Published : 22 Nov 2017 10:55 am

Updated : 22 Nov 2017 13:48 pm

 

Published : 22 Nov 2017 10:55 AM
Last Updated : 22 Nov 2017 01:48 PM

கழிப்பறை கட்ட களமிறங்கிய கருண்: ஒரு ரேடியோ ஜாக்கியின் உன்னத முயற்சி

உலக அளவில் 450 (4.5 பில்லியன்) கோடி மக்களுக்கு இன்னமும் கழிப்பறை வசதி கிடைக்கவில்லை என் கிறது ஒரு ஆய்வு. ரேடியோ ஜாக்கியான பி.கருண் எடுத்துவரும் முயற்சியால் இவர்களில் நூறு குடும் பங்களுக்கு விரைவிலேயே கழிப்பறை வசதி கிடைக்கப் போகிறது.

100 கழிப்பறைகள்


பண்பலை ஒலிபரப்பான ‘பிக் எஃப்.எம்’மின் ரேடியோ ஜாக்கி கருண். இயல்பாகவே சமூக சேவகரான இவர், நவம்பர் 19 சர்வதேச கழிப்பறை தினத்தை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள தலையாரிப் பாளையத்தில் வசிக்கும் இருளர் குடும்பங்களுக்கு 21 கழிப்பறைகளை கட்டித்தர பூமி பூஜை போட்டிருக்கிறார். இவரது முயற்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் சிலவும் ஆதரவுக் கரம் நீட்டியதால் இந்த கிராமத்திலேயே இன்னுமொரு 19 கழிப்பறைகளையும் திருத்தணி தாலுகா மேலக்கடம்பூர் கிராமத்தில் 18, எல்லப்புரம் தாலுகா தோம்பரம் பேடு கிராமத்தில் 22, திருவாலங்காடு தாலுகா ராமபுரத்தில் 20 என மொத்தம் 100 கழிப்பறைகளைக் கட்ட திட்டம் வகுத்திருக்கிறார் கருண். பிப்ரவரி இறுதிக்குள் இந்த கழிப்பறைகள் அனைத்தும் கட்டிமுடிக்கப்பட இருக் கின்றன.

“சென்னையில் இருக்கும் உங்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்திலிருக்கும் எளிய மக்களுக்கு கழிப்பறை கட்டித் தரவேண்டும் என்ற எண்ணம் ஏன், எப்படி உதித்தது?” என்று கருணிடம் கேட்டோம். காரணத்தை விளக்கினார் கருண். “ரேடியோ ஜாக்கியாக இருந்தாலும் சமயமும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் என்னால் ஆன சமூக சேவைகளையும் செய்து வருகிறேன். அப்படித்தான் பட்டாபிராம் அருகே ஒரு பள்ளிக்கு 8 கழிப்பறைகளை அண்மையில் கட்டிக் கொடுத்தோம்.

எனக்கு அழுகையே வந்துருச்சு

சமுதாயப் பணிகளில் ஈடுபடுவதால் தொண்டு அமைப்புகளுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. அண்மையில், ‘தனிரசா ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தின் இணை அமைப்பாளர் இந்துப்பிரியாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, தலையாரிப்பாளையத்தில் சுமார் 70 இருளர் குடும்பங்கள் வசிக்கிறார்கள். ஆனால், அந்த மக்களுக்கு கழிப்பறை வசதி கிடையாது. தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க திறந்த வெளிகளைப் பயன்படுத்துவதால் அந்த மக்கள் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாகிட்டு வர்றாங்க. முடிஞ்சா அவங்களுக்கு கழிப்பறைகளைக் கட்டிக்குடுக்க ஏதாவது ஏற்பாடு பண்ணிக் குடுங்க’ன்னு சொன்னாங்க. அதோட தொடர்ச்சிதான் இந்த முயற்சி” என்று நிறுத்தினார் கருண்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்துப்பிரியா சொன்ன தலையாரிப்பாளையத்துக்கு நானே நேரில் போனேன். அங்குள்ள மக்களிடம் பேசினேன். கழிப்பறை இல்லாம தாங்கள் படும் துயரங்களை அந்த மக்கள் சொன்னதை எல்லாம் கேட்டு எனக்கு அழுகையே வந்துருச்சு. எழுபது வயசு பாட்டியம்மா ஒருத்தங்க, இதுவரைக்கும் கழிப்பறையே பார்த்தது இல்லைன்னு சொன்னாங்க. அந்த மக்கள் அதிகாலை 4 மணிக்குள்ள தங்களோட காலைக் கடன்களை முடிச்சுக்கணும். அதுக்கப்புறம் இருட்டானாத்தான் போக முடியும். அப்படியே இருட்டுக்குள்ள போனாலும் சம்பந்தப்பட்ட இடத்துக்காரங்க கண்டபடி ஏசித் துரத்துவாங்க. சில நேரங்கள்ல அடிக்கக்கூட வந்திருக்காங்க.

