Published : 19 Dec 2017 03:02 PM
Last Updated : 19 Dec 2017 03:02 PM

யானைகளின் வருகை 102: இந்துத்துவா அரசியலான மான்கறி

 

11.10.2007-ம் தேதி. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இந்திரா நகர் பகுதியில் முகமது என்பவர் வீட்டில் மான்கறி இருப்பதாக வனத்துறைக்கு தகவல் எட்டியது. அவர்களும் அந்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தி அங்கு ஒரு பாத்திரத்தில் இருந்த பத்து கிலோ மான்கறியைப் பறிமுதல் செய்து முஜிபூர் ரஹிமானை விசாரணைக்கு கொண்டு சென்றார்கள். அவரோ, இப்ராஹிம் என்பவரை கை காட்டினார்.

இப்ராஹிம் ஓர் ஓட்டல் உரிமையாளர். 2004-ம் ஆண்டில் நடந்த ஒரு மான்வேட்டையில் ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் வேறு இருந்தார். வனத்துறையினர் தன்னைத் தேடி வருவதை அறிந்து அவர் நழுவி விட, அவர் வீட்டிலிருந்த அவரது 19 வயது மகன் பைசல்கானை வனத்துறையினர் பிடித்து விசாரித்தார்கள். பைசல் கொடுத்த தகவலின் பேரில் அந்த வீட்டுத் தோட்டத்தில் வாழை மரத்தடியில் பாலிதீன் பையில் போட்டு புதைத்து வைத்திருந்த 56 தோட்டாக்களை தோண்டியெடுத்தனர்.

இந்த தோட்டாக்களில் 6 தோட்டாக்கள் புதியவை. 14 தோட்டாக்கள் வெடிக்கப்பட்ட பின்பு, வெடிமருந்து நிரப்பப்படாமல் இருந்த வெற்றுத்தோட்டாக்கள். மற்ற 36 தோட்டாக்கள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு மீண்டும் வெடிமருந்து நிரப்பப்பட்டவை. இந்தப் பகுதி வனவிலங்கு வேட்டைக்காரர்கள் சுட்ட தோட்டாக்களை மீண்டும் எடுத்து, வெடிமருந்து நிரப்பி, அவற்றை பழையபடி பயன்படுத்துவது வழக்கம். அதன்படி பார்த்தால் 50 தோட்டாக்கள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த தோட்டாக்களில் ஒரு சில குறி தவறியிருந்தாலும், கணிசமான அளவில் அவை சுடப்பட்டு பல மான்களின் உயிரைக் குடித்திருக்கும் என்று கணித்தார்கள் வனத்துறையினர்.

முஜிபூர் ரகுமான், பைசல்கான் ஆகியோரை வழக்கமான பாணியில் வனத்துறையினர் விசாரித்ததில் கூவமூலா பகுதியில் மான்வேட்டைக்காகப் பயன்படுத்திய இப்ராஹிமின் மாருதி காரை பறிமுதல் செய்தார்கள். இந்த மான்வேட்டை தொடர்பாக குன்னூரை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் உறவினர் தலைமறைவாகி விட்டார். அவரின் தலைமறைவை முன்வைத்து விசாரித்ததில் அவருடனம் மேலும் ஒன்பது பேருக்கு மான்வேட்டையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பிடிபட்ட இருவரையும் சிறைக்கு அனுப்பிய வனத்துறையினர் இப்ராஹிம், அவர் அண்ணன் நசீர் ஆகியோர் உட்பட மான்வேட்டையை பிடிக்க தனிப்படையை முடுக்கி விட்டனர்.

அப்போதுதான் மேலும் ஓர் ஆச்சரியத் தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது. அதவாது மான்வேட்டையில் தேடப்படும் ஒன்பது பேர் கொண்ட கும்பல் ஒரு மினி லாரியைப் பயன்படுத்தி மான்வேட்டையாடி இருக்கிறது. இருவர் பிடிபட்டவுடன் அந்த கும்பல் அந்த மினி லாரியை மேட்டுப்பாளையம் கொண்டு போய் அங்குள்ள ஒரு பட்டறையில் பாடியை மாற்றியமைத்திருக்கிறது. அதன் பின்னர் அந்த கும்பல் திருப்பூர், அவிநாசி நீதிமன்றங்களில் சரண்டர் ஆக தயாராகி வருவதாகவும் வனத்துறைக்கு தகவல் எட்டியிருக்கிறது.

