Published : 07 Nov 2017 04:38 PM
Last Updated : 07 Nov 2017 04:38 PM

யானைகளின் வருகை 73: பல்லாங்குழி சாலையே பாதுகாப்பு

குந்தா, கெத்தை, பரளிக்காடு, பில்லூர், பைக்காரா, மோயாறு என நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் மின்நிலையங்களுக்கான சாலைகளை எல்லாம் நன்றாகவே போட்டு விட்டார்கள். ஆனால் பில்லூர் அணை மற்றும் மின்நிலையங்களுக்கு செல்லும் பாதை மட்டும்தான் மிகவும் மோசமாக இருக்கிறது.

வெள்ளியங்காடு முதல் முள்ளி வரை சாலையில் பயணம் செய்யவே முடிவதில்லை. அதற்கு மேல் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்தே போய்விடலாம் போல தோன்றும். அந்த அளவுக்கு சாலை படுமோசம். 'இந்த சாலை மின்சாரத் துறையினுடையது. அவர்கள் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்துவிட்டனர். நெடுஞ்சாலைத் துறையே சாலை போடும் என்றாலும், அதற்கு இங்கே வனத்துறை தடையில்லா சான்று தரவில்லை' என்பதுதான் மின்வாரிய ஊழியர்களுக்குள் பரிமாறப்படும் தகவல்கள்.

இதனால் இந்த சாலையில் வாகனங்கள் ஒன்றுக்கு இரண்டு மடங்கு நேரம் எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.இடையில் எங்காவது காட்டு யானை சாலையில் நின்றுவிட்டால் என்ன நடக்கும் என்பது அந்த சூழ்நிலைதான் தீர்மானிக்கும். வெள்ளியங்காட்டிற்கும், பில்லூருக்கும் சுமார் 20 கிலோமீட்டர் தூரம்.

இதற்கு இடைப்பட்ட பகுதியில் முள்ளி கேரள எல்லை உள்ளது. இந்த முள்ளியிலிருந்து கேரளப் பகுதியான கொடுங்கரை பள்ளம், கோபனாரி, ஆனைகட்டி என செல்ல நல்ல சாலை போடப்பட்டிருக்கிறது. இந்த முள்ளியிலிருந்து வெள்ளியங்காடு நோக்கிப் பயணம் செய்யும் போது அத்திக்கடவு தாண்டி ஒரு சாலை பிரிகிறது. அதுவும் கரடுமுரடான வனத்துறை குறுகலான சாலைதான்.

இந்த வழியே சென்றால் கேரள -தமிழக எல்லையான கூடப்பட்டி கிராமம் வருகிறது. இங்கேதான் கேரள சிற்றூரிலிருந்து வரும் சிறுவாணி ஆறும், அட்டப்பாடி தாவளத்தின் வழி வரும் பவானி ஆறும் கூடுகிறது. இந்த வனத்துறை சாலையில் பயணம் செய்யும்போது சில அடி தூரத்திற்கு ஒரிடத்தில் வேலியோரங்களில் காட்டு யானைகள் போட்ட சாணக்குவியல்களை காணமுடிகிறது. அத்துடன் அவை உடைத்துப் போட்டுவிட்டு சென்ற மரம் செடி கொடிகளும் கிடக்கின்றன.

அநேகமாக யானைகள் சில மீட்டர் தூரத்திலேயே சாவகாசமாக அங்குள்ள புதர்களில் நின்று கொண்டிருக்கலாம். எந்த நேரமும் வாகனங்களில் வருபவர்களை ஓடி வந்து தாக்கிவிட்டு புதருக்குள் மறைந்து விடலாம். கூடப்பட்டி தாண்டினால் கேரள பகுதியான கோட்டத்துறை வந்துவிடுகிறது. அதற்கு சாலை பக்காவாக போடப்பட்டிருக்கிறது.

திரும்ப நாம் அத்திக்கடவு கிராமத்திற்கே வந்து வெள்ளியங்காடு நோக்கி பயணம் செய்து தாயனூர் வந்தால் இரண்டு சாலைகள் காரமடை சாலையில் பிரிகிறது. அதில் தோலம்பாளையம் வழியே கோபனாரி செல்லும் சாலை பளிங்கு போல் சுடர்விடுகிறது. நாம் வரிசையாக கண்ட முள்ளி, கூடப்பட்டி, கோபனாரி சாலைகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாளைக்கு எண்ணி நூற்றுக்கும் குறைவாகவே வாகனங்கள் சென்று வந்துள்ளது.

ஆனால் தோலம்பாளையம் கோபனாரி சாலை போடப்பட்ட பின்பு மேட்டுப்பாளையத்திலிருந்து கேரள அட்டப்பாடி பகுதிக்கு சுலபமான பாதையாக அது மாறி விட்டது. முன்பு கோவை சென்று ஆனைகட்டி வழியாக கேரளா மன்னார்காடு சென்ற வாகனங்கள் எல்லாம் இதில் செல்ல ஆரம்பித்து விட்டன. இதில் முக்கால் வாசி தூரம் யானைக்காடுதான்.

