Last Updated : 09 Dec, 2017 09:30 AM

 

Published : 09 Dec 2017 09:30 AM
Last Updated : 09 Dec 2017 09:30 AM

எங்கே இருக்கிறார்கள் லாடம் கட்டிகள்?- நலிந்துவிட்ட நமது இன்னொரு பாரம்பரியம்

வீன யுகத்தின் வளர்ச்சியில் பாரம்பரியமான நமது தொழில்களில் பலவும் மெலிந்து, நலிந்துவிட்டன. அதில் ஒன்றுதான் மாட்டுக்கு லாடம் கட்டும் தொழில். இப்போது, லாடம் கட்டுவது என்பது பெரும்பாலும் போலீஸ் ட்ரீட்மென்ட் பாஷையாக மட்டுமே இருக்கிறது!

மனிதனுக்காக மாடாய் உழைப்பவை காளை மாடுகள். கால்களைக் கட்டிப்போட்டு காளை மாடுகளுக்கு லாடம் கட்டுவதைப் பார்க்கும்போது அவைகளை ஏதோ சித்திரவதைக்கு உள்ளாக்குவது போல் தெரியும். ஆனால், மாட்டுக்கு லாடம் கட்டுவது ஜீவகாருண்யத்தை போற்றும் செயல் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் விளங்கும்.

லாடம் இல்லாவிட்டால் அபராதம்

கல்லிலும், முள்ளிலும் பாரம் ஏற்றிய வண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகளுக்கு அதன் கால்கள் தேய்ந்துவிடாமலும் கால்களில் ஏதாவது குத்தி காயம் ஏற்பட்டுவிடமாலும் இருக்க இரும்பால் தயாரிக்கப்பட்ட லாடம் பொருத்தப்படுகிறது. புரியும்படியாக சொல்வதானால், மாடுகளுக்கு நம்மைப் போல செருப்பு, ஷூ அணிந்து நடக்கத் தெரியாது. அதற்காக அவற்றின் கால்களில் நிரந்தரமாக ஒரு காலணியை பொருத்திவிடுவதையே லாடம் கட்டுதல் என்கிறோம்.

மாட்டு வண்டிகள் பிரதான போக்குவரத்து வாகனமாக இருந்த அந்தக் காலத்தில், போலீஸார் அவ்வப்போது மாட்டு வண்டிகளை நிறுத்தி மாடுகளை சோதிப் பார்கள். அப்போது, மாடுகளின் கால்களில் லாடம் இல்லை என்று சொன்னால் அபராதம் விதித்து விடுவார்கள். இதுபோல், மாடுகளை விரட்ட வண்டிக்காரர் கையில் தார்க்குச்சி வைத்திருந்தாலும் தண்டம் கட்டியாக வேண்டும்.

வாரம் ஒரு கிராமத்தில்..

இப்படியொரு சிஸ்டம் இருந்ததால் அப்போதெல்லாம் லாடம் கட்டிகளுக்கு ஏக கிராக்கியாக இருக்கும். கருக்கலில் வீட்டுக்கே போய் ஆளைப் பிடித்தால் தான் உண்டு. அப்போது, லாடம் கட்டும் தொழிலைச் செய்பவர்கள் வாரம் ஒரு கிராமத்தில் கேம்ப் அடிப்பார்கள். அன்று முழுவதும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அத்தனை காளைகளுக்கும் லாடம் கட்டிவிட்டுத்தான் ஊரைவிட்டுக் கிளம்புவார்கள். இதனால், லாடம் கட்டும் இடமே திருவிழாக் கூட்டமாய் இருக்கும்.

அந்தளவுக்கு அன்றைக்கு கிராமங்களில் வீட்டுக்கு வீடு மாடுகளும் மாட்டு வண்டிகளும் இருந்தன. ஆனால், இப்போது..? டாடா ஏஸ் உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் வருகை மாட்டு வண்டிகளை ஓரங்கட்டி விட்டன. இதனால் காளைமாடுகளின் தேவையும் வெகுவாகக் குறைந்து போனது. அதனால், கிராமங்களில் லாடம் கட்டுவதையும், லாடம் கட்டிகளையும் பார்ப்பது இப்போது அரிதிலும் அரிதாகிவிட்டது.

செம்பனார்கோவில் ராஜேந்திரன்

நமது பகுதியில் (போலீஸைத் தவிர!) லாடம் கட்டத் தெரிந்த யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். மயிலாடுதுறை அருகிலுள்ள செம்பனார்கோவிலைச் சேர்ந்த ராஜேந்திரன் சிக்கினார். கடந்த 25 ஆண்டுகளாக மாடுகளுக்கு லாடம் கட்டும் ராஜேந்திரனுக்கு இப்போது 50 வயதாகிறது. லாடம் கட்டிய வருமானத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் நல்லபடியாக கரைசேர்த்திருக்கிறார் ராஜேந்திரன்.

