Published : 17 Nov 2017 09:54 AM
Last Updated : 17 Nov 2017 09:54 AM

சாய்ந்தது பழமையைப் பறைசாற்றிய பப்பரப்புளிய மரம்: முயன்றால் மீண்டும் உயிர் கொடுக்கலாம்

தூ

த்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே துறைமுகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் கடந்த பப்பரப்புளிய மரம் ஒன்று கம்பீரமாக இருந்தது. அது தற்போது சாய்ந்துவிட்டது.

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டது பப்பரப்புளிய மரம். இதனைஆங்கிலத்தில் ‘பாவ்பாப்’ (Baobab) மரம், ‘மங்கி பிரீட்’ (Monkey bread) மரம் என்றும் அழைக்கிறார்கள். அரிய மரங்களான இவை தமிழகத்தில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, ராஜபாளையம் சின்மயா வித் யாலயா மேல் நிலைப் பள்ளி, சென்னை கன்னிமாரா நூலகம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே இருக் கின்றன.

அதிசயித்துப் போவார்கள்

தூத்துக்குடி பப்பரப்புளிய மரத்தைப் பற்றி நம்மிடம் பேசினார் தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. “எனக்கு நினைவு தெரிந்த நாளாய் இந்த மரத்தைச் சுற்றி விளையாடி இருக்கிறேன். இந்த மரத்தை புதிதாகப் பார்க்கும் எவரும் அதிசயித்துப் போவார்கள். சுமார் நூறடி சுற்றளவு கொண்ட இந்த மரத்தை ஏழெட்டுப் பேர் சேர்ந்தால் மட்டுமே கட்டிப்பிடிக்க முடியும். வயது முதிர்ந்துவிட்ட இந்த மரம், பலமான காற்றினால் சாய்ந்திருக்கிறது.

ராஜஸ்தானின் ஆஜ்மிர் பகுதியில் இந்த வகை மரத்தைப் புனித மரமாக வழிபடுகின்றனர். இந்த மரத்தை இந்திரனே நட்டு வளர்த்ததாக புராணங்களில் நம்பிக்கை இருக்கிறது. வட இந்தியாவில் கோரக் என்கிற முனிவர் இந்த மரத்தடியில் அமர்ந்து தவம் செய்ததால் இது ‘கோரக்’ மரம் என்றும் அழைக்கப்படுகிறது.

4,000 ஆண்டுகளுக்கு முன் வந்தது

குலசேகரப்பட்டினத்திலும் காதலர்கள் ஜோடியாக வந்து இந்த மரத்தில் பெயர்களை எழுதுவதும், திருமணம் நடந்தால் மரத்தின் கிளையில் பட்டுத் துணி கட்டி வணங்குவதுமாக இருந்தார்கள். உள்ளூர் மக்கள் இந்த மரத்தை தெய்வமாக கருதி வழிபட் டார்கள். குழந்தை வரம் வேண்டி இதில் தொட்டில் கட்டினார்கள். சுமார் 1,300 வயதான இந்த மரம் 1992-ம் ஆண்டு தூத்துக்குடியில் மிகப் பெரிய புயல் மற்றும் வெள்ளம் வந்தபோதும்கூட சரியவில்லை. ஆனால், எதிர்பாராத விதமாக சில மாதங்களுக்கு முன்பு இது சரிந்துவிட்டது” என்றார்.

இந்த மரத்துக்கு உயிர் கொடுக்க முடியுமா என்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தாவரவியல் துறைத் தலைவர் ரவிச்சந்திரனிடம் பேசினோம். “இந்த மரத்தின் பாகங்களும் பழங்களும் புளிப்பு சத்து வாய்ந்தவை. இதன் பூர்வீகம் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர். சுமார் 4,000 ஆண்டு களுக்கு முன்பு அங்கிருந்து இங்கு வந்தவர்கள் இந்த மரத்தை இந்தியாவில் நட்டிருக்க வேண்டும். இந்தி யாவில் சில ஆயிரம் எண்ணிக்கையில் இந்த மரங்கள் இருக்கின்றன.

