Published : 29 Nov 2017 08:01 PM
Last Updated : 29 Nov 2017 08:01 PM

யானைகளின் வருகை 89: சர்ச்சைக்குரிய செக்சன்-17 வரலாறு!

பிரிட்டிஷார் ஆளுகைக்கு முன்பு பல்வேறுபட்ட பகுதிகளை குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும் தம் ஆளுகைக்கு உட்படுத்தி வாழ்ந்தனர். அவர்கள் அவ்வப்போது நகர் வலம் வருவது போல் வனவிலங்குகள் வேட்டைக்கும் சென்றனர் என்பதெல்லாம் வரலாற்றில் அறிந்ததே. அந்த வகையில் தற்போதைய கூடலூருக்கு அப்பால் மேற்கே உள்ள கேரள வயநாடு பகுதிகளை நிலம்பூர் கோதவர்மன், திருமலைப்பாடு ராஜா வகையறாக்கள் ஆண்டு வந்தனர். அவர்களுக்கு அப்பால் கள்ளிக்கோட்டையை சாமுத்திரி ராஜா ஆண்டு வந்தார். இந்த சாமுத்திரி ராஜாவைத்தான் பின்னாளில் அந்த சொல் உச்சரிக்க வராமல் சாமுரஸ் ஆக்கிக் கொண்டனர் ஆங்கிலேயர்கள்.

இந்த நிலப்பரப்பு முழுமையும் இந்த ராஜாக்கள் கையில்தான் இருந்தது.

நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும், அதைச் சுற்றியுள்ள ஓவேலி, ஸ்ரீமதுரை, நிலாக்கோட்டை, நெல்லியாளம், சேரங்கோடு எல்லாமே பெரிய வனமாகவே இருந்தது. அதில் முழுக்க, முழுக்க பல்வேறு வகை தாவரங்களும், மரங்களும், அது சார்ந்த உயிரிகளும், பல்வேறு வனவிலங்குகளுமே நிறைந்திருந்திருக்கிறது. அதனூடே மேற்சொன்ன பூர்வ குடிகளே வசித்து வந்துள்ளனர். இந்த காடுகளுக்குள் அப்போதே நம்பாலாக்கோட்டை இருந்துள்ளது. அதை பனியர் சமூகத்தின் இனக்குழு தலைவர் வாலவன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்.

நிலம்பூர் ராஜா, சாமுத்திரி ராஜா பரம்பரையினர் வேட்டைக்கு இந்த காடுகளுக்குள் வரும்போது பழங்குடியினர்களை தங்களின் வேட்டைக்கு பயன்படுத்தியுள்ளனர். அதில் பழங்குடியினர் தலைவர்கள் ராஜாக்களுக்கு வேண்டிய வசதிகளை காடுகளுக்குள் செய்து கொடுப்பவனாக இருந்துள்ளனர். வேட்டைக்காக வந்தவர்கள் இந்த நிலத்தின் பீடபூமி தோற்றம், சின்ன சின்ன மலைகள், அதே அளவில் குழிந்து நெளியும் பள்ளத்தாக்குகள், தானிய வயல் மற்றும் பசுமை மாறாக்காடுகள், வேட்டைக்கு வேண்டிய அளவுக்கு வனவிலங்குகள் பார்த்துப் பார்த்து ஆசை வந்து விடுகிறது. பழங்குடிகளை ஆசை வார்த்தையால் பேசி அடிமையாக்குகிறார்கள். அதற்கு இசையாதவர்களை ஆயுதங்களை கொண்டு அடக்கி ஆள்கிறார்கள். இதில் நிலம்பூர் கோதவர்ம திருமலைப்பாடு ராஜா வம்சா வழிகள் வெற்றியும் கொள்கிறார்கள்.

'கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ராஜாக்கள் செய்து கொடுத்த பத்திர, பட்டயங்களில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் தந்த வகையில் நூறு யானைத் தந்தங்கள், நூறு மான்தோல்கள், பத்து புலிதோல்கள், ஆயிரம் சால் தானியங்கள், 100 பனியர்கள்' என்றெல்லாம் எழுதியிருப்பதைக் காண முடிகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது எந்த அளவுக்கு ராஜாக்கள், மந்திரிகள், ஜமீன்கள், நில உடமையாளர்கள் இப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடியிருப்பார்கள். அந்த அளவுக்கு இங்கே வனச்செல்வம் எவ்வளவு தூரம் விரிந்திருக்கும். அதில் எப்படியெல்லாம் பழங்குடிகளை அடிமைகளாக வைத்திருந்திருப்பார்கள் என அறிந்து கொள்ள முடிகிறது!’ என குறிப்பிடுகிறார் இந்த வரலாற்றை சொல்லி வரும் எம்.எஸ்.செல்வராஜ்.

