Published : 02 Dec 2017 04:42 PM
Last Updated : 02 Dec 2017 04:42 PM

முகவரி தேடும் முகங்கள் 1: என் முகம் போட்டு வந்த விளம்பரம் - அனுஷ்கா முருகன்

’’பல சமயம் யோசிச்சுப் பாப்பேன். வாழ்க்கை, நம்ம ஓட்ற காரை விட வேகமாப் போவுதுடா சாமீன்னு! தடதடன்னு எங்கியோ கொண்டு வந்து விட்ருச்சு. யாரோ கைப்பிடிச்சு கூட்டிட்டு வந்தது மாதிரி இருக்குது. அடுத்தடுத்த கியரைப் போட்டு நாமளும் ஒரு அழுத்து அதோடயே சேர்ந்து போயிடணும். என்ன சார் சொல்றீங்க?’’ என்று கேட்கிற இன்னோவா முருகன்... படிப்படியாகத்தான் முன்னுக்கு வந்திருக்கிறார்.

சினிமா ஷூட்டிங்கிறகு சாப்பாடு கொண்டு செல்லும் வாகனத்தை ஓட்டியவர், பிறகு நடிகர் நடிகைகளை அழைத்துக் கொண்டு வரும் வேலைக்கு உயர்ந்திருக்கிறார். சம்பளத்துக்கும் வாடகைக்குமாக வண்டி ஓட்டியவர், இப்போது சொந்தமாகவே கார் வாங்கி ஓட்டி வருகிறார். இவர் பெயரைச் சொன்னாலும் சினிமாவுக்குள் எவருக்கும் தெரியவில்லை என்பதுதான் வேதனை.

‘’பேரு என்னங்க பேரு. நம்ம முகத்தை மொத்த தமிழ்நாடுமே பாத்துருச்சு தெரியுங்களா... வேங்கை படத்துக்கு வண்டி ஓட்டிட்டிருந்தேன். படத்துல ஒரு டிரைவர் கேரக்டர் தேவைப்பட்டுச்சு. உடனே டைரக்டர் ஹரி சார், ‘முருகனைக் கூப்பிடுங்கப்பா’னு சொல்ல... போன்ல கூப்பிட்டு தகவல் சொன்னாங்க. அப்ப வண்டி ஓட்டிட்டிருந்தேன். எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. கூடவே காரும் ஓடலை. பத்துநிமிஷம் கழிச்சு நிதானத்துக்கு வந்தேன். வேங்கை படத்துல, தனுஷ் சார் வீட்டு கார் டிரைவரா நடிச்சிருப்பேன். ம்ஹூம்... அதை நடிச்சிருப்பேன்னு சொல்லக்கூடாது. ஸ்கிரீன்ல வந்துட்டுப் போவேன்னு சொன்னாத்தான் சரியா இருக்கும்’’ என்று கலகலவென ரசித்துச் சிரிக்கிறார் முருகன்.

‘’ஹரி சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வைச்சாங்க அனுஷ்கா மேடம். ‘நல்லாத் தெரியுமே’ன்னார். ‘போன படத்துல ஒரு வேஷம் கொடுத்தீங்க. இதுலயும் எதுனா ஒரு சான்ஸ் கொடுங்க சார்’னு கேட்டேன். ‘கொடுத்துட்டாப் போச்சு’ன்னார். அதன்படியே, சிங்கம் படத்துல, மொட்டை ராஜேந்திரனைப் பிடிக்கறதுக்கு படகுல சூர்யா போவார். அப்ப திடீர்னு, ‘படகுல போலீஸ் இருக்கு, தப்பிச்சிருங்க”ன்னு கத்துறது நானேதான். ஆனா இங்கே ஒரு சோகத்தையும் சொல்லியாகணும். இந்த ரெண்டு படங்களுக்கும் கேமிராமேனா இருந்த ப்ரியன் சாரோட மரணம், என்னை ரொம்பவே பாதிச்சுச்சு. அப்படியொரு மனிதர் அவர்

நல்லவங்களையெல்லாம் கடவுள் சீக்கிரமே கூட்டிக்கிறான், பாருங்க’’ என்று சொல்லிவிட்டு அமைதியாய், வெறித்தபடி இருந்தார். சிறிய மெளனம். கலைத்துவிட்டு அவரே பேசினார்.

