Published : 26 Dec 2017 15:52 pm

Updated : 27 Dec 2017 16:14 pm

 

Published : 26 Dec 2017 03:52 PM
Last Updated : 27 Dec 2017 04:14 PM

யானைகளின் வருகை 106: வனத்தீயை மூட்டுபவர்கள் யார்?

106

''முதுமலை வனச் சரணாலயத்தில் (அப்போது புலிகள் காப்பகமாக மாறவில்லை) வேட்டைத்தடுப்புக் காவலர்கள் (Anti Potching Watchers) மட்டும் 150 பேருக்கு மேல் இருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே இப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள். இவர்கள் பத்து பேர் வீதம் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு காடுகளின் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பப்படுவார்கள். வனவிலங்குகள் வேட்டையைத் தடுப்பதே இக்குழுக்களின் நோக்கம். இவர்களைப் பயன்படுத்தியே வேலையில்லாத பழங்குடிகளை தற்காலிகப் பணிக்கு வேலைக்கு எடுத்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் தீத்தடுப்புக் கோடுகளை போட வைக்கும்.


ஆனால் இந்த வருடம் அரசு கொடுத்த நிதி நிலைமை கருதி 10 முதல் 20 பேரை மட்டும் இந்த தற்காலிகப் பணிக்கு எடுத்தனர் அதிகாரிகள். அவர்களுக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாய். அதுவும் நான்கைந்து மாதங்களாக தரப்படவில்லை. வெளியே வேலையில்லாதவர்கள் நிறைய இருக்க, வேலை செய்தவர்களுக்கும் சம்பளம் வராத நிலையில், கோபப்பட்ட வனவர்களின் தூண்டுதலின் பேரில் அங்கங்கே இந்த நெருப்பு பற்ற வைக்கப்பட்டிருக்கிறது. பந்திப்பூர் (கர்நாடகா எல்லை) வயநாடு (கேரளா) வனப்பகுதியில் எந்தக் காட்டுத்தீயும் பற்றவில்லை. தமிழக வனத்தில் மட்டும் வனத்தீ மூண்டெழுகிறது என்றால் அதற்கு அதுதானே அர்த்தம்?'' என பொங்கினர் மசினக்குடியை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள்.

''இதற்கு முன்பு ஆறு வருடங்களாக முதுமலை வனப்பாதுகாவலராக உதயணன் இருந்து வந்தார். அவர் வேட்டைத்தடுப்புக் காவலர்களுகு்கும், பழங்குடிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களுக்கே பயன்படுத்தி வந்தார். அதனால் அவர்கள் வாழ்வு பொற்காலம் போல இருந்தது. அவர் மாறுதலாகிச் சென்ற பின்பு வந்த அதிகாரிகள் சுமார் இரண்டரை வருடகாலம் அந்த நிதியை விளையாட்டாய் விளையாடி விட்டனர்.

முதுமலை வனச்சரணாலயத்திற்குள் செம்மண், செங்கற்கள், மணல் போன்றவை கொண்டுவரவே கூடாது. ஆனால் புதிதாக வந்த அதிகாரியோ, பழங்குடிகளுக்கான நிதியைப் பயன்படுத்த முதுமலையில் செக்டேம்களாக (தடுப்பணைகள்) கட்டினார். அவையும் தரமில்லாமல் கட்டப்பட்டன. அதனால் உடைந்து அவை காணாமலும் போயின. அந்த செக்-டேம்களை எல்லாம் வனச்சரகர் ஒருவர்தான் தம் பினாமி பெயரில் டெண்டர் எடுத்தார். நன்றாக சாப்பிட்டார்.