இந்த ராஜாக்கள் வருகையால் இந்த காடுகளுக்குள் சின்னச் சின்ன ரோடுகள் உருவாகிறது. தனியார் வனத்துறையை ராஜாக்கள் ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் மூலம் மரம் வெட்டுவது, யானைகளை வேட்டையாடி அடக்கி, இவற்றைக் கடத்தும் பணிகளுக்கு பயன்படுத்துவது, இன்னும் பல வனச் செல்வங்களை நாட்டிற்குள் கொண்டு செல்வது நடக்கிறது. இந்த ராஜா வனத்துறை மக்களை அடக்கி ஆளும் கொள்கையை கடைப்பிடிக்கிறது. அடிமைகள் என்றாலே சொல்பேச்சு கேட்டால் உணவு கிடைக்கும். இல்லாவிட்டால் உயிர் போகும். அவை எல்லாம் நடந்தது.

இந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை வரிகேட்பதுதானே முறை. வனச்செல்வங்களுக்கு வரி விதிக்கிறார்கள். அந்த வரித்தொகை ராஜாக்களுக்கு செலுத்த முடியாத அளவு கடுமையானதாக இருக்கிறது. வரி கட்டாவிட்டால் அந்த நிலங்கள் எல்லாம் ஆங்கிலேயேர் கைக்குச் சென்று விடும் என்பதால் அப்போதைக்கு தொழில் முதலாளிகளை அணுகுகிறார்கள். ராஜாக்கள் தன்னிடமுள்ள நிலங்களில் சில பகுதிகளை இந்த தொழில் முதலாளிகளுக்கு 99 வருட குத்தகைக்கு விடுகிறார்கள்.

இந்த நிலங்கள் வுட் பிரயர் எஸ்டேட், சசக்ஸ் எஸ்டேட், ரவசன்டன் மலை எஸ்டேட், நான்சச் எஸ்டேட், மலையாள பிளாண்டேசன் எஸ்டேட், பெரிய சோலா எஸ்டேட், கோ-ஆப் சிஎஸ்டபிள்யூ எஸ்டேட், டீ எஸ்டேட்- இந்திய எஸ்டேட், மஞ்சுஸ்ரீ எஸ்டேட், கிளண்ட் ராக் எஸ்டேட்,, சில்வர் கிளவுட் எஸ்டேட் என 11 பெரிய தோட்டங்களின் நிறுவனங்களுக்கும் மற்றும் சில சிறிய தோட்டங்கள் எஸ்டேட்டுக்கும் கை மாறுகின்றன. இதில் முதலில் 9 கம்பெனிகளுக்கு லீசு கொடுக்கப்பட்டது 1845-ம் ஆண்டில். அதற்குப் பிறகு சில கம்பெனிகளுக்கு இதே முறையில் லீசு அளிக்கப்பட்டன.

இதே காலகட்டத்தில் நீலகிரிக் காடுகளின் பிறபகுதிகளில் ஆங்கிலேயேர்கள் வனத்துறையை ஏற்படுத்தி, காடுகளை அழித்து அதில் யூகாலிப்ட்ஸ், தேக்கு மரங்களை ஒரு பக்கம் நட்டதோடு, தேயிலை, காபி தோட்டங்களையும் உருவாக்க ஆரம்பித்தனர். அதே வேலையைத்தான் இங்கே ராஜாக்களின் நிலங்களை லீசு பெற்ற பெரு முதலாளிகளும் செய்யத் தொடங்கினர். இதனால் கோடிக்கணக்கான விலை மதிப்பு மிக்க மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன.

