Published : 20 Nov 2017 04:49 PM
Last Updated : 20 Nov 2017 04:49 PM

பாப்பா, பாப்பா ஃபிரிட்ஜை திற: இப்படியும் அடைக்கலமான ஒரு பாசக்கார கிளி!

 

வேகமாக றெக்கையடிக்கிறது. அதே வேகத்தில் 'பாப்பா, பாப்பா!' என கீச்சிடுகிறது. உடனே அதன் முன்பு இருக்கும் ஃபிரிட்ஜை (குளிர்சாதனப்பெட்டி) திறக்கிறார் ஜம்ருத் பேகம். உடனே அதற்குள் போய் ஹாயாய் அமர்ந்து கொண்டு மறுபடியும், பாப்பா, பாப்பா என்றே கீச்சிடுகிறது. றெக்கையை பட,படக்கிறது. அதைப் புரிந்து கொண்டது போல் ஃபிரிட்ஜை மூடிவிடுகிறார் இவர். 'இதுக்கு எப்பவுமே இப்படித்தான் ஃபிரிட்ஜூக்குள்ளேதான் இருக்கணும். ராத்திரியில நாங்க தூங்கும்போது வெளியில எடுத்து விடறது கூட கட்டாயப்படுத்தித்தான் விடணும். அஞ்சு வருஷமா இப்படித்தான்!' என்று ஜம்ருத் சொல்வது தன் பாசக்கார பச்சைக்கிளியை.

கிளிக்கு இறக்கை முளைத்தால் பறந்து போய் விடும் என்பார்கள். ஆனால் இவர் வளர்த்தும் கிளி மூன்று மாதக்குஞ்சாக இருக்கும் போது ஒரு தோட்டத்தில் காகங்கள் துரத்த அடிபட்டு கிடந்திருக்கிறது. அதைப் பார்த்து எடுத்து வந்து வீட்டில் வளர்த்துள்ளனர் ஜம்ருத், யூனிஸ் தம்பதியினர். கிளிக்கு காயம் ஆறி, இறக்கைகளும் முளைத்துவிட்டது. ஆனால் இது பறந்து வெளியே செல்லவில்லை. மாறாக அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியே அடைக்கலம் என்றாகிவிட்டது.

''நாங்க சாப்பிடறது எல்லாமே இதுவும் சாப்பிடும். சமைக்கும்போது ஒரு முறை ஃபிரிட்ஜை திறந்தப்ப அதுல போய் உட்கார்ந்துடுச்சு. அப்புறம் வெளியில வரவே மாட்டேன்னுடுச்சு. அதுலயே பழங்கள் வைப்போம். சோறு, பிஸ்கட் வைப்போம். சாப்பிட்டுடும். பசிச்சா, வெளியில வந்து எச்சம் கழிக்கணும்னா ஃபிரிட்ஜ் கதவை காலால பிறாண்டும். அப்ப நாங்க அதைத் திறந்துவிட்டா வேலைய முடிச்சுட்டு திரும்ப ஃபிரிட்ஜூக்குள்ளே போயிடும். அதை திறக்காம இருந்தா இப்படித்தான் பாப்பா, பாப்பான்னு கத்தீட்டு கோபமா றெக்கையை அடிக்கும். ஒடனே அத திறந்து விடணும். இல்லாவிட்டா போச்சு!'' என்கிறார் ஜம்ருத் பேகம்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக கிளி இப்படியேதான் இருக்கிறது. இரவில் மட்டும் கட்டாயப்படுத்தி வெளியில் எடுத்து கூண்டில் வைக்க வேண்டியிருக்கிறதாம். கோவை, மேட்டுப்பாளையம் செந்தில்பேட்டை ரோட்டில் உள்ளது இவர்களின் வீடு. ''இன்னெய்க்குப் பாருங்க. பராமரிப்புக்காக இன்னெயக்கு மின்தடை. கரண்ட் இல்லை. ஃபிரிட்ஜூக்குள்ளே இருந்து வெளியே வரமாட்டேங்குது. என்னதான் செய்யறது. அதனால அதுக்குள்ளேயே இருக்கு!'' என்று சொன்ன யூனிஸிடம், பொதுவாக பறவைகள் சுதந்திரமா வெளியில பறக்கத்தான் விரும்பும். அப்படி ஏதாவது காட்டுக்குள்ளே கொண்டு போய் இதை விட முயற்சி செய்தீர்களா என கேட்டோம். ''அதையேன் கேட்கிறீங்க. ஒரு வருஷம் முன்னால இது ஜம்ருத் தோளில் உட்கார்ந்துருச்சு. அவங்களும் வெளியில அப்படியே போயிட்டாங்க. அது வெளியில எதைப் பார்த்து பயந்ததோ தெரியலை. அப்படியே பறந்து போயிடுச்சு.

