Published : 24 Nov 2017 10:07 AM
Last Updated : 24 Nov 2017 10:07 AM

சென்னை பழைய கட்டிடங்கள்.. பதுங்கியிருக்கும் ஆபத்து..!

ழைக் காலங்களில் பெருகும் தண்ணீரால் மட்டுமல்ல, பழைய கட்டிடங்களாலும் மக்களுக்கு பேராபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அண்மையில் கொட்டிய மழைக்கு சென்னையில் ஒருவாரத்தில் மட்டுமே பல இடங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் அறக்கட்டளையின் கட்டிடம், எழிலகம் வளாகத்தில் இருந்த கொதிகலன் அலுவலகக் கட்டிடம், அண்ணா சாலையில் உள்ள மதரசா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர் இத்தனையும் மழைக்கு இடிந்துவிழுந்தன. நல்லவேளையாக இந்தச் சம்பவங்களில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை.

ஆனால் இதற்கு முன்பு, கோவை மாவட்டம், சோமனூரில் பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் பலியானார்கள். நாகை மாவட்டம், பொறையாரில் போக்குவரத்துக் கழக பணிமனையின் ஓய்வு அறை இடிந்துவிழுந்ததில் எட்டுப் பேர் பலியா னார்கள். திருச்சி மலைக்கோட்டை அருகே மூன்று மாடிக் கட்டிடம் இடிந்துவிழுந்து மூன்று பேர் பலியானார்கள். மழை இத்தோடு நிற்கப் போவதில்லை பிப்ரவரி வரைக்கும் விட்டு விட்டுத் தொடரும் என்கிறார்கள். இந்த நிலையில், இனிவரும் காலங்களில் பழைய கட்டிடங்களால் ஏற்படும் ஆபத்துக்களை எப்படி தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.

சென்னையில் திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, மண்ணடி, ஜார்ஜ் டவுன், பாரிமுனை, மின்ட், கொண்டித்தோப்பு, ராயபுரம், புரசைவாக்கம், அண்ணாசாலையின் சில பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் குடி யிருப்பு வீடுகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் என நூறாண்டுகளைக் கடந்த பழைய கட்டிடங்கள் ஏராளம் இருக்கின்றன. இதேபோல், எழும்பூரில் அரசு அருங்காட்சியகம், அரசு மகப்பேறு மருத்துவமனை, நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாக கட்டி டங்கள், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தின் மாணவர் விடுதி உள்ளிட்ட கட்டிடங்கள், ஜார்ஜ் டவுனில் இருக்கும் சட்டக் கல்லூரி கட்டிடம் ஆகியவை தற்போது நிறைய விரிசல்களுடன், சுவர்களில் மரம், செடிகள் வளர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கின்றன.

இவை தவிர, எழிலகம், மெட்ராஸ் வங்கிக் கட்டிடம், அடையார் கிளப், பாரிமுனையில் இருக்கும் தபால் நிலையக் கட்டிடம் மற்றும் அரசு எழுது பொருள்கள் கட்டிடம் (பழையது) உள்ளிட்ட அரசு கட்டிடங்களும் உள்ளன. சுமார் 150 ஆண்டுகளை கடந்த இந்தக் கட்டிடங்களின் உறுதியும் கேள்விக்குறியே.

கட்டிடங்கள் வலுவிழப்பது ஏன்?

இதுபோன்ற பழைய கட்டிடங்களை புனரமைத்து ஆபத்தில்லாமல் நிலைநிறுத்த முடியுமா என்று தமிழக பொதுப்பணித் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பனிடம் கேட்டோம். “சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்கள் பெரும்பாலும் ‘மெட்ராஸ் டெரஸ்’ பாணியில் கட்டப்பட்டவை. இவை, பில்லர் போடாமல் அடித்தளம் மட்டுமே போடப்பட்டு எழுப்பிய கட்டிடங்கள். இத்தகைய கட்டிடங்களில் மூன்று தளங்கள் மட்டுமே அமைக்க முடியும். இந்தக் கட்டிடங்களை சுவர்கள் மட்டுமே தாங்கி நிற்கின்றன.

