Published : 27 Oct 2017 02:13 PM
Last Updated : 27 Oct 2017 02:13 PM

யானைகளின் வருகை 65: நஞ்சனைக் கொன்றவர்கள்!

வேறு வழியில்லாது மேட்டுப்பாளையத்திற்கும் பயணமானது நஞ்சனும் பாரியும். அங்கே அடுத்தடுத்து வந்த கும்கிகளை மனதார வாழ்த்தி வரவேற்றார்கள் கிராமத்து மக்கள். குரும்பனூர் என்ற கிராமத்தில் அதற்காக கொட்டகை அமைக்கப்பட்டது. இரவு ரோந்து சென்றது கும்கிகள். இவை வந்த நேரமோ என்னவோ காட்டு யானைகள், காட்டுக்குள்ளேயே அந்த சமயம் ஓடி ஒளிந்து கொண்டன. இந்தச் சூழலில்தான் வனத்துறை மற்றும் கோயில் வளர்ப்பு யானைகள் முகாம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. அதற்கு இந்த கும்கிகளும் போயே ஆக வேண்டும் என்றது வனத்துறை.

'வேண்டவே வேண்டாம். நஞ்சனுக்கும் பாரிக்கும் மஸ்து வந்து கொண்டிருக்கிறது. உடனே சாடிவயல் செல்வதுதான் சரி!' என்றனர் பாகன்கள். அதிகாரிகளின் அதிகாரத்தின் முன்பு யானையென்ன பாகனென்ன? விளைவு. யானைகள் நலவாழ்வு முகாமிற்கு 2013-டிசம்பர் 19-ம் தேதி தமிழக அரசின் யானைகள் நல வாழ்வு முகாமிற்கு வந்தது பாரி, நஞ்சன். இவை வருவதற்கு முன்பே வனத்துறை யானைகள், ஆண் யானைகள், கோயில் யானைகள், பெண் யானைகள் வந்துவிட்டன. இவற்றை அருகருகே வைத்தால் அவற்றின் உணர்வுகள் தூண்டப்பட்டு மதம் பிடிக்கும் நிலை ஏற்படலாம் என்ற கருத்தும், எதிர்ப்பும் சுற்றுச்சூழல், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வந்தது. அந்த எதிர்ப்பை தவிர்க்க கோயில் யானைகளுக்கு தேக்கம்பட்டியிலும், வனத்துறை வளர்ப்பு யானைகளுக்கு விளாமரத்துாரிலும் கேம்ப் (3 கிலோமீட்டர் இடைவெளியில் பவானி ஆற்றின் வெவ்வேறு கரைகளில் அமைந்துள்ளது) தனித்தனியாக யானைகள் நலவாழ்வு முகாமைத் தொடங்கினர்.

விளாமரத்தூரில் நடந்த வனத்துறை யானைகள் நல வாழ்வு புத்துணர்ச்சி முகாமில் நஞ்சன், பாரி உள்பட மொத்தம் 18 யானைகள் பங்கேற்றன. அப்போது முதலே, இரண்டு யானைகளும் மதம் பிடிக்கும் நிலையில் இருந்தன. அந்த நேரத்தில் காட்டு யானைகளும் முகாமிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வந்தன. அப்போதும் கூட நஞ்சன், பாரியும் மற்ற யானைகளுக்கு பாதுகாப்பாக இருந்து காட்டு யானைகளை விரட்டி வந்தன.

முகாம் தொடங்கி 25 நாள் இருக்கும் போது இரு யானைகளுக்கும் மதம் உச்சநிலை அடைந்தது. இதில் நஞ்சன் மிக ஆக்ரோஷமாக செயல்பட்டதில் பரணி, சேரன் ஆகிய வனத்துறை யானைகளை குத்தி காயப்படுத்தியது.இதனால், 4 கால்களையும் பலமான சங்கிலிகளால் நஞ்சனை மரத்தில் தனித்து கட்டி வைத்தனர். மதம் காரணமாக சங்கிலியை அறுக்க நஞ்சன் தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதனால், சங்கிலி அறுத்துக்கொண்டே இருந்ததால் பின் வலது காலில் புண் ஏற்பட்டது. புண் என்றால் சாதாரண புண் அல்ல. தடிமனான கால் சங்கிலி அந்த புண்ணிற்குள் சென்று ஆழமாகவே பதிந்து வெளியில் கூட தெரியாத நிலை ஏற்பட்டது.

