Published : 30 Nov 2017 10:14 AM
Last Updated : 30 Nov 2017 10:14 AM

கச்சேரி நடத்தி கலைவாணர் புகழ் பரப்பும் இசைக் கலைஞர்

கைச்சுவையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாள் நேற்று. இதுதான் இசைக் கலைஞர் சோழ.நாகரா ஜனைப் பற்றிப் பேசவேண்டிய நேரம்.

மதுரை விளாங்குடியைச் சேர்ந்தவர் சோழ.நாகராஜன். இவர், கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றையும், சிந்திக்கவைக்கும் அவரது திரைப் பாடல்களையும், நகைச்சுவை துணுக்குகளையும் வில்லுப்பாட்டு வடிவில் தற்போதைய தலைமுறையிடம் கொண்டு சேர்த்து வருகிறார். இவரது இசைக் கச்சேரிக்கு இசையமைக்கும் அத்தனை பேருமே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் என்பது இன்னுமொரு சிறப்பு.

கலைவாணரைப் பற்றியே சிந்தனை

தமிழகம் மட்டுமில்லாது உலக நாடுகளுக்கும் சென்று வில்லுப்பாட்டுப் போன்று ‘கதை சொல்லி இசைக் கச்சேரி’ நடத்தும் சோழ.நாகராஜன் படித்தது பி.ஏ., தமிழ் இலக்கியம். இவரது தேடலும், சிந்தனையும் கலைவாணரைப் பற்றியே இருந்ததால் வேறு எந்தத் தொழிலிலும் இவரால் நிலைகொள்ள முடியவில்லை. 2010-ல் கலைவாணர் நூற்றாண்டு வந்தபோது, தொழிலை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு கலைவாணர் புகழ் பரப்பும் இசைக் கச்சேரிகளை நடத்தப் புறப்பட்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் 108 மேடைகளில் தனது இசைக் கச்சேரிகளை நிகழ்த்தி இருக்கும் இவர், கலை வாணரின் வாழ்க்கை வரலாறை ‘அவர்தான் கலைவாணர்’ என்ற தலைப்பில் நூலாகவும் எழுதியுள்ளார். தற்போது கலைவாணர் குறித்த ஆவணப் படம் ஒன்றையும் எடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு சோழ.நாகராஜனை அவரது வீட்டில் சந்தித்தோம்.

ஈர்ப்பு ஏற்பட்டது

“சின்ன வயசுல எங்க அப்பா, அம்மாவோட சேர்ந்து நானும் கலைவாணர் பாடல்களைக் கேட்டிருக்கேன். ஆனா, அப்ப எனக்கு பாடல்களுக்கு அர்த்தம் புரியாது. பெரியவனான பிறகுதான், எவ்வளவு நல்ல விஷயங்களை எல்லாம் கலைவாணர் தன்னோட பாட்டுல சொல்லிருக்காருன்னு தெரிஞ்சுது. கலையுடன் சமுதாயக் குறைகளையும் கண்டு உணர்த்திய சமூக விஞ்ஞானி அவர். ‘காசிக்கு போனா கருவுண்டா என்கிற காலம் மாறிப்போச்சி. இப்போ ஊசி போட்டா உண்டாகுமென்கிற உண்மை தெரிஞ்சு போச்சி’ என்று அவர் அன்று சொன்ன விஞ்ஞான வளர்ச்சியை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படிப்பட்ட கலைஞரை கண்டதில்லை. அதனால்தான் கலைவாணர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது’’ என்கிறார் சோழ.நாகராஜன்.

தொடர்ந்து அவர் நம்மிடம் பேசுகையில், “தற்போதுள்ள தலைமுறைக்கு கலைவாணரைப் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்காது. எனவே, தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆளுமை இருந்தது என்பதை இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்த்தே ஆகவேண்டும் என எனக்கு நானே தீர்மானித்துக் கொண்டேன். அதற்கான பணிகளை கலைவாணர் நூற்றாண்டில் தொடங்கினேன்.

தேடித் தேடிச் சேகரித்தேன்

அதைத் தொட்டு உருவானதுதான் இந்த கச்சேரி. இதற்காக கலைவாணரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை தேடித் தேடிச் சேகரித்தேன். அவரை பற்றிய புத்தங்களை தேடிப்பிடித்து படித்தேன். கலைவாணருடன் நெருக்கமாக இருந்த பழம்பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் மூலமாக அவரைப் பற்றிய பல அரியவிஷயங்களை அறிந்து கொண்டேன். இப்படி, கலைவாணரோடு இருந்தவர்கள், அவருடன் நடித்தவர்கள், உறவினர்கள், வாரிசுகள் என அத்தனை பேரையும் சந்தித்துப் பேசினேன். இப்படி, இரண்டு ஆண்டுகளாக நான் தேடித் தேடி சேகரித்த தகவல்களை வைத்து, கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டு பாடல் போலத் தொகுத்தேன். அதையும் அவரது கருத்துள்ள பாடல்களையும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இசைக்கச்சேரி வாயிலாக இளம் தலைமுறைக்குச் சொல்லி வருகிறேன்.

இதுவரை, மலேசியா, மஸ்கட், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளிலும் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் கலைவாண ரின் புகழைச் சொல்லி ஒரு ரவுண்டு வந்துவிட்டேன். எங்களது இசைக் குழுவில் உள்ள கீ போர்டு ராஜதுரை, தபேலா எபினேசர், ஆல்ரவுண்டர் முஸ்தபா, இன்னொரு இசைக்கலைஞர் மாரிச்சாமி இவர்கள் அத்தனை பேருமே பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகள்.இவர்களுக்குப் பார்வை மட்டும்தான் இல்லை. ஆனால், இசையை கரைத்துக் குடித்தவர்கள்.

கச்சேரியில் கலைவாணரின் பாடல்களை பாடுவதோடு மட்டும் நிறுத்த மாட்டோம். அவரது பிறப்பு வளர்ப்பு, நாடக கம்பெனியில் சேர்ந்த கதை, அவரது சினிமா வாழ்க்கையில் நடந்து இதுவரை வெளிவராத சம்பவங்கள் இவற்றுடன் கலைவாணர் நினைத்த சமூக சீர்திருத்தங்களையும் வில்லுப்பாட்டு போல, பாடல்களுக்கு இடையிடையே சுவாரசியமாக சொல்வேன்.

இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் ஆதரவு கொடுத்து மக்கள் எங்களை உற்சாகப்படுத்துறாங்க. மூத்தவர்கள், ‘அடடா.. எங்களை கலைவாணர் காலத்துக்கே கொண்டு போயிட்டீங்கப்பா..’ என்பார்கள். இளையவர்கள், ‘தமிழ் சினிமாவில் இப்படியொரு கலைஞர் இருந்தாரா?’ என்று ஆச்சரியப்படுவார்கள்.

நவம்பர் 29-ல் கலைவாணர் பிறந்த நாளுக்கும், ஆகஸ்ட் 30-ல் நினைவு நாளுக்கும் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள, பலரும் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள். இதை நான் பெருமையாக கருதுகிறேன். எனது ஆயுளுக்குள் உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளுக்கும் சென்று கலைவாணரின் புகழைப் பரப்ப வேண்டும் என்பதுதான் எனதுஒரே லட்சியம்” என்றார்.

லட்சியம் வெல்லட்டும்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x