அதில் பழங்குடியினர், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் வயிறுதான் எரிந்தது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டனர். அதற்குப் பிறகு அந்த வார்டன் மாற்றப்பட்டார். அடுத்து வந்த அதிகாரியாவது தம் பிழைப்புக்கு வழிவகை செய்வார் என எதிர்பார்த்தனர் பழங்குடியினர். அவர் வந்த நேரம் தமிழகத்தின் நிதி நிலவரமே சிக்கல். வரவேண்டிய நிதி வராததால் எதிர்பார்த்தபடியே யாரும் வேலையில் ஈடுபடவில்லை. வேலை செய்தவர்களுக்கும் சம்பள பாக்கி. அதில் எழுந்த வன்மம்தான் இந்த காட்டுத்தீ எழும்பியிருக்கிறது. இப்படி வனத்தீ எழும்பினால்தான் அதை ஆள்பவர்கள் கவனிப்பார்கள். வராத நிதியும் வரும் என்று அதிகாரிகள் சிலர் உசுப்பி விட்டதன் விளைவாகவே சில வன ஊழியர்களே இந்த வனத்தீயை மூட்டியிருக்கின்றனர்!'' என்றனர் முதுமலை சுற்றுப்பகுதி வாழ் மக்கள்.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில், ''பொதுவாகவே யானைகளுக்கான சீசன் கேரள வயநாட்டில். முதுமலையில் நீர்நிலைகள் வறண்டு விடுவதால் யானைகள், காட்டு மாடுகள் எல்லாம் அங்கு சென்று விட்டன. புலி, சிறுத்தை போன்ற பெரிய விலங்குகளும் அப்படியே இடம் பெயர்ந்து விட்டன. எனவே அவை தப்பித்தன. இந்த தீயில் சிக்கி இறந்ததெல்லாம் அரிய வகை பாம்புகள், புழு, பூச்சிகள், உடும்பு போன்றவையே!'' என சொல்லி வேதனைப்பட்டனர் அவர்கள்.

சரி, இந்த செயற்கை வனத்தீ முதுமலையில் மட்டுமா ஏற்படுத்தப்பட்டது. அதை விட அதீதமாய் கூடலூர், நாடுகாணி ஜீன்புல் தாவரவியல் ஆராய்ச்சி மையத்திலும் ஏற்படுத்தப்பட்டது. அதன் உச்சபட்ச வெளிப்பாடு 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்டது. அந்த சமயம் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அறிவித்திருந்தார். அதையொட்டி உலகத் தரத்திலான தாவரவியல் பூங்கா ஒன்றை மாநாடு நடக்க இருக்கும் கோவையில் அமையவும் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதையொட்டி ஏற்கெனவே கூடலூரில் இருக்கும் தாவரவியல் பூங்காவையே காப்பாற்ற வழியில்லை. புதிதாக ஒரு தாவரவியல் பூங்கா எதற்கு?'' என்றும் கூட சூழலியாளர்கள் கேள்வி எழுப்பி சர்ச்சை கிளப்பினர்.

எப்படி?

கூடலூர் நாடுகாணிப்பகுதியில் இன்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது ஜீன்புல் வனத் தாவரவியல் ஆராய்ச்சி மையம். வனத்துறையின் கட்டுப்பாட்டில் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இயங்கும் இந்த மையத்தில் அரிய வகைத் தாவரங்கள், மூலிகைச் செடிகள், ஆர்க்கிட் மலர்கள், பெரணிச் செடிகள் உள்பட பல்வேறு இனத்தாவரங்கள் அதன் மரபணுக்களைக் கொண்டு உருவாக்கி வளர்க்கப்படுகின்றன.

இதற்காக இங்கே திசு கல்ச்சர் பரிசோதனைக்கூடம், பசுமைக்குடிகள், பல்வேறு இன மூங்கில்கள், பதப்படுத்தப்பட்ட வனவிலங்குகளின் உடற்பகுதிகள் வைக்கப்பட்ட மியூசியம் போன்றவை உள்ளன. அரிய வகை தாவரங்களை வளர்க்க, 'மிஸ்ட்' அறையும் (மூடுபனி அறை) அங்கு செயற்கை மேகங்களும் உருவாக்கப்பட்டு நாற்றுகள் வளர்க்கப்படுவது இதன் தனிச் சிறப்பு. 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இம் மையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பில்தான் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. 5 ஏக்கரில் கட்டிடங்கள், எஞ்சிய சுமார் 545 ஏக்கர் நிலம் புதர்காடாகவே உள்ளது.