அப்புறம் எங்கெல்லாமோ தேடினோம். கிடைக்கலை. எம் மனைவி பைத்தியம் போல ஆயிட்டாங்க. நிறைய பக்கம் விசாரிச்சங்க. ஊர்ல இருக்கிற மரங்களில் எல்லாம் தேடினோம். அப்பத்தான் ஒரு கடைக்காரர் அங்குள்ள ஒரு விவசாயி வீட்ல ஒரு கிளி இருக்கிறதா சொன்னார். தன் தோட்டத்துல ஒரு கிளியை நிறைய காக்கைகள் துரத்தி, துரத்தி கொத்தியதாகவும், அது இறக்கையெல்லாம் புடுங்கப்பட்ட நிலையில் பறக்க முடியாம ஒரு பொந்துக்குள்ளே பதுங்கியிருந்ததாகவும், காக்கைகளை விரட்டி விட்டுட்டு அதை எடுத்துட்டு வந்திருப்பதாகவும் அந்த விவசாயி சொல்லி அவர் பிடிச்சு வச்சிருந்த கிளியையும் காட்டினார்.

அது எங்க கிளி அல்லன்னு நினைச்சேன். இறக்கைகள் முறிஞ்சு கிடந்தது. எப்பவும் போல, 'பாப்பா, பாப்பா!'ன்னு றெக்கையடிச்சுட்டு கத்தவும் செய்யல. அதனால சந்தேகத்துக்கு என் மனைவியை கூப்பிட்டேன். அவங்களும் ஓட்டப்பந்தயத்துல ஓடி வர்ற வீராங்கனையைப் போல வந்தாங்க. வந்ததும் அதைப் பார்த்து கண்ணீரோட, பாப்பா, பாப்பான்னு கூப்பிட்டாங்க. அவ்வளவுதான். அதுவும் பாப்பா, பாப்பான்னு கத்த, இவ அழுதுட்டு அதை தாவி எடுக்க, அதான் எங்க கிளின்னு உறுதியாச்சு. இதைப் பார்த்த அந்த விவசாயியே கலங்கிப் போயிட்டார். உடனே கிளியைத் தூக்கி கூண்டோட இவங்ககிட்ட கொடுத்துட்டார்.

அப்ப வீட்டுக்கு வந்த கிளி திரும்பவும் ஃபிரிட்ஜ்கிட்ட போய் சத்தம். திறந்து விட்ட உடனே ஓடிப்போய் உட்கார்ந்துடுச்சு. எங்களுக்கு ரெண்டு குழந்தைகள். இந்த கிளியையும் சேர்த்து எங்க வீட்டுல அஞ்சு பேர். இதுக்குன்னே ஃபிரிட்ஜ்ல ஒரு பகுதியை ஒளிச்சுக் கொடுத்துட்டோம். அதுக்குள்ளே காய்கறி, பொருள்கள் எது வச்சாலும் தொடறதில்லை. அதுக்குன்னு கிண்ணத்துல வச்சதை மட்டும்தான் சாப்பிடும். இருந்தாலும் அது இடைஞ்சல் இல்லாம இருக்கட்டும்னு இந்த ஃபிரிட்ஜை இதுக்கே விட்டுட்டு, காய்கறிகள், பழங்கள் வைக்க வேறொரு ஃபிரிட்ஜ் வாங்கலாம்னு நினைச்சுட்டிருக்கோம்!'' என்று பாகாய் உருகினார் யூனிஸ் மிகுந்த ஜீவகாருண்யத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x