Last Updated : 09 Dec, 2017 01:52 PM

 

Published : 09 Dec 2017 01:52 PM
Last Updated : 09 Dec 2017 01:52 PM

காசநோய்: தெரிந்த கேள்விகள், தெரியாத பதில்கள்!

காசநோய் குறித்த தொடர் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், தீராக சந்தேகத்துடனும், விடை தெரியாத கேள்விகளுடனும் பொதுமக்கள் காசநோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தனக்கு காசநோய் இருப்பது தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் காசநோய் குறித்த தெரிந்த கேள்விகள், தெரியாத பதில்கள் என்ற அடிப்படையில் பொதுநல மருத்துவர் கு.கணேசனிடம் 20 கேள்விகளை முன்வைத்தோம்.

காசநோய் பரம்பரை நோயா? தொற்று நோயா?

பரம்பரை நோயல்ல; தொற்றுநோய்.

காசநோய் ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு பரவும்?

ஒரு காசநோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார். காசநோய்க் கிருமிகள் நோயாளியின் நுரையீரலில் வசிக்கும். நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் இந்தக் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போதுகூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

காசநோய் கிருமிகள் எங்கெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும்? முடி, நகத்தில் தாக்குமா?

முடி, நகத்தைத் தாக்காது. காசநோய் கிருமிகள் நுரையீரல், நுரையீரல் உறை, குடல், குரல்வளை, எலும்பு, முதுகுத் தண்டுவடம், சிறுநீரகம், கண், தோல், மூளை, மூளை உறை, விந்துக்குழல், கருப்பை இணைப்புக் குழல், நிணநீர்ச் சுரப்பிகள் என்று பல உறுப்புகளைப் பாதிக்கின்றன.

காசநோய்க்கான அடிப்படைக் காரணங்கள்?

காசநோய்க் கிருமிகள்‘மைக்கோபாக்டீரியம் டுயூபர்குளோசிஸ்’ ( Mycobacterium tuberculosis ) எனும் பாக்டீரியாக் கிருமிகள் பாதிப்பதால் காசநோய் வருகிறது. வழக்கத்தில், காற்றோட்டம் சரியில்லாத வீடுகளிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களிலும், பஞ்சாலை, நூற்பாலை, சிமெண்ட் ஆலை, பீடித்தொழில் இடங்கள், சுரங்கங்கள், ரப்பர் தோட்டம், போன்றவற்றில் இந்தக் கிருமிகள் அதிக அளவில் வசிக்கும். அப்போது அங்கு வாழும் மக்களைத் தாக்கி காசநோயை ஏற்படுத்தும்.

ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டதை எப்படி அறியலாம்?

ஒருவருக்குக் காசநோய் உள்ளதா என்பதை அவருடைய அறிகுறிகளே தெரிவித்துவிடும். என்றாலும், நோயை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை, மேண்டோ பரிசோதனை, சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் போன்றவை உதவும். இவற்றில் சளிப் பரிசோதனை முக்கியமானது. சளியில் காசநோய்க் கிருமிகள் இருக்குமானால் அது காசநோயை 100 சதவீதம் உறுதி செய்யும்.

2010-ல் புதிதாக ஜீன் எக்ஸ்பெர்ட் (Gene Xpert) பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டது. சளியில் ஒரு சில காசநோய் கிருமிகள் இருந்தாலும் நோயைக் காட்டிக்கொடுத்துவிடும். மேலும், இந்தக் கிருமி காசநோய்க்குத் தரப்படும் முதல்நிலை மருந்தான ரிஃபாம்பிசின் மருந்துக்குக் கட்டுப்படுமா, கட்டுப்படாதா என்பதையும் தெரிவித்துவிடும். இதன் மூலம் சிகச்சைக்கான கால அளவு, செலவு போன்றவை குறையும். மருந்துகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வருவதைத் (Drug resistance) தடுத்துவிடலாம்.

காசநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

காசநோய்க் கிருமிகள் உடலில் எந்த உறுப்பைப் பாதிக்கிறதோ அதைப் பொறுத்து அறிகுறிகள் அமையும். பொதுவாக, இந்த நோய் நுரையீரல்களையே அதிக அளவில் பாதிப்பதால் நுரையீரல் காசநோய்க்குரிய (Pulmonary tuberculosis) அறிகுறிகளைப் பார்ப்போம். மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கின்ற இருமல், சளி, சளியில் ரத்தம், மாலை நேரக்காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைவது, களைப்பு, சுவாசிக்க சிரமம் ஆகியவை இதன் பிரதான அறிகுறிகள்.