அதைப்பார்த்து பாகன்களும், உதவியாளர்களும் பதறினர். ஆனால் வனத்துறையினரால் ஆரம்ப நிலையில் புண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஏனென்றால் அவை பாகன்கள் உட்பட யாரையும் கிட்ட நெருங்க விடவில்லை. பிப்ரவரி 4-ம் தேதி முடிவடைந்த நிலையில் மதம் அடைந்த நிலையில் இருந்த நஞ்சன், பாரியையும் லாரியில் ஏற்ற முடியவில்லை. இதனால் முகாம் நடந்த அத்துவானக்காட்டு பகுதியிலேயே விட்டுவிட்டுச் சென்றனர் நலவாழ்வு முகாம் நடத்தியவர்கள்.

அங்கு அதுவரை போடப்பட்டிருந்த செட்டுகள் கூட பிரித்து சென்று விட்டனர் ஒப்பந்ததாரர்கள். அதைத் தொடர்ந்து நாங்களும், நஞ்சன் பாரியும் அனாதைகளாக எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனித்து விடப்பட்டோம் என்று பாகன்கள் கதறினர். அப்போது அவர்கள் கண்ணீர் மல்க தங்கள் நிலை குறித்து நமக்கு பேட்டியும் அளித்தனர். அது 'தி இந்து'வில் செய்தியாகவும் வந்தது.

அதன்பிறகே அதே இடத்தில் 8 வனவர்களையும், துப்பாக்கி மற்றும் பட்டாசு, யானை மற்றும் பாகன்களுக்கான உணவு ஏற்பாடுகளையும் செய்து தந்தனர் வனத்துறை அதிகாரிகள். அதைத் தொடர்ந்து பாரி முற்றிலும் குணமடைந்தது. நஞ்சனுக்கு ஓரளவு மதம் குறைந்து வந்தது. பாகனை மட்டும் அருகே அனுமதித்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நஞ்சனுக்கு ஊசி மூலம் மருந்து புகட்டப்பட்டது. 2014 பிப்ரவரி 14-ம் தேதி அன்று நஞ்சனின் காலில் அறுத்த சங்கிலி நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வெட்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து, பின்பக்க சங்கிலிகள் அகற்றப்பட்டன. முன்பக்கம் மட்டும் சங்கிலிகள் கட்டப்பட்டன.

அன்றிலிருந்தே இருந்தே நஞ்சன் சாப்பிட மறுத்துவிட்டது. தண்ணீர் உள்ளிட்ட எந்த உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், முகாமிற்கு வரும் போது 4,950 கிலோவாக இருந்த நஞ்சன், 3 ஆயிரம் கிலோவிற்கு கீழே குறைந்தது. வயிறு ஒட்டி கழுத்தும் சுருங்கிவிட்டது. கும்கி யானைகளிலேயே மிகவும் பிரமாண்டமாகவும், வலிமையான தோற்றமாக அறியப்பட்ட நஞ்சன் மிகவும் வற்றி தனது தோற்றத்தையே இழந்து நின்றது.கோவை மாவட்ட வனத்துறை மருத்துவர் குழு தொடர்ந்து காட்டுக்குள் வருவதும், சிகிச்சையளிப்பதும் தொடர்ந்தது.