இதேபோல் தமிழ்நாட்டு பகுதியில் வெள்ளியங்காடு தாண்டி சாலை மோசம் என்றாலும் கேரள சாலைகள் நன்றாக இருப்பதால் முள்ளி, கூடப்பட்டி வழியிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லத் தொடங்கி விட்டன. அட்டப்பாடி முழுக்க மாவோயிஸ்ட்டுகள் அச்சுறுத்தல், வதந்தி இருப்பதால் ஆங்காங்கே தமிழக அதிரடிப்படை போலீஸ் ஒரு பக்கம், கேரள தண்டர் போல்ட் போலீஸ் இன்னொரு பக்கம், இதற்கிடையே இருமாநில வனத்துறையினர் ரோந்து போகும் வாகனங்களும் சென்று வருவது நடக்கிறது.

சில இடங்களில் அவர்கள் முகாமிட்டும் தங்கியிருக்கின்றனர். இதனால் கடந்த பத்து ஆண்டுகளில் இங்குள்ள காடுகளில் சூழல் மாற்றம் நடந்ததோ இல்லையோ, வனவிலங்குகளுக்கு இடையூறு நிறையவே நடந்துள்ளது. தமிழக கேரள எல்லையில் குண்டடிபட்ட நிலையில், வயிற்றில் புண் ஏற்பட்ட தன்மையில் பல யானைகள் விழுந்து இறந்தும் உள்ளன. வேட்டையர்களாலோ, வேறு விஷமிகளாலோ தாக்குதலுக்குள்ளாகி காயம்பட்ட யானைகளை காப்பாற்ற முடியாமல், அதை கேரளத்திலிருந்து தமிழகத்திற்குள்ளும், தமிழகத்திலிருந்து கேரளத்திற்குள்ளும் மக்களும் வனத்துறையினரும் மாற்றி மாற்றி விரட்டி விடும் சம்பவங்களும் நடந்துள்ளது.

வெள்ளியங்காட்டிலிருந்து பில்லூர் வரை சாலை படுமோசமாக இருக்கும் நிலையிலேயே இப்படியெல்லாம் நடக்கிறதென்றால், இந்த சாலைகள் போடப்பட்டால் வனவிலங்குகள் கதி என்ன ஆகும் என்பதே சூழலியாளர்களின் கேள்வி. போதாக்குறைக்கு பரளிக்காட்டில் பரிசல் சூழல் சுற்றுலா ஆரம்பித்த பிறகு இங்கே சனி, ஞாயிறுகளில் வரும் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. சூழல் சுற்றுலாவில் சுமார் 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்

என்றாலும் இங்குள்ள இயற்கை சூழலை தரிசிக்க ஆயிரம் பேருக்கு மேல் வருகிறார்கள். அவர்களில் பலர் பில்லூர் வரை சுற்றிப் பார்க்க செல்லுகிறார்கள். அதில் காட்டு விலங்குகளை தேடியும், குறிப்பாக காட்டு யானைகள் தரிசனத்தை காண்பதற்காகவும் வாகனங்களில் பயணிக்கிறார்கள். சாலை மிக மோசமாக இருக்கும் நிலையிலேயே இந்த அளவுக்கு வாகனங்கள் செல்கின்றன என்றால் அது விஐபிக்கள் வரும் சாலை போல் அகண்டு, மேடுபள்ளங்கள் இல்லாமல் போடப்பட்டால் நிலைமை என்ன ஆகும்?

''நிச்சயம் காட்டு விலங்குகள் அதன் பாதையில் நடக்க முடியாது. அத்தனையும் ஊருக்குள்தான் புறப்பட்டு வரும் என்கிறார்கள். ஒரு வகையில் வனத்துறை முட்டுக்கட்டையால் சாலை போடப்படாமல் குண்டும் குழியுமாக கிடப்பதே காடுகளுக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் பாதுகாப்பாக உள்ளது!'' என குறிப்பிடுகிறார்கள் இங்கு வந்து போகும் சூழல் ஆராய்ச்சியாளர்கள்.

இங்கே இயற்கை சூழலை அனுபவிக்க மட்டுமா வருகிறார்கள்? கோவை பகுதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளைஞர்கள் ஆளாளுக்கு ஜோடியை அழைத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள். அவர்கள் அடர்ந்த காடுகளுக்குள் ஒதுங்கவும் செய்கிறார்கள்.

அவர்களை பின்தொடர்ந்து வந்து அவர்களின் ஆடைகளை, நகைகளை பறித்து பிளாக் மெயில் செய்யும் கும்பல்களும் கூடிக் கொண்டேயிருக்கிறது. அப்படி வந்தவர்களை வெள்ளியங்காடு, அத்திக்கடவு மக்கள் விரட்டியடித்த சம்பவங்களும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆடை கொடுத்த சம்பவங்களும் இங்கு நடந்துள்ளன.

