Published : 23 Nov 2017 06:28 PM
Last Updated : 23 Nov 2017 06:28 PM

யானைகளின் வருகை 85: தென்னிந்தியாவின் தண்ணீர் தொட்டி!

 

இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருந்த, மசினக்குடி முன்னாள் ஊராட்சித் தலைவரும், நீலகிரி மாவட்ட மனித உரிமைகள் சங்கத்தலைவருமான டாக்டர் ஜெர்மினா பேசும்போது, ''இங்கு வசிக்கும் மக்கள் இங்குள்ள வனத்தையும், வனவிலங்குகளையும் தெய்வமாகவே பார்க்கிறார்கள். இந்தியாவிலேயே சமீபகால கணக்கெடுப்புகளில் இந்த முதுமலை பகுதிகளில்தான் வன உயிரினங்கள் அதிகரித்திருப்பதாக கணக்கீட்டாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு காரணம் இங்கு வனங்களுடனும், வன உயிரினங்களுடனும் மனிதர்கள் இரண்டறக் கலந்தே வாழ்வதுதான். வேட்டைக்காரர்கள் என்பவர்கள் வெளியூரிலிருந்தே வருகிறார்கள். அவர்களை இனம் கண்டு விரட்டுவதும், வனத்துறையினரிடம் பிடித்துக்கொடுப்பதும் கூட பொதுமக்களேதான்!'' என்றார்.

''இங்கே முப்பத்தியாறு புலிகள் இருப்பதாக தற்போதைய வனத்துறை கணக்கெடுத்துள்ளது. இவையெல்லாம் புலிகளின் காலடித் தடங்களை வைத்து எடுக்கப்பட்ட குத்து மதிப்பிலான கணக்கீடு. இதை புலிகள் காப்பகமாக அறிவித்ததன் மூலம் வருடத்திற்கு ரூபாய் இருபத்தியேழு லட்சம் நிதி ஒதுக்கீடு வனத்துறைக்கு கிடைக்கும். ஏற்கெனவே 300க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக சொல்லி அதற்கு சுமார் மூன்றரை கோடி ரூபாய் நிதி வாங்கி வனத்துறையினர்தான் நன்றாக சாப்பிட்டு வருகிறார்கள். இப்போது புலிகளை கணக்குக் காட்டி நன்றாக சம்பாதிக்கப் போகிறார்கள். இப்படி அவர்கள் வாழ, இங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் சாகத்தான் வேண்டுமா?'' என்று கேட்டார் உள்ளூர் பெரியவர் ஒருவர்.

இந்த விவகாரத்தில் வனத்துறையினர் பேசும்போது, ''புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டால் மக்கள் யாரும் அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள். அவர்களாக விரும்பினால் மட்டும் வெளியேறலாம். மற்றபடி இந்த காப்பகத்தில் பஃபர் ஜோன் பகுதியில் வாழும் மக்களின் வாழ்நிலை, தொழில் பற்றியெல்லாம் கணக்கெடுத்து, அவர்களுக்கேற்ற அடிப்படை வசதிகளை வனத்துறையே செய்து கொடுக்கும். அதை அரசியல் கட்சிகள்தான் தேவையில்லாமல் பெரிதுபடுத்துகின்றன!'' என்றனர்.

இந்தப் போராட்டம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை அது முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. இன்னமும் ஜென்மி நிலத்தில் செக்சன் 17 பிரச்சினை அப்படியேதான் இருக்கிறது. புலிகள் காப்பகத் திட்டமும் அவ்வப்போது மக்கள் போராட்டங்களாக வெடிக்கத்தான் செய்கின்றன. இதற்கிடையே காட்டுயானைகள் மட்டுமல்ல, புலிகள், கரடிகள், மான்கள், காட்டெருமைகள், குரங்குகள் என சகல ஜீவராசிகளும் வாழவும் முடியாது சாகவும் முடியாது திண்டாட்டத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறது.

திடீரென்று யானைகளின் புகலிடங்களை பேசுகிறேன் என்று புறப்பட்டு முதுமலையையும், அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வாழும் மனிதர்கள் பிரச்சினையை நான்கைந்து அத்தியாயங்களாக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோமே! என்ன இது? சரணாலய விஸ்தரிப்பு, ஆதிவாசிகள் நிலப்பிரச்சினை, ஜென்மி நிலங்கள், செக்சன் 17 பிரிவு, புலிகள் காப்பகம் என்று எதற்காக இதில் மூக்கை நுழைக்க வேண்டும் என்று கூட. முகச்சுழிப்பு அடையலாம்.

இந்த மக்கள் போராட்டங்களுக்குள் வனவிலங்குகளின் நிம்மதியும் அடங்கியிருக்கிறது. இந்த பிரச்சினைகள் முடிக்கப்படாததால் இன்றைக்கு வனவிலங்குகளும், காடுகளும் சின்னா பின்னமாகிக் கொண்டிருப்பதற்கான நீண்ட வரலாறும் அதற்குள் இருக்கிறது.

