Published : 22 Nov 2017 10:42 AM
Last Updated : 22 Nov 2017 10:42 AM

எட்டு வருசமா பழைய படம் தான்: கோவை ராயல் தியேட்டர் வெற்றி ரகசியம்

கோ

வை ராயல் தியேட்டர் முகப்பில் ‘ரிக்ஷாக்காரன் எம்.ஜி.ஆர்’ போஸ்டரில் சிரிக்கிறார். அந்தப் போஸ்டருக்கு மாலை போட்டு மகிழ்ந்திருக்கிறார்கள் மக்கள் திலகத்தின் ரசிகர்கள். இன்னமும் எம்.ஜி.ஆர். படங்களை விழா எடுத்துக் கொண்டாடும் ரசிகர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று வியந்தபடி பழ மையான அந்தத் தியேட்டரின் உள்ளே நுழைகிறோம்.

டிக்கெட் கவுன்டரில் சிலர் வரிசையில் காத்திருக்கிறார்கள்; ரிக்ஷாக்காரனுக்கு டிக்கெட் எடுக்க! ‘படம் போட்டாச்சா?’ வரிசைக்கு கடைசியாக வந்த ஒருவர் பரபரக்கிறார்.. ‘இப்பத்தான் போட்டாங்க..’ என்று அவருக்கு இன்னொருவர் ஆறுதல் சொல்கிறார். சீக்கிரமா டிக்கெட்ட குடுத்துவிடுங்கப்பா.. ஃபர்ஸ்ட் சீன்ல வாத்தியார் (எம்.ஜி.ஆர்) வர்றத பார்த்தே ஆகணும்; மிஸ் பண்ணக்கூடாது’ என்று அவசரம் காட்டுகிறார் முன்னவர்.

பூமாரி பொழிந்தார்கள்

அங்கு நிற்கும் காவலாளியிடம், “தியேட்டர் மேனேஜர் இருக்காரா..?” என்றோம். “தோ.. டிக்கெட் குடுத்துட்டு இருக்காரு பாருங்க.. அவருதான் மேனேஜர்” என்கிறார் காவலாளி. சற்று நேரக் காத்திருப்புக்குப் பிறகு, மேனேஜரிடம் போய் மெல்லப் பேச்சுக் கொடுத்தோம். “பழைய மாதிரித்தான் டிக்கெட் குடுத்துட்டு இருந் தோம்.

ஒரு வாரமாத்தான் கம்ப்யூட்டருக்கு மாத்திருக்கோம். சிஸ்டத்துல டிக்கெட் போட மத்தவங்க இன்னும் பழகல. அதனாலதான் நானே டிக்கெட் போடுறேன். நீங்க ஒண்ணு பண்றீங்களா.. சித்த நேரம் உள்ள போயி படம் பாத்துட்டு வாங்க. அதுக்குள்ள நான் இந்த வேலைய முடிச்சுடுறேன்; அப்புறம் பேசுவோம்” என்றார் மேனேஜர்.

சரி என தலையாட்டிவிட்டு அரங்கின் உள்ளே நுழைகிறோம். திரையில் சைக்கிள் ரிக்ஷாவில், சரிந்த தொப்பியுடன் பறந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். வில்லன் கோஷ்டியை விரட்டி அடித்த அவருக்கு, முன்னிருக்கை ரசிகர்கள் பேப்பர் துண்டுகளால் பூமாரி பொழிந்தார்கள். அவ்வப்போது விசில் சத்தமும் அரங்கைப் பிளந்தது. அவர்களோடு சேர்ந்து நாமும் கொஞ்ச நேரம் எம்.ஜி.ஆரை ரசித்து விட்டு வெளியில் வந்தோம்.

தினமும் நாலு ஷோ ஓடுது

அதற்குள்ளாக தனது வேலைகளை முடித்திருந்த மேனேஜரிடம், “ரொம்ப வருசமா உங்க தியேட்டர்ல பழைய படங்களை மட்டுமே போடுறீங்களே.. நல்லா ஓடுதா?” என்று கேட்டோம். “என்ன இப்படிக் கேட்டுட்டீங்க.. ரிக்ஷாக்காரன் போட்டு ரெண்டு வாரமாச்சு. இன்னமும் கூட்டத்தப் பாத்தீங்கள்ல.. தினமும் நாலு ஷோ ஓடுது. அதுல ரெண்டு நாளு அத்தனை காட்சிகளும் ஹவுஸ் ஃபுல். மத்த நாள்களிலும் கூட்டத்துக்கு குறைவில்ல. கடந்த ஒரு வருசத்துல ஒளிவிளக்கு படத்தை மட்டுமே மூணு தடவ போட்டாச்சு. ஒவ்வொரு தடவையும் ஓயாத கூட்டம்தான். மறுபடியும் போட்டாலும் பாப்பாங்க போலிருக்கு” என்று மகிழ்ச்சி பொங்கினார் மேனேஜர்.

