Published : 21 Nov 2017 03:15 PM
Last Updated : 21 Nov 2017 03:15 PM

முகவரி தேடும் முகங்கள் 1: ரஜினியிடம் சண்டை போட்டு வாங்கிய தங்கச் செயின்! - அனுஷ்கா முருகன்

துணை ரொம்பவே முக்கியம். அது வாழ்க்கையாகட்டும் வழியாகட்டும்... அந்தத் துணை தரும் பாதுகாப்பும் அன்பும் மிக மிக அவசியம். இவற்றுக்கெல்லாம் அஸ்திவாரமாக இருப்பது புரிதல். அப்படிப் புரிந்தவர் துணையாகி விட்டால், வாழ்க்கைப் பயணமும் சிறக்கும்; வழிப் பயணமும் இனிக்கும்! 'அனுஷ்கா' முருகன் எனும் கார் டிரைவர், புரிந்து உணர்ந்து செயல்படும் இனிய சாரதி என்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

''வண்டில ஏறுறவங்க ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. சிலருக்கு எதுனா பிரச்சினைங்க இருக்கும். பிரச்சினைங்கறது மனசு சம்பந்தப்பட்டதாகட்டும், உடல் சம்பந்தமாகட்டும்... அந்தப் பிரச்சினைகள் என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்ல. 'ஏதோ பிரச்சினை...'னு மட்டும் புரிஞ்சுக்கணும். அப்படிப் புரிஞ்சுக்கிட்டு வண்டியை ஓட்டணும். அதுவும் எப்படி... வண்டியை நாமதான் ஓட்றோம். அதனால நம்ம கவனம் வண்டி ஓட்றதுலதான் இருக்கணும். வண்டில வர்றவங்க, வண்டி போறதுல கவனம் செலுத்தற மாதிரி ஓட்டவே கூடாது. அது அவங்களுக்கு இன்னும் டென்ஷன்தான்'' என்று முருகன் சொல்வது, சினிமாக்காரர்களுக்கு வண்டி ஓட்டுவோருக்கு மட்டும் அல்ல... மொத்தமாக வாகனத்தை இயக்குவோருக்கான விஷயம்!

''ஆரம்பத்துல சினிமால, சாப்பாட்டு வண்டிதான் ஓட்டிக்கிட்டிருந்தேன்னு சொன்னேனில்லையா. ஒருபக்கம் எல்லாருக்கும் வயிறார உணவு கொடுக்கற வேலையைப் பாக்கறோம்னு ஒரு பூரிப்பு இருந்தாலும் ஒரு சராசரி ஆளைப் போல, ஸ்டாருங்களுக்கெல்லாம் நாம கார் ஓட்ற காலம் வராதானு ஏக்கமாவும் இருக்கும். அந்த சமயத்துலதான் ரஜினி சாரோட 'முத்து' படத்துல வேலை பார்த்தேன். அப்பவும் சாப்பாட்டு வண்டிதான். ஆனா அதுல ஒரு சந்தோஷமும் பெருமையும் கிடைச்சிச்சு.

அதாவது, 'முத்து' படத்துக்கு முன்னாடி, எப்படின்னு தெரியலை. ஆனால், 'முத்து' படம் ஷூட்டிங் முடிஞ்சதும், படத்துல வேலை பார்த்த எல்லாருக்கும் தங்கச் செயின் பரிசாக் கொடுத்தாரு ரஜினி சார். ஷூட்டிங்கல் பல தடவை தூரமா நின்னு தலைவரை எத்தனையோ முறை பாத்திருக்கேன். ஆனாலும் செயின் வாங்கறதுக்குப் பக்கத்துல போய் நின்னதும், உடம்பு உதறிப்போட்ருச்சு. பேசவே வரலை. என்ன பேசணும்னும் தோணலை. அவரோட கண்ணையும் அப்படித் திரும்பி இப்படி டக்குன்னு பாக்கற வேகத்தையும் பாத்து, அப்படியே நின்னுட்டேன். தலைவர் எப்பவும் கெத்துதாம்பானு நண்பர்கள்கிட்டயும் வீட்லயும் சொல்லிச் சொல்லிப் பூரிச்சுப் போனேன்.