''மான் வேட்டையாடும் இந்த கும்பலுக்கு வனத்துறை அதிகாரி ஒருவரே உடந்தை. பந்தலூரில் மட்டும் இதேபோல் பத்து கும்பல்கள் மான்வேட்டையாடுகின்றன. அந்த வன அதிகாரி விடுமுறையில் போனதால்தான் அந்த 11-ம்தேதி நடந்த மான்வேட்டை சம்பவமே வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது!'' என்றெல்லாம் மக்களிடமும், அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் பேச்சு வர ஆரம்பித்து விட்டது. அதையடுத்தே பாஜக பெயரால் துண்டுப் பிரசுரங்கள் வெளியாகி பந்தலூரை ஒரு கலக்கு கலக்கி விட்டது.

அவர்கள் வெளியிட்ட நோட்டீஸில், ''ஒரு கடமான் எப்படியும் 200 கிலோ இறைச்சி வரும். ஆனால் 10 கிலோ இறைச்சியை மட்டுமே வனத்துறை பிடித்துள்ளது. மீதி இறைச்சி எங்கே? மான் தோல், மான் தலை, மான் கொம்புகள் எங்கே? எப்போதும் தோட்டாக்கள்தான் பிடிபடுகின்றன. துப்பாக்கிகள் எப்போது பிடிபடும்? இரண்டு பேரை மடக்கிப் பிடித்தால் மட்டுமே போதுமா? மீதி கும்பலை பிடிப்பது எப்போது?'' என்பன போல பல கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

மேலும் மிகப் பெரிய அரசியல் செல்வாக்குள்ள விவிஐபி குடும்பம் மான்வேட்டையில் ஈடுபட்டிருப்பதால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். மான்வேட்டைக் கும்பல்களை இப்படியே கண்டு கொள்ளாமல் விட்டால் வருங்காலத்தில் பந்தலூர் காடடுப்பகுதி தீவிரவாத கும்பலின் கூடாரமாக மாறி விடும்!'' என்ற எச்சரிக்கையும் அதில் இருந்தது.

இந்த விவகாரத்தில் இப்பகுதி விவசாயிகள் பேசும்போது, ''வனத்துறையினர் அசல் மான் வேட்டைக்காரர்களை விட்டுவிட்டு அவர்களின் பிள்ளைகளை (19 வயதுடைய மாணவர்களை) கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கு கோர்ட்டில் நிற்காமல் போவதற்கான தந்திரம் இது. இது காட்டில் சுள்ளி, விறகு பொறுக்குபவர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மீது கடுமையான வழக்குகள் போடும் வனத்துறை இந்த மான் வேட்டைக்காரர்கள் விஷயத்தில் மட்டும் கருணை காட்டுவதற்குக் காரணம் பணம்தான். இந்த வழக்கில் ஒன்பது பேருக்கு தொடர்பிருப்பதாக ஊரே சொல்லிக் கொண்டிருக்க, இரண்டே இரண்டு பேரை மட்டும் தலைமறைவு லிஸ்டில் காட்டியிருக்கிறார்கள்!'' என்றெல்லாம் பொங்கினர்.

இந்த பொங்குதல்கள் எல்லாம் வனவிலங்குகளின்பால் அக்கறை உள்ள சாதாரண மக்களிடம்தான் வெளிப்பட்டது. வேட்டைக்காரர்கள் இந்த சுற்றுவட்டாரத்தை தொடர்ந்து மான்வேட்டைக் காடாகவே ஆக்கிக் கொண்டேதான் இருந்தனர்.