இந்த புதர்காட்டின் எல்லையில் நில ஆக்கிரமிப்பாளர்கள் சிலரின் விவசாய நிலங்களும் உள்ளன. இந்தப் பகுதியில் கம்பிவேலி, மின்வேலிகள் இடப்பட்டிருந்தாலும் யானைகள் அவற்றை உடைத்துக்கொண்டு அடிக்கடி உள்ளே நுழைந்து ஆய்வகங்களை ஒரு வழி செய்வதும் வழக்கம். தவிர ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வந்து விட்டால் போதும். இந்த புதர்காடுகள் திடீர், திடீர் என தீப்பற்றிக் கொள்ளும்.

ஆரம்பத்தில் இது வேனிற்காலத்தில் ஏற்படும் காட்டுத்தீ என்றே எல்லோரும் நம்பி வந்தார்கள். ஆனால் வனத்துறையினர் காட்டும் கடுமையான கெடுபிடி காரணமாக இது நில ஆக்கிரமிப்பாளர்களே வைக்கும் தீ என்பது பின்னர்தான் தெரிய வந்திருக்கிறது. இந்த புதர்காடுகள் 2007-ம் ஆண்டில் ஐம்பது ஏக்கருக்கு மேல் எரிந்து சாம்பலானது. மரபியல் பரிசோதனை மூலமாக உருவாக்கப்பட்டு நடப்பட்டிருந்த நாற்றுகளும் கருகிப் போயின. அந்த தீயை பல நாள் போராட்டத்திற்கு பின்தான் அணைத்தனர் வனத்துறையினர். அதற்கடுத்த ஆண்டு இங்கே வனத்தீ ஏற்படுமோ என கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாக கண்காணித்தனர் வனத்துறையினர். அப்படி எதுவும் அப்போது நடைபெறவில்லை.

ஆனால் 2010-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி வனத்துறையினர் கண்ணயர்ந்து விட்டனரா? தெரியவில்லை. அப்போது இந்த வனத் தாவரவியல் மையத்தின் நட்ட நடுவில் பற்றிக் கொண்ட தீ 20 ஏக்கருக்கு பரவியது. அதிலிருந்த அரிய வகை மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாகி விட்டன. அதை விட வேகமாக வேறு தகவல்களும் பரவின.

''இந்த தீ விஷமிகள் சிலரால் ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பகுதியை புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக வனத்துறை அறிவித்திருப்பதால் புதிய கட்டிடங்களை எழுப்பவோ, புதிய நிலங்கள் வாங்கவோ முடியாது. அந்த வெறுப்பில் இது நில ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் வைத்த தீ!'' என்றனர் ஒரு சாரார்.

இன்னொரு சாரரோ, ''இங்குள்ள பொன்னூர், தேவாலா பகுதிகளில் தங்கத் தாது வெட்டியெடுப்பவர்களை வனத்துறையினர் தடுப்பதால் அந்த ஆத்திரத்தில் அவர்கள் மூட்டி விட்ட தீ இது!'' என்றனர்.

ஆனால் நாடுகாணிப்பகுதி பொதுமக்களோ, ''இங்கு வனத்துறையை தவிர மக்கள் யாரும் இருக்கக்கூடாது. மரக்கடத்தல் மாஃபியாக்களுக்கும் தங்களுக்கும் இருக்கும் உறவை மக்கள் யாரும் பார்த்து கண் காது மூக்கு வைத்துவிடக்கூடாது. அதனால் வனத்துறையினர் சிலரே இப்படி தீ வைத்துவிட்டு அந்தப் பழியை எங்கள் மீது சுமத்தி எங்களை விரட்டப் பார்க்கிறார்கள். மேலும், தீ விபத்துக்குப் பின் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடும் கிடைக்கும் என்றும் வனத்துறையினர் எதிர்பார்க்கிறார்கள். அதுதான் இங்கே கோடை காலங்களில் எல்லாம் தவறாமல் காட்டுத்தீ எழுந்து விடுகிறது!'' என கருத்துக்கள் தெரிவித்தனர்.

ஆனால் கூடலூர் பகுதி சூழலியாளர்கள் கருத்து வேறாக இருந்தது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

 

தவறவிடாதீர்!    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x