'எந்திரன்' படம் ஷூட்டிங். அதாவது 'எந்திரன்' ஒண்ணு. சென்னைக்குப் பக்கத்துல அவுட்டர்ல, ஷூட்டிங். மத்த நடிகருங்களை, டெக்னீஷியன்களைன்னு கூட்டிட்டுப் போயிட்டு கொண்டுபோய் விடுறதுதான் நம்ம வேலை. ஒருநாள்... என்னாச்சு தெரியுங்களா.

மதியம் லஞ்ச் டைம். ரஜினி சார், ஷங்கர் சார், கேமராமேன் ரத்னவேல் சார் மூணு பேரும் நிக்கிறாங்க. என் காரைக் காட்டி ஏதோ பேசிக்கிறாங்க. விறுவிறுன்னு கார்கிட்ட வந்தாங்க. சட்டுன்னு கார் விட்டு இறங்கி, நின்னேன். மூணுபேரும் கார்ல ஏறி உக்காந்துக்கிட்டாங்க. 'இங்கேதான் சாப்பிடப் போறோம். பரவாயில்லதானே'னு ஷங்கர் சார் கேட்டார். சார், என்ன சார் கேக்கறீங்கன்னு சொன்னேன்.

சரி... அவங்க சாப்பிடட்டும்னு காரை விட்டுக் கொஞ்சம் தள்ளிப் போய் நிக்கிலாம்னு போனேன். உடனே கார் கண்ணாடியைத் தட்டுற சத்தம். ரஜினி சார், காருக்குள்ளேருந்து கண்ணாடியைத் தட்டி என்னை கூப்பிட்டாரு. ஓடிப்போய் 'சார்'னு நின்னேன். 'எங்கே போறே?'னு கேட்டார். 'ஒண்ணுமில்ல சார். சாப்பிடும்போது எதுனாப் பேசுவீங்க. பேசிக்கிட்டே சாப்பிடுவீங்க. அதான் சார்... கொஞ்சம் தள்ளி நிக்கலாமேன்னு...' சொல்லி முடிக்கலை. அதுக்குள்ளே ரஜினி சார், 'போயிருவியா. போயிட்டா யார் எங்களுக்குப் பரிமாறுறது. வாப்பா, வந்து பரிமாறு'ன்னு சொல்ல... 'இதைவிட என்ன பாக்கியம் வேணும் சொல்லுங்க. அந்த எளிமைதான் ரஜினி சார்' என்று உருகுகிறார் முருகன்.

ஆனா... அதுக்கு முன்னாடி ஒரு சம்பவம் 'படையப்பா' படத்தின் போது நடந்துச்சு. அதைச் சொல்றதுக்கு முன்னாடி, சாப்பிட்டிட்டுருக்கும் போது, 'இவரை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே'னு ஷங்கர் சார்கிட்டக் கேட்டார். 'ஏம்பா... நாம முன்னாடி சந்திச்சிருக்கோமா?' னு கேட்டார். நான் கொஞ்சம் தயங்கி, மென்னு முழுங்கி, 'ஆமாம் சார். 'படையப்பா' படம் முடிஞ்ச சமயத்துல... ராகவேந்திரா கல்யாண மண்டபத்துல'..னு நடந்த விஷயத்தைத் திக்கித் திணறிச் சொன்னேன். அவரோட ஸ்டைல்ல பலமா சிரிச்சார் பாருங்க... ஸ்பாட்ல எல்லாரும் திரும்பிப் பாத்தாங்க.