காசநோய் யாருக்கு வர வாய்ப்பு அதிகம்?

புகை பிடிப்பவர்கள், ஊட்டசத்துக் குறைவு உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், வறுமையில் வாடும் ஏழைகள், அறியாமையில் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், காசநோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகுபவர்கள் ஆகியோரை இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது.

காசநோய் - சேகரிக்கப்படும் நிதி
  • காசநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகச் சேகரிக்கப்படும் நிதியில் 74% இந்தியாவிலிருந்தும், 26% சர்வதேச நாடுகளிலிருந்தும் பெறப்படுகிறது.

வீட்டு விலங்குகளால் காசநோய் பாதிப்பு ஏற்படுமா? எப்படி?

ஏற்பட வாய்ப்பிருக்கிறது. விலங்குகளின் இறைச்சி வழியாக காசநோய் பரவாது. பால் மூலம் பரவலாம். பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் போன்றவற்றின் மூலம் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது

ஒரு முறை காசநோய் வந்தவருக்கு மீண்டும் அதே நோய் வருமா?

வரலாம். முதலில் சிகிச்சை பெறும்போது, அரைகுறையாகப் பெற்றிருந்தால், மருந்தை விட்டு விட்டு சாப்பிட்டிருந்தால், உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்திருந்தால், மறுபடியும் காசநோய் தொற்றுள்ளவருடன் பழக நேர்ந்தால் ஒரு முறை காசநோய் வந்தவருக்கு மீண்டும் அதே நோய் வரலாம்.

எய்ட்ஸ்நோய்க்கும் காசநோய்க்கும் தொடர்பு உள்ளதா?

காசநோய்க்கும் எய்ட்ஸ் நோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் காசநோய்க் கிருமிகள் இவர்களை எளிதில் தாக்கிவிடும். அதே நேரத்தில் காசநோய்க்கான மருந்துகளும் இவர்களுக்கு வேலை செய்யாது. இதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மரணம் விரைவில் வந்து சேரும்.

காசநோய்க்கும் ஆஸ்துமாவுக்கும் தொடர்பு உள்ளதா?

இல்லை. காசநோயை நீடிக்கவைத்து, நுரையீரல்கள் கெட்டுப்போன பிறகு சிகிச்சை பெறுபவர்களுக்கு, நோய் குணமானாலும், நுரையீரலில் பாதிப்பு குறைவது சிரமம். அப்போது நுரையீரலின் சுவாசத்திறன் குறையும். அப்போது ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகள் தோன்றும். அது ஆஸ்துமா என்று பலரும் தவறாக எண்ணிக்கொள்வார்கள். அது நாட்பட்ட சுவாசத்தடை நோய் (COPD_ Chronic obstructive pulmonary disease) என அழைக்கப்படும்.

மன அழுத்தம் இருந்தால் காசநோய் வருமா?

மன அழுத்தத்தால் காசநோய் வராது. ஆனால், நோய் குணமாவதை மன அழுத்தம் தடுக்கும்.

யோகா காசநோயை குணப்படுத்துமா?

யோகா மட்டுமே காசநோயைக் குணப்படுத்தாது. சுவாசத்திறனை அதிகப்படுத்தும் பிராணாயாமம் போன்ற யோகப்பயிற்சிகளை மேற்கொண்டால், நோயின் தன்மையிலிருந்து விரைவில் விடுபடலாம். ஆகவே, யோகாவை ஒரு துணை மருத்துவமாக கொள்ளலாம்.

காசநோயாளிகளுக்கு ஓய்வூதியம்
  • உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கு சிகிச்சை காலம் முழுவதும் மாதம் ரூ.1000 ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

 

  • அரசிடம் இருந்து நிதியுதவி பெற்றுவந்த காசநோயாளிகள், காசநோய் சிகிச்சை மையங்கள், சுகாதார ஊழியர்கள் இனியும் தொடர்ந்து அந்த நிதியுதவியைப் பெற ஆதார் அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீத்தாப்பழம் காசநோயை குணமாக்குமா?