அரசு ஒதுக்கும் நிதி போதாது

மாதவிலக்கு நாட்களிலும் வயிற்றுப் போக்கு உபாதைகள் ஏற்படும் சமயங்களிலும் தாங்கள் படும் கூடுதல் சிரமங்களையும் அந்தப் பெண்கள் தயங்கித் தயங்கி என்னிடம் சொன்னார்கள். இத்தனையும் கேட்டபிறகு எப்படி சும்மா இருக்க முடியும்? தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அந்த கிராமத்திலுள்ள வீடுகளுக்கு கழிப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியிருக்கு அரசு. ஆனால், ஒரு கழிவறைக்கு அரசு தரும் 12 ஆயி ரம் ரூபாயை வைத்து முழுமையாக கழிப்பறையைக் கட்ட முடியாது. கூடுதலாக 11 ஆயிரமாச்சும் இருந்தால் தான் முறையாக கட்டிமுடிக்க முடியும்.

இப்படி கூடுதலாக தேவைப்படும் நிதியை உங்களது சமூக நலத்திட்ட நிதியிலிருந்து நீங்கள் தந்து உத வுங்கள் என சில கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தினேன். ஆனால், அரசாங்கத்தின் திட்டத் துக்கு நிதி தருவதால் எங்களுக்கு என்ன பலன்’ என்று சொல்லி சில நிறுவனங்கள் கைவிரித்து விட்டன. எனினும், டால்மியா சிமென்ட், பூர்விகா மொபைல்ஸ், செரா சானிட்டரி வேர் கம்பெனி, கோத்ரெஜ் ஆகிய நிறு வனங்கள் எங்களது நோக்கத்தைப் புரிந்து கொண்டு தாராளமாக உதவ முன்வந்துள்ளன.

அத்துடன் எங்களது பிக் எஃப்.எம். நிறுவனத்தின் பாஸ் பவித்ராவும் இந்த முயற்சியை பண்பலை மூலமாக ஒரு இயக்கமாகவே நடத்த சம்மதித்தார். தினமும் காலை 7 மணியிலிருந்து 11 மணி வரை பண்பலையில் நான் நடத்தும் ‘டோன்ட் வொரி’ நிகழ்ச்சியில் இதற்காகவே ஒரு மணி நேரத்தை ஒதுக்கி, கழிப்பறையில்லாத மக்கள் படும் துயரங்களை அந்த மக்களின் மொழி யிலேயே பேசவைக்கிறேன். கழிப்பறையின் அவசியம் குறித்து பிரபலங்களையும் பேசவைக்கிறேன். செவ் வாய்க்கிழமைகூட இயக்குநர் ராஜூ முருகன் பேசினார்.

நாளுக்கு நாள் எங்களது முயற்சிக்கு ஆதரவு பெருகி வருவதால் 100 குடும்பங்களுக்கு மாத்திரமல்லாமல் இன்னும் பல்லாயிரம் குடும்பங்களுக்கும் கழிப்பறைகளைக் கட்டித் தரும் இயக்கமாக இது மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கழிப்பறை இல்லாத மக்களுக்கு முழுமையாக நிதியுதவி செய்து அவற்றைக் கட்டிக் கொடுக்க முடியாவிட்டால் போனாலும் அரசாங்கம் தரும் நிதியுடன் சேர்த்து தங்களால் ஆன நிதி உதவியைச் செய்து கழிப்பறைகளைக் கட்டிக் கொடுக்க நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் அப்படிச் செய்தால் அனைவருக்கும் கழிப்பறை கொண்ட மாநிலமாக தமிழகத்தை நம்மால் சீக்கிரமே மாற்றிக் காட்ட முடியும்” என்று சொன்னார்.

ஐந்து நிமிடக் குறும்படம்

கழிப்பறையின் அவசியத்தைச் சொல்லும் ஐந்து நிமிடக் குறும்படம் ஒன்றையும் பிக் எஃப்.எம். குழு உருவாக்கி இருக்கிறது. அதில் தோன்றும் முகங்களிடம் உங்களுக்கு எங்கு போக ஆசை என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு, ஒவ்வொரும் தங்களுக்குப் பிடித்த இடங்களைச் சொல்லி அங்கு போகவேண்டும் என்கிறார்கள். இறுதியாக தோன்றும் ஒரு சிறுவன் மட்டும் ‘நான் பாத்ரூமில் போக வேண்டும்’ என்கிறான். “இது அந்தச் சிறுவனின் ஆசை அல்ல; அவனுக்கான அவசியம். இது அவனது கனவு அல்ல; கட்டாயம்” என்கிறார் கருண்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x