சரி.... 'படையப்பா' விஷயத்துக்கு வரேன். படம் மைசூர்ல ஷூட்டிங். இந்த முறை என்னன்னா, படமெடுத்த ரீல் பெட்டி, ரயில்ல சென்னைக்கு வரும். நான் ஸ்டேஷன் போய், பெட்டியை எடுத்துக்கிட்டு, எடிட்டர்கிட்டக் கொண்டுபோய் கொடுப்பேன். டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் சார் எனக்குப் போன் போடுவார். அதன்படி பொட்டியைக் கொடுக்கறதும் எடிட் பண்ணினப் பெட்டியை மைசூருக்கு அனுப்பி வைக்கறதுமா இருந்தேன்.

மைசூர்ல வேலை செய்யும்போது திடீர்னு ஜூரம் வந்துருச்சு. உடம்புக்கு முடியலை. அதான் சென்னைலயே இந்த வேலை எனக்கு. ஆனா... படையப்பா பட ஒர்க் முடிஞ்ச கையோட, வழக்கம் போல ரஜினி சார், ராகவேந்திரா மண்டபத்துல எல்லாருக்கும் தங்கச் செயின் கொடுத்தார்.

இந்த முறை செயின் மட்டுமில்லாம, 'படையப்பா' டைட்டில்ல ஒரு வேல் இருக்குமே. அதுமாதிரி ஒரு வேல் டாலரும் கொடுக்கறார்னு சொன்னாங்க. ஆனா என்ன சோகம்னா... தங்கச் செயின் யார் யாருக்குங்கற லிஸ்ட்ல எம்பேரைச் சேக்கலை. உடம்பு சரியில்லேன்னு சென்னைல வேலை பாத்துக்கிட்டிருந்ததால, என் பேரை விட்டுட்டாங்க போல. ஆனா எனக்கு செம கோபம். கோல்டு செயின், காசு மதிப்பையெல்லாம் விடுங்க. தலைவர் கையால செயின் வாங்க முடியலியேனு பயங்கர ஆத்திரம்.

ராகவேந்திரா மண்டபத்துக்குள்ளே போனேன். மாடில செயின் கொடுத்திட்டிருந்தார் தலைவர். இங்கே கீழே எல்லார்கிட்டயும் புலம்பிக்கிட்டே இருந்தேன், சத்தமா! எட்டிப் பாத்துட்டு என்னன்னு கேட்டார். யாருன்னு விசாரிச்சார். வரச்சொல்லுங்கன்னார். கூப்பிட்டாங்க. போனேன். 'வாய்யா வாய்யா... அதெப்படி வேலை செஞ்ச உனக்கு இல்லாமப் போகும். இந்தா வைச்சுக்க. இப்ப சத்தம்லாம் போடமாட்டியே' ன்னு சொல்லி வழக்கம் போலச் சிரிச்சார் சூப்பர்ஸ்டார்.

இப்ப... 'காலா' படத்துக்காகவும் நம்ம வண்டி ஓடுது. வெவ்வேற ஆளுங்களை ஏத்திக்கிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு போய் விட்டு, கூட்டிட்டுப் போகணும். அப்படி ஒருநாள் ஸ்பாட்ல ஒருத்தங்களை ஏத்தறதுக்காக கார் எடுக்க நடந்து போயிட்டிருந்தேன். தூரத்துல ரஜினி சார் நின்னுட்டிருந்தார். அங்கேயிருந்து என்னைப் பாத்தார். கையசைச்சார். வணக்கம் சொன்னேன். நல்லாருக்கியாங்கற மாதிரி ஜாடைலயே கேட்டார். நானும் ஜாடைலயே சொன்னேன். நல்லா இருங்கற மாதிரி கையைத் தூக்கினார். இதான் தலைவர் ஸ்டைல்.

'இதெல்லாம் நமக்கு வரம் சார்'...என்று நெக்குருகிப் போகிறார் 'அனுஷ்கா' முருகன்.

-முகம் பார்ப்போம்

கா.இசக்கிமுத்து, தொடர்புக்கு: esakkimuthu.k@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x