யானைகளின் புகலிடமான முதுமலை, பந்திப்பூர், முத்தங்கா பகுதிகளில் இந்த மான்வேட்டைகள் மட்டுமா நடந்தது? வேட்டையர்களின் இம்சைக்கு கருங்குரங்குகளும், கரடிகளும் கூட ஆளாகின.

கூடலூர் அருகே உள்ளது ஆமைக்குளம் கிராமம். இங்குள்ள டேன்டீ (தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம்) எஸ்டேட் குடியிருப்புக்கு 2004-ம் ஆண்டு வாக்கில் இரண்டு கருமந்திகள் (கருங்குரங்குகள்) வந்து இருக்கின்றன. அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வழிதவறி வந்த இந்த மந்திகள் நீலகிரி லங்கூர் எனப்படும் அபூர்வ வகையைச் சேர்ந்தவை. பொதுவாக இவை மனிதர்கள் வாழும் இடத்தில் வசிக்காது. மனிதர்களைக் கண்டால் சிங்கவால் குரங்குகளை போல உயரமான மரங்களில் தாவி ஏறி விடும். 'வெடிப்பலா' போன்ற (பலாப்பழம் போன்ற சிறிய வகை பழம்) குறிப்பிட்ட பழ வகைகளை மட்டுமே சாப்பிடும். இந்த வெடிப்பலா மரங்கள் யானைகளுக்கும் உணவாகக் கூடியது.

இந்த கருமந்திகள் சமீபகாலங்களாக குறைந்து அருகியும் விட்டதற்குக் காரணம், இவை கேரளப் பகுதியில் நிறைய வேட்டையாடப்படுவதுதான். இதன் ரத்தத்தைப் பயன்படுத்தி தயாராகும் மருந்து பக்கவாதம், சரவாங்கி போன்ற வாத நோய்களை குணமாக்கும் என்ற மூட நம்பிக்கை மலையாள மூலிகை மருத்துவர்களிடம் பரவியிருந்தது. இதன் இறைச்சியை உண்டால் ஆயுள் கூடும். இளமை நிலைக்கும் என்கிற எண்ணம் மக்களிடமும் உள்ளது.

இதனால்தான் இவை வேட்டைக்கு குறி வைக்கப்பட்டன. அதையெல்லாம் உணராத டேன்டீ குடியிருப்பு பகுதி மக்கள் இந்த மந்தி ஜோடியைக் கண்டதும் படுகுஷியாகி, அதற்கு சாதம் போன்ற உணவு வகைகளை மட்டுமல்லாது, பல்வேறு பழங்களையும் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடக் கொடுத்துள்ளனர். மக்கள் விருந்தளித்த உணவுகளில் மயங்கிய கருமந்திகள் அதை சாப்பிட்டுவிட்டு அங்கேயே சுற்றித் திரிந்துள்ளன. அவை ஜோடியாக திரிந்த வரை ஒரு பிரச்சினையும் இல்லை.

ஆனால் எண்ணி ஒரு வருடம். ஜோடியில் ஒன்று காணாமல் போய்விட்டது. அதில் தன்னிலை பிறண்ட எஞ்சிய குரங்கு அந்த வழியில் தென்பட்டவர்கள் மீதெல்லாம் விழுந்து பிராண்ட ஆரம்பித்து விட்டது. அது நாளாக, ஆக உச்சகட்ட நிலைக்கும் சென்று விட்டது. ஆறு மாதங்களில் மூன்று பெண்களை கடித்து விட்டது. ஒரு பெரியவரையும் குதறிவிட்டது. பள்ளி சென்ற சில சிறுவர்களையும் துரத்தியிருக்கிறது. ஒரு சிறுவன் பல முனைகளில் குரங்கினால் கடிபட்டு மக்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கும் கொண்டு போனார்கள். முதலில் ஒரு சில பெண்கள் கடிபட்டபோதே இங்கு வசிக்கும் பொதுமக்கள் கருமந்தியை பிடித்து காட்டில் விடச் சொல்லியும் கோரிக்கை வைத்து வந்தனர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x