Published : 30 Dec 2017 15:02 pm

Updated : 30 Dec 2017 15:07 pm

 

Published : 30 Dec 2017 03:02 PM
Last Updated : 30 Dec 2017 03:07 PM

யானைகளின் வருகை 108: சிங்காரா, ஹெலிகாப்டர், ஜெயலலிதா!

108

உள்ளூர் விவசாயிகளுக்கு மானிய விலையில் தர வேண்டிய நாற்றாங்கால்களை தராமல், அதை கேரள விவசாயிகளுக்கு அதிக விலைக்கு விற்று சொந்த லாபத்திற்காக பணம் ஈட்டுகிறார். தொழிலாளர் பறித்து தரும் தலா 25 கிலோ தேயிலையை இவர் 15 கிலோ எடை போட்டு மீதி 10 கிலோவை தனியார் எஸ்டேட்டுக்கு விற்று பணம் பார்க்கிறார் போன்ற மேலாளர் மீதான புகார்கள் அதில் இருந்தன. நீலகிரியில் அந்த சமயம் ஏற்பட்டிருந்த நிலச்சரிவை அடுத்து தன் பண்ணையில் வேலை பார்த்த பத்து பேரை பர்லியாறு பழப்பண்ணைக்கு மாற்றி இருக்கிறார்.


அது நிலச்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்தான பகுதி என்பதால் அங்கே போக மறுத்த அந்த பத்து பேரும் சேரம்பாடிக்கு வந்த வனத்துறை அமைச்சரையும், உள்ளூர் அமைச்சரையும் பார்த்து புகார் தெரிவித்திருக்கிறார்கள். அமைச்சர்களும், 'இவர்களை இடம் மாற்றக் கூடாது!' என்று மேலாளரிடமே கூறிச் சென்றிருக்கிறார்கள். என்றாலும் மேலாளர் கேட்கவில்லை. போட்ட உத்தரவு போட்டதுதான் என்றிருக்கிறார்.

அதையடுத்து உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகரிடம் பிரச்சினையை கொண்டு போயிருக்கிறார்கள். அவரும் இருதரப்பையும் அழைத்து சமரசம் பேச, தொழிலாளர்கள் அப்போது பண்ணையில் மேலாளர் நடத்தும் ஊழல்களை புட்டுபுட்டு வைத்ததோடு, தோட்டக்கலைப் பண்ணை நடுவே தங்கச் சுரங்கம் அமைத்து தங்கத்துகள் பாறைகளை தனது அறையில் வைத்திருக்கிறார் என கொளுத்திப் போட்டுள்ளனர்.

அதில் பதறிப்போன மேலாளர், ''அங்கே நான் எந்த பாறையையும் வெட்டி எடுக்கவில்லை. 80 ஹெக்டேர் பரப்பளவுள்ள தோட்டக்கலைப் பண்ணையில் முக்கால் சதவீதம் புதர் மண்டிப்போய் காடாகத்தான் கிடக்கிறது. அந்த காட்டுப் பகுதியில் இரண்டு பேர் சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்தார்கள். பண்ணை ஊழியர்களைப் பார்த்ததும் அவர்கள் ஓடிவிட்டார்கள். அந்த இடத்தில் அவர்கள் தோண்டி வைத்திருந்த தங்கத்துகள் பாறைகளைத்தான் நான் விசாரணைக்காக எனது அலுவலகத்திற்கு எடுத்து வந்தேன்!'' என்று கூறி அந்த தங்கத்துகள் பாறைகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அதை நம்பாத ஆளுங்கட்சியினரே சிலர், ''ஓர் அதிகாரியே இப்படி அரசுப்பண்ணையில் தங்கச்சுரங்கம் தோண்டலாமா? யாரோ தோண்டினாலும், அவர்கள் விட்டுப்போன தங்கக் கனிமங்களை கைப்பற்றியிருந்தால் கூட அதை போலீஸிற்கு சொல்லாமல், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் அலுவலகத்தில் வைக்கலாமா?'' என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

தங்க விவகாரம் கூடலூர், பந்தலூர் பகுதியில் தீயாய் பரவ கூடலூர் ஆர்.டி.ஓ வந்து மேலாளரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். அதற்கடுத்து குன்னூர் புவியியல் மற்றும் கனிமவளத்துறை உதவி ஆணையர், கனிம வள தாசில்தார் ஆகியோரும் வந்து பண்ணையில் வெட்டப்பட்ட தங்கச்சுரங்கத்தை ஆராய்ந்திருக்கின்றனர்.