“கோயமுத்தூர்லயே பெரிய தியேட்டர் இது. 1,400 இருக்கை உள்ள தியேட்டர்னு சொல்லுவாங்க. இதுல முந்நூறு, நானூறு இருக்கைகள் மட்டுமே ரொம்பினா எப்படிக் கட்டுபடியாகும்?” என்ற கேள்விக்குப் பதில் சொன்ன மேனேஜர், “1,400 சீட் இருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்ப அதை 605 சீட்டுகளா குறைச்சுட்டோம்” என்றார்.

அண்ணாருக்கு எம்.ஜி.ஆர் நெருக்கம்

கோவையில் 1940-களில் பிரபலமானது ஆர்.எச்.ஆர் எனப்படும் ராயல் ஹிந்து ரெஸ்டாரண்ட். இதன் உரிமையாளர் ஜி.ரத்தினவேல். இவரது தந்தை எம்.ஏ.குருசாமி நாடார். இவரது குடும்பத்தாரால் 1946-ல் தொடங்கப்பட்டதுதான் ராயல் தியேட்டர். கோவையின் பழமையான தியேட்டர்கள் எல்லாம் வணிக வளாகங்களாகவும் திருமண மண்டபங்களாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறிவிட்ட நிலையில், ரயில் நிலையத்தின் அருகிலிருக்கும் ராயல் தியேட்டர் மட்டும் இன்னமும் பழைய திரைப்படங்களை மட்டும் திரையிட்டுக் கொண்டிருக்கிறது.

“இது என்ன மாதிரியான தவம்?” என்று கேட்டதற்கு, “தவமெல்லாம் ஒன்றுமில்லை.. எங்களுக்கு வசதியாக இருக்கிறது அதனால் பழைய படங்களை மட்டும் திரையிடுகிறோம்” என்று ஆரம்பித்தார் தியேட்டர் உரிமையாளர் ரத்தினவேல். “அந்தக் காலத்தில் சிவாஜி, எம்ஜி.ஆர் இருவரிடமுமே நெருக்கமாக இருந்த குடும்பம் எங்களுடையது. எம்.ஜி.ஆர் கோவை வந்தால் பெரும்பாலும் எங்க ஓட்டலில் தான் தங்குவார். எங்க அண்ணார் அவருக்கு ரொம்ப நெருக்கம்.

கடந்த எட்டு வருசமாத்தான்..

முன்பு, எங்க தியேட்டரில் புதுப் படம் மட்டும்தான் போடுவோம். கடந்த எட்டு வருசமாத்தான் பழசுக்கு மாறிட்டோம். முன்ன எல்லாம் வருசத்துக்கு 15 படங்கள் தான் ரிலீஸ் ஆகும். அதில் எந்தப் படம் வசூலில் சாதனை படைக்கிறதோ அந்தப் படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு மட்டுமே புதுப் படங்களைக் குடுப்பாங்க. அப்படி புதுப் படங்களைத் திரையிடுறதுல நாங்க முன்னணியில் இருந்தோம். எங்களுக்குப் படங்கள் குடுக்குறதுக்கு சினிமா கம்பெனிகள் போட்டி போடுவாங்க. நாங்களும் செலக்ட் பண்ணி படங்களை எடுப்போம்.

ஆனா இப்ப, ஒரு படத்தை எத்தனை தியேட்டரில் வேண்டுமானாலும் ரிலீஸ் பண்ற அளவுக்கு டெக்னாலஜி வந்துருச்சு. அதுக்கு ஏத்த மாதிரி தியேட்டர்ளையும் நவீனப்படுத்திருக்காங்க. அதேசமயம், பழைய படங்களும் இப்ப டிஜிட்டல் வடிவில் வருது. ஆனாலும் இன்னமும் பழைய படங் கள் ஃபிலிம்லயும் கிடைக்குது. எங்க தியேட்டரில் ஃபிலிம்லயும் டிஜிட்டல் முறையிலும் படங்களை திரையிடும் வசதியை ஏற்படுத்தி வெச்சிருக்கோம். மற்றபடி, வேறெந்த நவீன வசதியும் ஏற்படுத்தல.

நட்டம் உண்டாக்கியதில்லை

சொன்னா நம்ப மாட்டீங்க.. ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படம் எங்க தியேட்டர்ல ரெண்டு வாரம் ‘ஹவுஸ் ஃபுல்’லா ஓடுச்சு. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை அதிகமா திரையிட்டாலும் கமல், ரஜினி படங்களையும் அப்பப்ப போடுவோம். எந்தப் படமுமே எங்களுக்கு நட்டம் உண்டாக்கியதில்லை” என்று சொன்னார் ரத்தினவேல்.

ஓல்டு ஈஸ் கோல்டு என்று சும்மாவா சொன்னார்கள!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x