இதே மாதிரி பல சம்பவங்கள்தான் நெல்லித்துறை பவானியிலும். இங்கே வனத்துறை யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடந்த விளாமரத்தூர் பகுதி வரை ஏகப்பட்ட தற்காலிக தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், கிளப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமைகளில் வன பத்திரகாளியம்மன் கோயிலுக்கு கிடா வெட்டு, விருந்து என வரும் பல்லாயிரக்கணக்கானோர், வாகனங்ளை எடுத்துக் கொண்டு இந்தப் பகுதிகளுக்கு வந்து விடுகிறார்கள். அவர்கள் எல்லாம் பவானியில் குளிக்கிறார்களோ இல்லையோ, மது அருந்திவிட்டு ஒரே ஆட்டம், பாட்டம்தான். இதனால் நெல்லித்துறை, நந்தவனப்புதூர் கிராமங்கள் படாத அவஸ்தைபடுகின்றன. இவர்கள் அடிக்கும் கூத்துகளில், உடைத்து எறியப்படும், ஆயிரக்கணக்கான மதுபாட்டில் சிதறல்களை மனிதர்களே மிதித்து விட்டு படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல; மிருகங்கள் அதில் நடமாடினால்?

''பில்லூர் அணை கட்டுவதற்கு முன்பு இந்த ஏரியாவில் என் வயதுக்கு காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பார்த்ததில்லை. அணை நீர் தேங்கும் பகுதிகள் யானைகளின் வழித்தடங்கள் என்பதால் அவை திசை திருப்பப்பட்டன. அது போதாதென்று பூச்சமரத்தூரில் சுற்றுலா காட்டேஜ், பரளிக்காட்டில் சூழல் சுற்றுலா, பரிசலை மட்டுமே நம்பியிருந்த கிராமத்திற்கு பாலம், அதையொட்டி உள்ள புகழ்பெற்ற கோயிலில் பல்லாயிரக்கணக்கான கிடாவெட்டு, அதையொட்டி விருந்தும், கும்மாளமும் இருந்தால் எந்த அளவுக்கு வனவிலங்குகள் அதில் பாதிக்கப்பட்டிருக்கும்.

எங்க ஏரியாவுக்கு தினம் தவறினாலும் தவறும், யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் வருவதும், பயிர்களை மேய்வதும் தவறுவதேயில்லை. அதற்காக அத்தனை விவசாயிகளும் கையில் சியர்ச் லைட்டும், பட்டாசுகளும், தோட்டத்தை சுற்றி மின்வேலியும் அமைத்துமே வாழவேண்டியிருக்கிறது. அதையும் தாண்டித்தான் எங்களுக்கு அடுத்த தோட்டத்தில் பாக்குமரத்தில் முட்டிய ஆண்யானை, அந்த பாக்கு மரத்தின் அருகில் சென்ற உயர்அழுத்த மின்சாரக்கம்பியில் கரண்ட் பாய்ஞ்சு செத்தும் போனது!'' என்றார் தேக்கம்பட்டியில் வசிக்கும் சுப்பையன் என்கிற விவசாயி.

இந்த லட்சணத்தில் நீலகிரி மாவட்டத்திற்காக அரசு அறிவித்த 3-வது மாற்றுப் பாதை இந்த வழியே செயல்பாட்டுக்கு வந்தால் என்னவாகும்? எனவேதான் அதற்கு இங்குள்ள சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். ''6 வருஷத்துக்கு முன்னே இதற்கு பெரிய அளவில் திட்டம் தீட்டி அறிவிப்பு செய்து விட்டார்கள். மஞ்சூர் சாலையை அகலப்படுத்த வழியில் 1632 மரங்களை வெட்டக்கூட புள்ளிவிவரங்கள் கொடுத்துவிட்டனர். அந்த நேரத்தில் நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். வனத்துறை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் என சகலத்திற்கும் கடிதங்கள் அனுப்பினோம். பிறகுதான் பணிகள் நிறுத்தப்பட்டன. அது இப்போது கிடப்பில் கிடக்கிறது என்றாலும் கூட அந்த தடை கூட தற்காலிகமானதுதான். எந்த நேரமும் அரசியல் சூழலுக்கு ஏற்ப தூசி தட்டி எடுக்கப்படலாம்!'' என்கிறார் இதையொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் சூழல் ஆர்வலர் ஒருவர்.

அணைகள், நீர்மின்நிலையங்கள், அதையொட்டிய சாலைகள், சூழல் சுற்றுலா, அதைதேடி வரும் மனிதர்கள், அவர்களின் ஆடம்பர ஆட்டம் மட்டும்தான் பில்லூர் சுற்றுவட்டாரத்தில் வன விலங்குகளுக்கு பிரச்சினையா என்றால் அதையும் தாண்டி ஒன்றுள்ளது. அது இங்கு 20 ஆண்டுகளுகு்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சென்ட் (நறுமண ஆயில்) ஃபேக்டரி.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x