இரண்டு ஆள் ஆழத்திற்கு தோண்டப்பட்ட சுரங்கத்தின் உள்ளே இருந்த படிவங்களையும், மேலாளர் அறையிலிருந்து பாறைப்படிவங்களையும் மாதிரி எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள் அந்த அலுவலர்கள். அந்த பண்ணையில் தோண்டப்பட்ட தங்கச்சுரங்கம், கைப்பற்றப்பட்ட படிவங்கள் குறித்து மேலிடத்திற்கு ஆய்வறிக்கை அனுப்பியதாக தெரிவித்தனர் புவியியல், கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள். அதோடு அந்த பிரச்சினை அமுங்கிப் போனது.

சரி, அதோடு தங்கச்சுரங்க பிரச்சனை நின்றதா என்றால் அதுதான் இல்லை. அடிக்கடி இங்கே மர்ம நபர்கள் தங்கச்சுரங்கம் தோண்டக் கிளம்புவதும், அவர்களை வனத்துறையினர், வருவாய்த்துறையினர் துரத்துவதும், சிலர் சுரங்கத்திலேயே சிக்கி இறப்பதும் தொடர்கதையாகிக் கொண்டே இருந்தது.

2013-ம் ஆண்டு பந்தலூர் தேவாலா பகுதியில் பெய்த தொடர் மழையின்போது 150 அடி ஆழ திடீர் பள்ளம் ஏற்பட்டது. அங்கிருந்த தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடி மக்கள் அதன் உள்ளே எட்டிப் பார்த்து தங்கச்சுரங்கத்தின் நுழைவாயில் தெரிவதாக கூற பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகவல், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அந்த பள்ளத்தை மூடினர். தவிர அந்தப் பகுதியில் யாரும் செல்லக்கூடாது என்றும் தடை விதித்தனர்.

அதேபோல் 2016 ஏப்ரல் 12-ம் தேதி அன்று இரவு பொன்னூர் தங்கச்சுரங்கம் அருகே, மண் தோண்டிய 25 வயது ரூபேஸ் என்பவர் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கைப் பதிவு செய்ததோடு 'தங்க சுரங்கம் பகுதிகளில், கிராம மக்கள் யாரும் செல்லக் கூடாது' என்று அறிவித்தனர். என்றாலும் இன்று வரை இந்தப் பகுதிகளில் மக்கள் தங்கம் எடுக்கப் புறப்படுவதும், அது அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாவதும் தொடர்கதையாகவே உள்ளது.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய கூடலூர்பகுதிவாசிகள் சிலர், ''நாடுகாணி, தேவாலா, பந்தலுார்னு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் இந்த வேலையைச் செய்கின்றனர். இதற்காக புதிதாக குழிகள் அமைக்கின்றனர். அதில் நீள, நீள சுரங்கப்பாதையும் ஏற்படுத்துகின்றனர். 100 முதல் 300 அடிக்கு கீழ் உள்ள, தங்கப் படிமங்கள் நிறைந்த பாறைகளை உடைத்து அதை இயங்கு கப்பி மூலம் மேலே கொண்டு வருகின்றனர். பின்பு, அவற்றை மில்களில் கொடுத்து, மாவாக அரைத்து, காயவைத்து, தண்ணீரில் அலசி, பாதரசம் மூலம் தங்கத்தைப் பிரித்து எடுக்கின்றனர். இவை உள்ளூர் நகை கடைகளில், அன்றைய மார்க்கெட்டை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. அபாயகரமான இந்த தொழிலில் ஆண், பெண் பேதமின்றி ஈடுபடுகின்றனர். சுரங்க குழிகளில் இறங்கி, உயிரை பணயம் வைத்து இந்த பணியை செய்கின்றனர். அப்படி சிலர் உள்ளேயே சிக்கி இறந்தால் கூட தெரிவதில்லை.

