளது. கிளைடர், ஹெலிகாப்டர் போன்ற வான ஊர்திகள் தாழ்வாகப் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்த வனப்பகுதி மீது முதல்வரே ஹெலிகாப்டரில் பறந்து வந்து இறங்கியிருக்கிறார். இது சட்ட மீறல்!' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்பகுதி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ''இந்த மசினக்குடி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எந்த அளவு வனவிலங்குகள் நிறைந்த பகுதி என்பது அனைவருக்குமே தெரியும். அந்த இடத்தில் இப்படியொரு விழா நடத்தக்கூடாது; முதல்வரே ஆனாலும் ஹெலிகாப்டரில் வரக்கூடாது. அது வனவிலங்குகளின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்றெல்லாம் அதிகாரிகளிடம் எடுத்து சொன்னோம். மனுவும் கொடுத்தோம் அதற்கு கட்சிக்காரர்களிடம் மிரட்டல் வந்ததே ஒழிய, அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை!'' என்று வருத்தம் தெரிவித்தனர்.

ஊட்டியிலிருந்து கல்லட்டி வழியாக மசினக்குடி (28 கிலோமீட்டர் தூரம்) வரும் சாலை மிகவும் குறுகலானது. மோசமானது. இந்த வழியே மட்டும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், தொண்டர்களை ஏற்றிய நூற்றுக்கணக்கான பேருந்துகள் (வழக்கமாக விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பேருந்துகள் இச்சாலையில் செல்லும்) பயணித்தன. இவ்வழியேதான் தெப்பக்காடு வனத்துறை வளர்ப்பு யானைகள் முகாமும், சுமார் 14 கிலோமீட்டர் நீள முதுமலை சரணாலயப்பகுதி சாலையும் உள்ளது. இங்கே உள்ள பகுதிகள் எல்லாமே யானைகள் வழித்தடங்கள். குறிப்பாக சாலையோரமாக அமைந்துள்ள மாயாறுக்கு மாலை நேரங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வரும். அவை எல்லாமே அன்று தொடர் வாகன சத்தம் கேட்டதால் மிரண்டு போய் தண்ணீர் குடிக்கவே வரவேயில்லை.

அதேபோல் தொண்டர்கள் வந்த பாதையில் எல்லாம் அவர்கள் உணவருந்திய பிளாஸ்டிக் தட்டுகள், மினரல் வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் விட்டுச் செல்லப்பட்டன. அவை வனவிலங்குகள் வயிற்றில் போனால் அதன் நிலை அதோகதிதான்!'' என்றெல்லாம் நீண்டதொரு அறிக்கை தயாரித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பவும் செய்தனர் நீலகிரி சுற்றுச்சூழல் அமைப்பினர் சிலர்.

இந்த விவகாரம் பற்றி வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வந்த பதில்தான் வேடிக்கையானது:

''வனப்பகுதிக்கு மேல் விமானமோ, ஹெலிகாப்டரோ பறப்பதற்கு தடை இருப்பதாக சொல்ல முடியாது. வனப்பகுதிகளில் அத்துமீறல் நடந்தால்தான் குற்றம். அப்படி கிளைடர் விமானத்தை வனப்பகுதியிலிருந்து கிளப்பி, வட்டமிட்ட வெளிநாட்டவர்களைத்தான் இதற்கு முன் பிடித்து, அபாரதம் போட்டிருக்கிறோம். சினிமா ஷூட்டிங் விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. முதல்வர் வருகையை பொறுத்தவரை ஹெலிகாப்டர் தரையிறங்கிய பகுதி தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதி. அங்கே அது இறங்க தடையேதும் இல்லை. தவிர சரணாலயப் பகுதிகளில் அன்றைக்கு துளி கூட சூழல் கேடு, இயற்கை சீர்கேடு ஏதும் நடக்கவேயில்லை!'' என்றனர்.

பொதுவாக விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ எங்கு சென்று முதல்வர் தரையிறங்கினாலும் அங்கே முக்கிய அமைச்சர்களும், அதிகாரிகளும் அவருக்கு வரவேற்பு அளித்து மலர்கொத்து கொடுப்பார்கள். அதனை புகைப்படம் எடுக்க பத்திரிகை புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப்படுவர். ஆனால் இந்த விழாவைப் பொறுத்தவரை இவையெல்லாம் முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

அதேபோல் மசினக்குடியிலிருந்து சிங்காரா வரை உள்ள வனப்பகுதி சாலையில் தனியாக நின்று, யார் எதைப் புகைப்படம் எடுத்தாலும், போலீஸாரால் அமுக்கப்பட்டனர். கோவை, ஊட்டியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகை புகைப்படக்காரர்கள் கூட, அப்பகுதியில் இறங்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை அதிகாரிகள்.

முதல்வர் புதிதாக அமைந்துள்ள நீர் மின் திட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றபோது போது கூட நிருபர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டனர். புகைப்படக்காரர்களுக்கு கட்டாயத்தடை போடப்பட்டது. ஏன் இப்படி? என்று கேட்டபோது, 'முதல்வர் வருகையை ஒட்டி சுற்றுச்சூழல் சீர்கேடு, அல்லது சட்ட மீறல், விதிமீறல் என்று புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் ஏதும் வெளிவந்து விடக்கூடாது என்பதற்குத்தான் இந்த ஏற்பாடு' என்றனர் அரசு அலுவலர்கள் சிலர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x