மழைக் காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயரும் போது அடிமனையை தாங்கும் மண்ணின் தாங்கு சக்தி குறைகிறது. வெளிப்புறச் சுவர்களை ஒட்டி கீழே மழை நீர் தேங்குவதால் அடிமனை மண் தளர்வடைகிறது. தொடர் மழையில் நீரை உறிஞ்சுவதால் வெளிப்புறச் சுவர்களும் உறுதி இழக்கின்றன. பொதுவாக, 50 ஆண்டுகள் கடந்துவிட்டாலே அந்தக் கட்டிடங்களை மறு புனரமைப்பு செய்ய வேண்டும். அப்போது. இடியும் நிலையில் இருந்தால் அந்தக் கட்டிடங்களை இடித்துவிடுவதே பாதுகாப்பானது.

எஃகு தூண்கள்

ஓரளவு தாங்கும் சக்தி இருக்கிறது என்றால் தரைத் தளத்தில் உள்ள பாரம் தாங்கும் சுவர்களின் கீழ் பகுதியில், 3 - 3.5 மீட்டர் இடைவெளியில் விட்டம் வடிவிலான கான்கிரீட் சுவர்களை முதலில் நிறுவ வேண்டும். அதன் பின்பு சுவர்களின் உட்பகுதியில் நீள் பலகை வடிவிலான எஃகு தூண்களை சொருகி கான்கிரீட் விட்டத்துடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் சுவர்களின் தாங்கும் திறன் அதிகரிக்கும். பின்பு இருபக்கமும் சுவர்களின் மீதுள்ள சுண்ணாம்பு கலவையைப் பெயர்த்துவிட்டு, செங்கல் சுவர்களின் சந்து பொந்துகளில் நுண் கான்கிரீட் கலவையைக் கொண்டு அடைத்து, அதன் மீது செயற்கை இழைகள் கலந்த சிமென்ட் கலவையை 15 மி.மீட்டர் கனத்துக்கு பூச வேண்டும். இதன் மீது ஏழு நாட்கள் நீர் தெளித்து வந்தால் பக்கவாட்டு சுவர்கள் வலுவடையும்.

வெளிப்புற சுவர்களில் தரைமட்டத்துக்கு கீழாக அடிமண்ணை கெட்டிப்படுத்தி, அதன் மீது 300 மி.மீட்டர் கனத்துக்கு கான்கிரீட் போட வேண்டும். இதன் மூலம் மழை நீர் அடித்தளத்தை பாதிக்காமல் பாதுகாக்கலாம். தண்ணீர் படும் வாய்ப்புள்ள வெளிப்புறச் சுவர்களில் தண்ணீரை உறிஞ்சாத வகையில், ஈரத்தை விலக்கும் எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பூசலாம்.

புதிய கட்டுமானம் கூடாது

எக்காரணம் கொண்டும் இதுபோன்ற பழைய கட்டுமானப் பரப்பில் புதிய கட்டுமானங்களை எழுப்பக் கூடாது. மொட்டை மாடியில் பழைய செம்மண் ஓடுகளை நீக்கிவிட்டு மொசைக் கற்களை அமைத்தால் மேற்பரப்பில் தண்ணீர் ஊறி கட்டிடத்தின் உறுதியைக் கெடுக்காமல் தடுக்கலாம். இதையெல்லாம் முறையாகச் செய்தால் மழைக் காலங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபரீதங்கள் நிகழ்வதை தடுக்கலாம்” என்றார் வீரப்பன்.

விபரீதங்கள் ஏற்பட்ட பிறகு ஏன் ஏற்பட்டது என விசாரித்துக் கொண்டிருக்காமல் அரசின் பொறுப்பிலுள்ள பழமையான கட்டிடங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் இந்த நடவடிக்கை இப்போது அவசரத் தேவை.

நிலநடுக்கம்  வந்தால்..

தொடர் மழை மட்டுமல்ல.. லேசான நிலநடுக்கங்களும் பழைய கட்டிடங்களை எளிதாகப் புரட்டிப் போட்டுவிடும். நிலநடுக்கத்தில் ஐந்து வகை இருக் கிறது. இதில், 5-வது வகை நிலநடுக்கம் அதிக பாதிப்பு உடையது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல் வேறு பகுதிகள் 3-ம் வகை நிலநடுக்க வளையத்தில் இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் 6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கே சென்னையில் உள்ள பெரும்பாலான பழைய கட்டிடங்கள் பொலபொலத்துவிடும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

படங்கள்: ஜி.ஜே.சோனியா / டி.பவித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x