Published : 20 Nov 2017 06:45 PM
Last Updated : 20 Nov 2017 06:45 PM

யானைகளின் வருகை 82: மண் மைந்தர்களின் ஹீனக்குரல்!

இந்தப் பழங்குடியினர் போராட்டத்திற்கு ஜி.கே.ஜானு, கீதானந்தன் தலைமையேற்றனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு வனத்துறை ஊழியர்கள் 19 பேர் சம்பவ இடத்திற்குச் செல்ல, அவர்களை சிறைபிடித்து வைத்துக் கொண்டது ஆதிவாசிகள் குழு. இரண்டு நாட்களுக்கு பின்பு, 'இனி யாராவது எங்களின் புகலிடங்களுக்குள் நுழைந்தால் தலை தரையில் உருளும்!' என்று எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து முத்தங்கா வனப்பகுதியில் பெங்களூர் சாலையில் உள்ளே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தடுப்பு மரம் எழுப்பி, எல்லை அமைத்த பழங்குடிகள், 'இந்த எல்லைக் கோட்டை மீறி யார் வந்தாலும் உயிரோடு திரும்ப மாட்டீரகள்!' என எச்சரிக்கையும் செய்திருந்தனர். இதில் என்ன செய்வதென்று புரியாத கேரள அரசு, இறுதியில் பழங்குடி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்தது.

இந்த நிலையில் பழங்குடிகள் காடுகளை அழித்ததற்கு நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கு நிலத்தை விட்டுக் கொடுக்க அரசு முடிவு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் சுல்தான் பத்தேரி பகுதியில் சூழல் அமைப்புகள் பந்த் அறிவித்தன. ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இப்படிப்பட்ட அசாதாரணமான சூழ்நிலையில் பழங்குடிகள் போட்டிருந்த எல்லைத் தடுப்பைத் தாண்டிச் சென்ற ஒரு போலீஸ்காரரையும், வனத்துறை ஊழியரையும் பிப்ரவரி பதினேழாம் தேதி மறுபடியும் பிடித்து வைத்துக் கொண்டனர் பழங்குடிகள்.

அவர்கள் இருவரையும் மீட்க நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முயற்சி செய்தனர். அதற்கு பழங்குடியினர் கட்டுப்படவில்லை. 'இது எங்கள் பூமி. மீறி யாரேனும் வந்தால் நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டீர்கள்!' என்று மறுபடியும் எச்சரிக்கை செய்தததுடன், 'எங்கள் நிலத்திற்கு அங்கீகாரம் வேண்டும். இல்லாவிட்டால் இப்போது நாங்கள் பிடித்து வைத்திருக்கும் ஆட்களை உயிரோடு கொளுத்தி விடுவோம்!' என்று மிரட்டினர். அந்தப் பேச்சுவார்த்தையில் தகராறு ஏற்பட, அதிகாரிகள் துப்பாக்கியை எடுத்திருக்கின்றனர். பழங்குடிகளோ மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகள் இருவர் மீதம் மண்ணெண்ணெயை ஊற்றி விட்டனர். அவர்களுக்கு அருகில் தீப்பந்தத்துடன் இருவர்.

இச்செய்கையால் அதிகாரிகள் சோர்ந்து திரும்பி விட்டனர். அந்த சமயத்தில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த பழங்குடிகள் தரப்பில் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. சிலர் நோய் வாய்ப்பட்டிருக்கிறார்கள். உடனே, 'அவர்களுக்கெல்லாம் மருந்து வேண்டும். மருத்துவர் குழுவை அனுப்பு!' என்று அதிகாரிகள் தரப்புக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதோடு, தாம் பிடித்து வைத்துள்ள இருவரையும் விடுவிக்க வேண்டுமானால் மேலும் நான்கு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளனர். மருத்துவர்கள் யாரும் காட்டுக்குள் போக மறுத்துவிட, வேறு வழியின்றி 19-ம் தேதி 500க்கும் மேற்பட்ட போலீஸாரும், வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஊழியர்களும் துப்பாக்கிகள் சகிதம் காட்டுக்குள் நுழைந்துவிட்டனர். இருதரப்புக்கும் ஒருநாள் முழுக்க பலத்த தாக்குதல் நடந்தது.

அதில் ஏற்கெனவே பிணைக்கைதியாக இருந்த போலீஸ்காரர் பழங்குடியினரால் கூறு, கூறாய் வெட்டிக் கொல்லப்பட்டார். வனத்துறை ஊழியர் மட்டும் குற்றுயிரும் குலையுயிருமாக மீட்கப்பட்டார். கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் சுற்றளவில் வெறும் ஐந்து பழங்குடியினர் மட்டும் இந்த யுத்தத்தில் இறந்ததாகச் சொன்னது போலீஸ் தரப்பு.

ஆனால் இதில் கிட்டத்தட்ட 40 பழங்குடிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் உடல் காட்டுக்குள் மூலைக்கு மூலை கிடப்பதாக அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது முத்தங்கா, கல்லூர், மற்றும் சுல்தான் பத்தேரியை ஒட்டியுள்ள கிராமங்கள். அதே வேளையில் 286 பழங்குடிகளையும், யுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சி.கே.ஜானு, கீதானந்தன் உள்ளிட்டோரை கைது செய்து விட்டதாக சுல்தான் பத்தேரி போலீஸ் சொன்னது. ஆனால் நானூறுக்கும் மேற்பட்ட பழங்குடிகளை கைது செய்து சித்ரவதை செய்து கொண்டிருக்கிறது போலீஸ் என்று தெரிவித்தது பழங்குடி தரப்பு.