உடலைப் பதப்படுத்த..

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அடன்சன் என்ற தாவரவியல் அறிஞர் செனிகல் நாட்டின் ‘சோர்’ தீவில் கி.பி 1749-ல் இந்த மரத்தை கண்டு பிடித்தார். இதனால் அவர் பெயரையும் இணைத்து அடன்சோனியா டிஜிடேட்டா (Adansonia digitata) என்ற தாவிரவியல் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. 1881-ல் பிஷப் கால்டுவெல் இதை பெயரில்லா மரம் என்று குறிப்பிட்டிருக்கிறார். நம் ஊரில் இதனை ஆனைப் புளிய மரம், பொந்தான் புளிய மரம், பெருக்க மரம், பெருமரம், பேமரம், பேப்புளி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

யானைகள் இதன் பட்டையை உரித்து விரும்பிச் சாப்பிடும். இந்த மரத்தின் கீழ் நிற்கும்போது யானையே பூனை போல தெரியும் என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். பண்டைக் கால ஆப்பிரிக்க மக்கள் இந்த மரத்தை தூய்மையின் சின்னமாக கருதினார்கள். இதன் கீழ் இருப்பவர்கள் ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும், இதன் நிழலில் பேசி முடிவெடுக்கும் எந்தக் காரியமும் கை கூடும் என்றும் நம்பினார்கள். அதனால் பலர் இந்த மரத்தின் கீழே வாழ்ந்தார்கள். இன்றும் ஆப்பிரிக் காவில் முக்கிய நபர்கள் இறந்தால் இந்த மரத்தின் பெரிய கிளையை வெட்டி அதையும் உடலோடு சேர்த்துப் புதைக்கிறார்கள். மரத்தின் மருத்துவ சக்தி உடலைப் பதப்படுத்துவதாக அவர்கள் கூறுகிறார்கள்.” என்று சொன்னார் ரவிச்சந்திரன்.

மீண்டும் உயிர் கொடுக்கலாம்

தொடர்ந்து பேசிய அவர், “ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டால் இந்த மரத்தின் அடிப் பகுதியில் பொந்து உண்டாகும். சில மரங்களின் பொந்துகளில் அதிகபட்சம் 60 பேர் வரை அமரலாம். முதிர்ந்த தண்டுகளில் ஏற்படும் துளைகள் மூலம் அடிமரம் சுமார் ஒரு லட்சம் லிட்டர் வரை தண் ணீரும் வேர்ப் பகுதியில் நூறு கேலன் வரை தண் ணீரும் சேர்த்து வைக்கிறது. இதனால் எத்தகைய வறட்சியையும் தாங்கி நிற்கிறது இந்த மரம். காடு களில் பயணம் செல்வோர் இந்த மரத்தில் துளை யிட்டு அதிலுள்ள நீரைப் பருகுவார்கள்.

தற்போது சாய்ந்திருக்கும் இந்த மரம் ஆயிரம் ஆண்டுகளை கடந்திருக்கும் என்று கருதப்படுகிறது. இதனை கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு உட்படுத்தினால் ஓரளவு உண்மையான வயதைக் கண்டுபிடிக்கலாம். விழுந்து கிடக்கும் இந்த மரத்தின் கிளையை சுமார் எட்டு அடி நீளத்துக்கு வெட்டி நடுவதின் மூலம் மரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். இதற்கு, அதே இடத்தில் ஐந்து அடிக்கு குழியைத் தோண்ட வேண்டும். அதனுள்ளே உலர்ந்த சாணம் போட்டு மூன்றடிக்கு மண்ணைக் குவித்து தண்ணீர் ஊற்றி சதுப்பு நிலம் போல செய்து அதில் இந்தக் கிளையை நட வேண்டும். இவ்வாறு செய்தால் சில வாரங்களில் இந்தக் கிளை மீண்டும் துளிர்த்து வளரும். இதனை உள்ளூர் அரசு நிர்வாகம் அல்லது சேவை அமைப்புகள் செய்ய முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x