‘’சரியாச் சொல்லணும்னா, சீமான் அண்ணன் ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்துல என்னை நடிக்கவைச்சிருப்பார். வடிவேலு அண்ணனை ஊரே துரத்துற சீன் இருக்குல்ல... அந்த ஊர்ல ஒருத்தனா நானும் ஓடிவருவேன். செம காமெடி போங்க!

இப்ப கூட ‘யட்சன்’ படத்தோட கேமிராமேன் ஓம் பிரகாஷ் சாருக்கு வண்டி ஓட்டிட்டிருந்தப்ப ஒருநாள் உதவி இயக்குநர்கிட்ட... ‘இது எதுனா நம்ம மூஞ்சி வர்ற மாதிரி வாய்ப்பு இருக்குமாண்ணா’ன்னு கேட்டேன். ‘ஒரு டிரைவர் கேரக்டர் இருக்கு, பாக்கலாம்’னு சொன்னார். அதேபோல வாய்ப்பும் கொடுத்தாங்க. ஆனா இதுல என்ன ட்விஸ்ட் தெரியுங்களா... படத்தோட கதையை மாத்தக்கூடிய கேரக்டரே என்னுதுதான். ஹீரோவை வண்டில ஏத்திக்கிட்டுப் போறதுக்குப் பதிலா கொலைகாரனை ஏத்திக்கிட்டு போயிருவேன். படத்தையும் ரசிகர்கள் ஏத்துக்கிட்டிருந்தாங்கன்னா... இன்னும் நல்லாருந்திருக்கும். நல்லபடம்’’ என்று சொன்னவர் சட்டென்று பதறிப்போய் தொடர்ந்தார்.

‘’பாத்தீங்களா... டைரக்டர் விஜய் சாரைப் பத்தி சொல்லவே இல்ல. இதுவரையிலான நான் பாத்தவங்கள்ல, அப்படியொரு மனிதர் அபூர்வம். அவரைப் பாக்க யாரு வந்தாலும், பேசி முடிச்சிட்டுக் கிளம்பும் போது, வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பி வைப்பார். தெருமுக்கு திரும்பற வரைக்கும் நின்னுப் பாத்துட்டு உள்ளே போவார். நல்ல மனுஷன்.

'தேவி' பட ஷூட்டிங் சமயத்துல தமன்னா மேடத்துக்கு வண்டி ஓட்டினேன். அப்பதான் டைரக்டர் விஜய் சார் பழக்கமானார். ஒளிப்பதிவாளர் திரு சார் பழக்கத்தின் மூலமா 'வனமகன்' வாய்ப்பு கிடைச்சுச்சு. ’என்ன முருகா... நல்லாருக்கீங்களா’’னு கேட்டார் டைரக்டர் சார். வனமகன் படத்துல ஹீரோயினுக்கு ஜூஸ் கொண்டுவந்து கொடுப்பேன். கோபத்துல தூக்கி வீசுவாங்க. அந்த சீனைப் பாத்துட்டுதான், ‘கரு’ படத்துல நல்ல கேரக்டர் கிடைச்சுச்சு.

நடிகர் ஜீவா சாரும் செம டைப். அவரோட ‘கற்றது தமிழ்’, ‘ராமேஸ்வரம்’ படங்கள்ல நடிச்சிருக்கேன். அதேபோல மிஷ்கின் சாரோட ‘பிசாசு’ படத்துலயும் நடிச்சிருக்கேன். பொதுவாவே அவர் படங்கள்ல யாரு நடிச்சாலும் வசனம் ரொம்பக் குறைவா இருக்கும். இதுல எனக்கு சுத்தமா வசனமே இல்ல. ஆனா எனக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரம் என்ன தெரியுங்களா... ‘தி இந்து’ இங்கிலீஷ் பேப்பர்ல என் போட்டோவைப் போட்டு, பிசாசு பட விளம்பரம் வந்துச்சு. என் காலே பூமில இல்ல. அப்படியே பறக்கிறேன். வேறென்ன சொல்ல முடியும்... சொல்லுங்க’’ என்று பூரிப்புடன் பேசும் முருகன்... இன்னும் சில சுவாரஸ்யங்களையும் சொல்லத் தொடங்கினார்.

(முகம் பார்ப்போம்)

கா.இசக்கிமுத்து, தொடர்புக்கு: esakkimuthu.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x