இதையொட்டி அப்போது என்னிடம் பேசிய நீலகிரி மண்டல சூழலியல் ஆர்வலர் ஒருவர், ''இது குறிப்பிட்ட சமய ஆட்களின் டாமினேட்டட் ஏரியா. கூடலூரிலிருந்து எல்லா வனப்பகுதிகளையும் ஆக்கிரமிப்பு செய்வது, மரங்களை வெட்டி தேயிலை எஸ்டேட்டுகள் ஆக்குவது எல்லாமே அவர்கள்தான். இப்போது கூடலூர் வனப்பகுதி பெரும்பாலும் மொட்டைக் காடாகவே ஆகிவிட்டது. முத்தங்கா, கல்லூர், சுல்தான் பத்தேரியில் வாழும் சேட்டன்கள் எனப்படும் குறிப்பிட்ட இனத்தவர்கள் பெரும் பணக்காரர்கள். யானைகளை, வனங்களை காலங்காலமாக வேட்டையாடியே கோடி, கோடியாய்ப் பணம் குவித்தவர்கள். அவர்களுக்கு இப்போது தொழில் வேண்டும். நில ஆக்கிரமிப்பும் செய்ய வேண்டும். அதற்கு சிதறிக்கிடந்த பழங்குடிகளை ஒன்றிணைத்து அவர்களை கருவியாக்கி இப்படி செய்கிறார்களோ என தோன்றுகிறது!'' என்று சந்தேகம் தெரிவித்தார்.

சுல்தான் பத்தேரி காவல்நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் தேவராஜிடம் பேசியதில், ''பழங்குடிகளுக்கு சிலர் மறைமுகமாக ஆயுதப்பயிற்சி மற்றும் போர்ப்பயிற்சி அளித்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது!'' என்றார்.

இம்மோதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பழங்குடியினர் தலைவி ஜி.கே.ஜானுவும், தலித் சேவ சமிதி கன்வீனர் கீதானந்தனும் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போதும் சிறை சென்றாலும் எங்கள் போராட்டம் தொடரும் என முழங்கியபடியே சென்றார் ஜானு.

ஆதிவாசிகள் பின்னணியில் நக்ஸலைட்டுகள் (கவனியுங்கள், அப்போது மாவோயிஸ்ட் என்ற சொல் மருந்துக்கும் கூட யாரும் பயன்படுத்தவில்லை) இருக்கலாம் என்ற சந்தேகமே போலீஸார் மத்தியில் உருண்டு வந்தது. அதில் ரமேஷ் என்பவரை தீவிரமாக தேடும் வேலையில் இறங்கியிருந்தது போலீஸ்.

அதே சமயம் முத்தங்கா விவகாரத்தில் பழங்குடி மக்கள் பெரும்பாலும் தலைமறைவாகியிருந்தனர். வயதான ஆண், பெண்கள் மட்டுமே ஆங்கங்கே விடப்பட்டிருந்தனர்.

''ஆதிவாசிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்க 1975-ம் ஆண்டு சட்ட வழி வகை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் இப்படியாக வரையறை செய்யப்பட்டிருந்தது. அதில் முதற்கட்டமாக 53 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆதிவாசிகளிடம் ஒப்படைப்பது என அரசே ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கிறது. அதற்கான காலக்கெடு 2003 ஜனவரியுடன் முடிந்துவிட்டது. ஆனால் அதுவரை வெறும் ஆயிரத்து 500 ஏக்கர் நிலமே ஆதிவாசிகளிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெறுத்துப் போய்தான் ஆதிவாசிகள் நிலங்களில் குடிபுகுந்தார்கள். மற்றபடி இதில் நக்ஸல்பாரிகளும் இல்லை. தமிழ்த் தீவிரவாதிகளும் இல்லை. அது எல்லாம் போலீஸ் கிளப்பும் கட்டுக்கதை!'' என்பதே அப்போது அவர்களிடம் வெளிப்பட்ட குமுறல்.

''இதே கூடலூர், பந்திப்பூர், சுல்தான் பத்தேரி, நிலம்பூர் வனப்பகுதிகளில்தான் பெரிய எஸ்டேட் உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனங்களை அழித்து, ஆக்கிரமிப்பு செய்து, எஸ்டேட்டுகளை நிறுவியிருக்கிறார்கள். எங்களை கொடுமைப்படுத்தும் அரசாங்கத்தால், அவர்களைத் துரத்த முடியவில்லை. ஆனா இந்த மண்ணின் மகன்களான எங்களை இப்படி வேட்டையாடுகிறார்கள்!'' என்றது அவர்களின் ஹீனஸ்வர குரல்.

முத்தங்காவில் ஒலித்த இந்த ஹீனக்குரல் கேட்டு ஓடோடி வந்தனர் பிரபல எழுத்தாளரும், நர்மதா அணைக்கட்டு எதிர்ப்பு இயக்கம் கண்ட மேதா பட்கர், பிரபல பத்திரிகையாளரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப் நய்யார் போன்றோர். அவர்கள் வருகையினால் கேரள போலீஸார் செய்த பொய்ப் பிரச்சாரம் தவிடுபொடியாக்கப்பட்டதோடு, இதன் பின்னணியில் அப்போதைய மத்திய அமைச்சர் பெயரும் பேசப்பட்டது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x