காடுகள் அழிந்ததும், காபி, மிளகு, தேயிலை போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்பட்டன. பெருந்தோட்டங்களாகவும் இப்பகுதிகள் மாற வனவிலங்குகள் பழைய சுதந்திரம் இல்லாமல் அஞ்சி நடுங்கின. பல அழிந்தன. நாடு சுதந்திரம் அடைகிறது. அந்த காலகட்டத்தில் நிலம்பூர் ஜமீன் வசம் இருந்த இந்த நிலங்கள் நிலம்பூர் ஜென்மி நிலங்கள் அல்லது நிலம்பூர் கோயிலக நிலங்கள் என்றே வழங்கப்பட்டன. இந்த வகையில் மட்டும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 88 ஏக்கர் நிலங்கள் நிலம்பூர் கோயிலக நிலமாக வகைப்படுத்தப்பட்டிருந்ததாம். 1956-ல் மொழி வாரி மாநிலமாக கேரளா- தமிழ்நாடு பிரிந்தது.

அதற்கு எல்லைக் கோடு பிரிக்கும்போதும் இந்த நிலங்களின் மீது அரசியல் சர்ச்சை எழுந்தது. அந்த சமயம் நிலம்பூர் கோயிலக நிலங்கள் கோதவர்மன் திருமலைப்பாடு வம்சாவழிகள் கையில் இருந்தாலும், அதை ஒட்டி இருந்த கூடலூர், பந்தலூர் வனப்பகுதிகள் நம்பூதிரி, மேனன் வகையறாவை சேர்ந்த நிலவுடமையாளர்களிடம் இருந்துள்ளது. இவர்கள் எல்லாம் கேரளத்தில் இடது சாரிகள் ஆட்சி நடந்ததால் தன் பகுதிகளை கேரளத்துடன் சேர்க்கக் கூடாது; தமிழகத்திலேயே இணைக்க வேண்டும் என கோருகிறார்கள்.

ஆனால் மலப்புரம், வயநாடு பகுதிகள் கேரளத்தில் உள்ளதால், அதைச் சார்ந்த, அதே சூழல் தன்மையுள்ள பீடபூமி பகுதியான கூடலூரும் அங்கேயே சேர வேண்டும் என்ற கோரிக்கை அங்குள்ள இடதுசாரிகளிடம் இருந்தது. இதற்காக நேரு, காமராஜர் எல்லாமே இங்கே வந்து திரைமறைவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் உள்ளன. இதை தமிழகத்தில் சேர்க்க வேண்டுமானால் இதற்கு இணையாக வேறு பகுதி சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடியை கேரளா கொடுத்தது. அதன் அடிப்படையில் இந்தப் பகுதியை தமிழகத்தில் சேர்த்துக் கொண்டு, அதற்குப் பதிலாக அதிகம் தமிழர்கள் வசிக்கும் பாலக்காட்டை கேரளத்தில் இணைத்து விட்டனர். இதனால் நிலம்பூர் கோயிலக நிலங்களில் சுமார் 39 ஆயிரம் ஏக்கர் கேரளத்திற்குள்ளும், 88 ஆயிரத்து 88 ஏக்கர் தமிழகத்திலும் அகப்பட்டது. இதில் மிகச் சொற்பமான நிலங்கள் மட்டுமே அப்போதும் கோயில பயன்பாட்டிலும், குத்தகை கம்பெனிகள் பயன்பாட்டிலும், கோயிலகத்தில் பண்ணை அடிமைகளாக, தொழிலாளர்களாக இருந்தவர்கள் பயன்பாட்டிலும் இருந்துள்ளது. மீதியெல்லாம் அடர் கானகம்தான். கானுயிர்கள் வாழும் பிரதேசமாகவே காட்சியளித்துள்ளது.

இந்த சூழ்நிலையில்தான் 1969-ம் ஆண்டு ஜமீன்தார் முறை ஒழிப்பு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகப்பகுதியில் உள்ள நிலம்பூர் கோயிலக நிலங்களை நிலம்பூர் ஜென்மி நிலங்களாக (செக்சன் -17ல் சர்ச்சைக்குரிய நிலங்கள் என) வகைப்படுத்தி, அதில் மக்கள் மற்றும் கம்பெனிகள் லீசு பயன்பாட்டில் உள்ள நிலங்களை தவிர மீதியை எடுத்து வனமாக அறிவிக்க பணிகளை முடுக்கி விடுகிறது தமிழக அரசு. இந்த நிலங்களை பயன்பாட்டிற்கு ஏற்ப செக்சன்-8, செக்சன்-9, செக்சன்-12, செக்சன்-13, செக்சன் -53 என்றெல்லாம் பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்படுகிறது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x