பெரிதாக வருமானம் இல்லாவிட்டாலும் இன்னமும் இந்தத் தொழில்தான் ராஜேந்திரனுக்கு கஞ்சி ஊற்றுகிறது. கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சுப்பிரமணியன் வீட்டுக் காளைகளுக்கு லாடம் கட்ட சாக்கு மூட்டையும் கையுமாய் போய்க் கொண்டி ருந்தவரை பின் தொடர்ந்தேன். போன வேகத்தில் மூட்டையைப் பிரித்து ஆபரேஷனில் இறங்கிவிட்டார்.

அவர் கொண்டு வந்திருந்த சாக்கு மூட்டையில் ஏராளமான லாடங்கள், அதை மாட்டின் காலடிக் குளம்பில் அடிப்பதற்கான் ஆணிகள், கனமான இரும்பு, சுத்தி உள்ளிட்ட சாதனங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் தனியாக பிரித்து வைத்தார். அடுத்ததாக, மாட்டை லாவகமாக மடக்கி கீழே படுக்க வைத்து, கால்களை நன்றாகப் பிணைத்துக் கட்டினார்.

ஜோடிக்கு 600 ரூபாய் கூலி

பிறகு, நடந்து தேய்ந்து பிசிறுதட்டிப் போயிருந்த கால் குளம்புகளை சீராக வெட்டி சரிசெய்தார். குளம்பு மட்டமானதும் அதற்கு பொருத்தமான லாடத்தை தேர்வுசெய்து அதை ஆணி கொண்டு காளையின் காலில் பொருத்தினார். இப்படி ஒரு மாட்டுக்கு லாடம் அடித்து முடிக்க அரை மணி நேரம் பிடித்தது. இப்படியே இன்னொரு மாட்டுக்கும் லாடம் கட்டி விட்டு, 600 ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு மூட்டையைக் கட்டினார் ராஜேந்திரன்.

அவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். “ஒரு நாளைக்கு ஒரு ஜோடியும் கிடைக்கும், இரண்டு ஜோடியும் கிடைக்கும். பல நாள் வேலையே இருக்காது. இதவிட்டா நமக்கு வேற வேலையும் தெரியாது. இந்த தொழில்ல நிரந்தர வருமானம் கிடையாது. மாட்டுக்காரங்க எப்பயாவது போன் அடிச்சுக் கூப்பிடுவாங்க. நானும் போய் லாடம் கட்டிட்டு வருவேன். இந்தத் தொழிலைப் பார்க்க இந்தப் பகுதியில எனக்குத் தெரிஞ்சு வேற ஆளுங்க யாரும் இல்லை. அதனால, நானே இந்தத் தொழிலை விடணும்னு நினைச்சாலும் மாடு வெச்சிருக்கிற சம்சாரிக விடமாட்டேங்கிறாங்க. நானும் இல்லைன்னா மாடுங்க பாவம்தான்” என்று மாடுகளுக்காக உண்மையாக பரிதாபப்பட்டார் ராஜேந்திரன்.

ஆறு மாசத்துக்கு மேல தாங்காது

தொடர்ந்து பேசிய அவர், “எல்லா மாடுகளுக்கும் ஈஸியா லாடம் கட்டிட முடியாது. அதுகட்ட உதை வாங்குறது, முட்டு வாங்குறதுன்னு ஆரம்பத்துல, நான் படாத அவஸ்தையெல்லாம் பட்டிருக்கேன். இப்ப புது மாடுக இல்லை. எல்லாமே நமக்குப் பழக்கப்பட்ட மாடுங்கிறதால சொன்னபடி கேட்கும்; நமக்கும் பெருசா கஷ்டம் இல்லை” என்றார்.

“முன்பெல்லாம் காளைகளுக்கு லாடம் கட்டுனா ஒரு வருசத்துக்குத் தாங்கும். ஆனா இப்ப, ஏகத்துக்கும் தார் ரோடா இருக்கதால ஆறு மாசத்துக்குள்ள லாடம் தேஞ்சு போய் கீழ விழுந்துருது” என்று சொன்ன வண்டிக்கார சுப்பிரமணியன், “லாடம் தேஞ்சு போயிட்டா ராஜேந்திரன் வந்து மறுபடியும் புதுசா லாடம் கட்டுற வரைக்கும் மாட்டை வண்டியில பூட்ட மாட்டேன். அது ஒரு மாசம் ஆனாலும் சரித்தான்” என்றபடி தனது காளை மாட்டை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார். அதுவும், அவர் சொல்வதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x