சீத்தாப்பழம் காசநோயை குணமாக்காது. ஆனால் காசநோயாளிகளுக்கு நல்லதொரு சத்துப்பொருள்.

காசநோய் வராமல் தடுக்க திராட்சை உதவும் என்று சொல்லப்படுகிறதே, உண்மையா?

இதில் உண்மையில்லை.

காசநோயால் மரணம் நிகழுமா? ஏன்?

ஆம். காசநோய் முற்றிய நிலையில், இருமலில் ரத்தம் கடுமையாக வெளியேறி மரணம் நிகழலாம். நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு, சுவாசிக்க முடியாமல் மரணம் நேரலாம். நோய் மூளை போன்ற மற்ற உறுப்புகளில் பரவி மரணம் நிகழலாம். மூளைக்காய்ச்சல் வந்து மரணம் நிகழலாம். காசநோயுடன் எய்ட்ஸ் நோய் வந்து மரணம் நிகழலாம்.

காசநோயாளிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைப்பது சரியா?

காசநோயாளிகளை ஒருபோதும் சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒதுக்கப்பட்டால், அதுவும் ஒரு நவீன தீண்டாமைச் செயலே.

காசநோய் தனிப்பட்ட பிரச்சினையா? சமூகப் பிரச்சினையா? பொதுப்பிரச்சினையா?

இது ஒரு சமூகப் பிரச்சினை. இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்கிறது. உலக காசநோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். இங்கு வருடத்துக்கு 22 லட்சம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய் குழந்தை முதல் முதியோர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு மற்றும் எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு இது வருகிற வாய்ப்பு மிக அதிகம்.

100

காசநோயால் பாதிக்கப்பட்ட 60% பேர் ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்?

அரசு மருத்துவமனைகளில் காசநோய்ப் பிரிவு என்று தனியாக ஒரு சிகிச்சைப் பிரிவு இருக்கிறது. காசநோயாளிகள் அங்குதான் சிகிச்சை பெற வேண்டும். அங்கு சென்று சிகிச்சை பெற்றால் தங்களுக்குக் காசநோய் இருப்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள் எனப் பயந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்கள் ஒருபுறம்.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மாத்திரை, மருந்துகளை வீட்டிற்கே வந்து கொடுப்பதும் உண்டு. மாத்திரை மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுகிறாரா என்று கண்காணிப்பதும் உண்டு. இதனால், ஊரில், தெருவில் உள்ள அடுத்தவர்களுக்கும் தெரிந்துவிடும் என்று கருதி, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதுண்டு.

முக்கியமாக, திருமண வயதில் உள்ள பெண்களுக்கு இந்த நோய் இருந்தால், அது வெளியில் தெரிந்தால், திருமணம் தடையாகலாம் எனப் பயந்தும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதுண்டு.

பல சமயங்களில் காசநோய்க்குள்ள மாத்திரை மருந்துகள் கிடைப்பது தடைபடும். இதனால் சிகிச்சை தடைபடும். இதைத்தவிர்க்கவும் சிலர் ஆரம்பத்திலிருந்தே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதண்டு.

காசநோய் ஆராய்ச்சி முடிவுகள்?

புதிய மருந்துகள், தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மருந்துகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு வருகிறது என்று கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். MDR TB நோயை இன்னும் விரைவில் கண்டறியவும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. காசநோய்க்கும் எய்ட்ஸ் மற்றும் வேறு தொற்றுகளுக்கும் உள்ள தொடர்பை அறியவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போதுள்ள தடுப்பு ஏற்பாடுகளைவிட சிறந்த தடுப்பு முறைகளைக் கண்டுபிடிப்பதிலும் ஆராய்ச்சியாளர்கள் முனைந்து செயல்படுகிறார்கள்.

* இந்தியாவில் காசநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கடந்த 2015 ஏப்ரலில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் தூதராக அமிதாப் நியமிக்கப்பட்டார்.

* கடந்த 2000-ம் ஆண்டில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் நடத்தி வந்தபோது, காசநோய்க்கு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமானது  குறிப்பிடத்தக்கது.

* காசநோயால் அதிகம் பெண்கள் இறப்பதால் அவர்களின் குழந்தைகள் அரவணைப்பு இல்லாமல் வளர்வதால் சமுதாயத்தை எதிர்மறையாக பார்க்கிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் முழுவதும் வறுமையில் தள்ளப்பட்டு வாட நேரிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x