அதே போல் வனத்துறையினர் வந்தால் இப்பணியில் உள்ளவர்கள் சுரங்கக்குழிகளுக்குள் சென்று ஒளிந்து கொள்ளவும் செய்கின்றனர். சிலர் புதர்காடுகளில் தீ மூட்டிவிட்டு ஓடி விடுகின்றனர். பந்தலூர் முதல் நாடுகாணி வரையிலான பகுதியில் நிலநடுக்கப் பட்டியலில் உள்ள பகுதியில், இங்கு தோண்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சுரங்க குழிகளால், பேரிடர் ஏற்படும் அபாயமும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் குழிகள் உள்ள இடங்கள் எல்லாம் பெரும்பாலும் புதர்காடுகளாக உள்ளன. அந்த யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இங்கே திரிவதும் இயல்பாக உள்ளது. அதில் ஒரு யானைக்குட்டி சுரங்கத்திற்குள் விழுந்தால் கூட தெரியாது.

சுரங்கக் குழிகளுக்குள் தங்கம் தேடப்போய் மனிதர்கள் வனவிலங்குகளிடம் அகப்பட்டுக் கொள்வதும் நடக்கிறது. இதில் இருக்கும் பெரும்பான்மை நிலங்கள் செக்சன் 17க்குள் வருபவையும் கூட.

இந்த சுரங்கங்கள் இருப்பது சில ஏக்கர் பரப்பளவில்தான் என்றாலும், இதை முன்வைத்து நடக்கும் சர்ச்சைகளும், அதையொட்டி ஏற்படும் வில்லங்கங்களும் நிறைய. கோடை காலங்களில் இதை முன்வைத்து பெரும் காடு தீப்பற்றி எரிவதும் நடக்கிறது. இவற்றை நிரந்தரமாக மூடி, இந்த தங்கம் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மாற்றுப்பணி ஏற்பாடு செய்தால் ஒழிய இதை ஒழுங்கபடுத்தவே முடியாது!'' என்றனர்.

யானைகளின் புகலிடத்தில் தங்கச்சுரங்கங்களுக்கான வரலாறு இப்படி என்றால் 'சரணாலயத்தில் பறக்கலாமா முதல்வரின் ஹெலிகாப்டர்' என்ற தலைப்பில் புதியதொரு சர்ச்சை புறப்பட்டது. அடுத்ததாக ஒரு சர்ச்சை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் மூலம் வந்தது.

அது சிங்காராவிற்கு வந்த சோதனை.

2005-ம் ஆண்டு. இந்த காலகட்டத்தில் சேது சமுத்திர திட்டத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தார் அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா. அதற்கு சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் காரணம் காட்டியிருந்தார். அதனால் அவர் மீது கரிசனம் கொண்டு பாராட்டிக் கொண்டுமிருந்தனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அந்த நேரத்தில்தான் 6.9.2005 அன்று மசினக்குடிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினர் ஜெயலலிதா.

இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்காரா. இங்கே பைகாராவின் இறுதிநிலை மின் உற்பத்தி தொடக்க விழா அன்று ஏற்பாடாகியிருந்தது. அந்த புதிய மின் உற்பத்தி பிரிவைத் தொடங்கி வைக்கவே ஜெயலலிதா வந்தார். இவர் வந்த பகுதிகள் எல்லாமே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி இடங்கள். மசினக்குடிக்கு அருகில்தான் முதுமலை உயிரினச் சரணாலயம். இப்பகுதியில் இதற்கு முன்னர் ஹெலிகாப்டரோ, கிளைடர் போன்றவை வந்திறங்கியதேயில்லை.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

தவறவிடாதீர்!    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x