காடு என்பது வெறும் காடு மட்டுமல்ல; அதை சார்ந்த வனவிலங்குகளும்தான் என்பதை எப்படி ஒப்புக் கொள்கிறோமோ, அப்படியே, காடும், கானுயிர்களும் சார்ந்த மனிதர்களும்தான் என ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், காடும், காடு சார்ந்த வனவிலங்குகளும், இந்த காட்டிலேயே வாழ்ந்த பழங்குடியினராலும், குடிமக்களாலுமே வளர்க்கப்பட்டு, வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த காடோடு இணைந்த மனிதர்களையும், இதற்கு சம்பந்தமில்லாத, காடுகளை அழிக்கும் வனக் கொள்ளையர்களையும், அதற்குள் வர்த்தகமே நோக்கமாக கொண்டிருக்கும் பெரு நிறுவனங்களையும் பகுத்துப் பார்க்க வேண்டிய அவசியமும் இந்த கானுயிர்களை, குறிப்பாக யானைகளை பற்றி அறியத் துடிக்கும் மக்களுக்கு இருக்கிறது.

எனவேதான் இந்த மக்கள் போராட்டங்களை இங்கே தொடர்ந்து சொல்லி, அதற்கு பின்னால் வனவிலங்குகளுக்கு நடந்த கொடூரங்களை சுட்டிக்காட்ட புறப்படுகிறோம்.

அதற்கு இந்த விஷயங்களை முழுமையாக நாம் புரிந்து கொள்ள நீலகிரிக் காடுகளையும் அதில் வாழ்ந்த மக்களையும், பிறகு அதற்குள் நுழைந்த மனிதர்களின் வருகை குறித்த வரலாற்றை அறிய வேண்டியது அவசியம்.

இன்னும் சொல்லப்போனால் கோவை மாவட்ட யானைகளின் வலசையில் மனிதர்கள் குடியேற்றம் நடந்ததால், யானைகள் எப்படி தறிகெட்டு ஊருக்குள் நுழைந்தததோ, அதுபோல யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்த புகலிடத்தில் மனிதர்கள் வருகையினால், எப்படியெல்லாம் காடழிந்தன, அதில் கானுயிர்கள் எந்த மாதிரியான அல்லல்களை அனுபவித்தன என்பதை இந்த முழுமையான வரலாறு புரிய வைக்கும். தவிர இந்த நீலகிரி மண்ணில் வனவிலங்குகளுடன் இருக்க வேண்டியவர்கள் யார்? விரட்டப்பட வேண்டியவர்கள் யார்? என்பதையும் உணர வைக்கும்.

அதை கொஞ்சம் பொறுமையாக வாசித்து புரிந்து பிறகு யானைகளோடு மட்டுமல்ல, அதன் சார்பு வனவிலங்குகள் எல்லாவற்றுடனும் கூட பயணிக்கலாம் தயாராக இருங்கள்.

இந்த வரலாற்றை முழுமையாக நம்முடன் முழுமையாக பகிர்ந்து கொள்பவர் கூடலூரில் வாழும் பழங்குடிகளுக்கும், ஏழை எளிய விவசாயிகளுக்கும் மட்டுமல்லாது, வன உயிரினங்களுக்கும் பல்வேறு போராட்டங்களை செய்த, செய்து கொண்டிருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொறுப்பாளர் எம்.எஸ். செல்வராஜ்.

புவியியல் ரீதியாக உலகின் ஆரம்ப மலைத்தொடர்களில் மேற்குத் தொடர்ச்சி மலை மிகவும் முக்கியமானது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி விந்திய மலைத் தொடர் வரை நீடிக்கின்றது. இந்த மலையின் உச்சியில், கடல் மட்டத்திலிருந்து 2640 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். நீலகிரி மலைக்காடுகள். இது 2549 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளிலேயே மிகவும் அதிகமான இயற்கை வளங்களை கொண்ட பகுதி இது என்பதை யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.

தமிழ்நாட்டில் காவிரி சிக்கல் பல ஆண்டுகளாகவே பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இந்த காவிரிக்கே தண்ணீர் கொடுக்கும் உயிர்ச்சூழலை இது கொண்டுள்ளது. அதனால்தான் இதை 'தென்னிந்தியாவின் தண்ணீர் தொட்டி' என்று சொல்கிறார்கள். காவிரி, பவானி, மாயாறு, சாலியாறு, கபினி, பொன்னேரி, பாண்டியாறு, புன்னம்புழா போன்ற நூற்றுக்கணக்கான வற்றாத ஆறுகள் இந்த உயிர்ச் சூழல் மண்டலத்தில்தான் உருவெடுக்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலை பூமிப்பந்தின் நுரையீரல் போன்றது என்றால், நீலகிரி அதில் சுருங்கி விரிந்து சுவாசத்தை தரும் மையப் பகுதி எனலாம்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில மக்களின் எண்பது சதவீத வாழ்வாதாரமே இந்த உயிர்ச்சூழல் மண்டலத்தின் வழியேதான் நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தின் குளிர்ச்சியும், அடர்ந்த காடுகம் பருவ மழைக்கு ஏற்ற தன்மையை கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 40 சதவீத மின் ஆற்றல் நீலகிரியில் இருந்துதான் கிடைக்கின்றது. சோலைக்காடுகள், பசுமைக் காடுகள், முட்காடுகள், ஈரப்பத இலையுதிர் காடுகள், குளிர்காடுகள், வறட்சிக் காடுகள் என பல பிரிவுகளாக நீலகிரி காடுகள் அமைந்துள்ளன. 1989 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை உயிரியியல் சூழல் மண்டலமாக அரசு அறிவித்தது.

யுனெஸ்கோ அறிவித்த 135 உயிர்ச்சூழல் காடுகளில் இதுவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அமெரிக்காவின் பூர்வ குடிகள் எப்படி செவ்விந்தியர்களோ, அது போல இந்த வனப்பகுதி முழுமைக்கும் சொந்தக்காரர்கள் நீலகிரியின் ஆதிப் பழங்குடிகள்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x