அதன் உச்சகட்டமாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த யானைகள் நல மருத்துவ நிபுணர் பணிக்கர் தலைமையில் நஞ்சனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு நாளில் நஞ்சன் உணவு உட்கொள்ளும் என்று கேரண்டி கொடுத்துவிட்டு சென்றார் பணிக்கர். ஆனால் 3 நாட்களாகியும் நஞ்சன் வாய் திறக்கவில்லை. அதனால் இரண்டு நாட்களுக்கு முன்பு 100 பாட்டில் குளுக்கோஸ், கால்சியம் ஊக்க மருந்து புண் ஆறும் மருந்துகள் ஊசி மூலமாக செலுத்தப்பட்டன. தொடர்ந்து நஞ்சனை லாரியில் ஏற்றி போளுவாம்பட்டி கும்கி முகாமிற்கு கொண்டு செல்ல முயற்சித்தனர் வனவர்கள். அதற்கு அதனால் ஒத்துழைக்க முடியவில்லை. கால்கள் நடுங்கின.

நஞ்சனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வன விலங்கின அறிவியல் துறை தலைவர் டாக்டர் ஜெயாதங்கராஜ், உதவி பேராசிரியர் மருத்துவர் பழனிவேல்ராஜன், மாவட்ட மருத்துவர் மனோகரன் என பலரும் பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்காக ரத்தம், சிறுநீர், சாணம் ஆகியவற்றை சேகரித்தனர். வாய் மூலம் குளுக்கோஸ் விடும் முயற்சியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 4 மணிநேரம் நீடித்த அந்த இறுதிக்கட்ட சிகிச்சையில் நஞ்சன் தள்ளாடி, தள்ளாடி மருத்துவர்கள் முன்னிலையிலேயே விழுந்தது. சில நிமிடங்கள் கால்கள் வெட்டி வெட்டி இழுத்தது. பிறகு தனது இறுதி மூச்சையும் விட்டது.

வால்பாறை காடுகளில் 7 வயது குட்டியாக இருக்கும்போது அனாதரவாக வனத்துறையினரிடம் அகப்பட்ட யானை நஞ்சன். அது முதலே நஞ்சனுக்கு பணிப்பயிற்சிகளை அழித்து, மேற்கு வங்கத்தில் கும்கி யானைக்கான பயிற்சிகள் தரப்பட்டு டாப்ஸ்லிப் வன உயிரின பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. தமிழக வனத்துறையிலேயே கட்டுமஸ்தானான உடல்வாகும், எப்பேற்பட்ட பளுவையும் தூக்க வல்லதும், எப்படிப்பட்ட காட்டு யானையையும் லாவகமாக துரத்தி அடிப்பதிலும், மடக்கி பிடித்து வளர்ப்பு முகாமிற்கு கொண்டு வருவதிலும் கெட்டிக்காரனாக விளங்கிய நஞ்சன் அடுத்த 3 வருடத்தில் 58 வயதில் ஓய்வு பெறுவதாக இருந்தது. அதற்குள் தன் மூச்சை விளாமரத்தூரில் விட்டுவிட்டது.

''நலவாழ்வு முகாம் வேண்டாம். அதற்கு மஸ்து கிளம்பினால் தேவை அமைதி, விடுதலை. அதைச் செய்யாமல் பெண் யானைகள் உலாவும் பகுதியில் கொண்டு போய் நிறுத்தி அதன் வாசம் பட்டாலே அதற்கு இம்சைதான். அதனால் மஸ்து கூடுதலாக வடிந்து சொல்ல முடியாத துன்பத்தை அடையும் என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். அதை யாருமே கேட்கவில்லை. இப்போது அதன் உயிரையே காவு வாங்கிவிட்டது. நாங்களும் வனபத்திரகாளி, வனதேவதைகள் எல்லாவற்றையும் கும்பிட்டு படையல் வைத்து நஞ்சன் பிழைக்க எவ்வளவோ வேண்டுதல் செய்தோம். இப்ப நாங்க பயந்தது நடந்துடுச்சே!'' என்று நஞ்சனின் பாகனும், அவரின் உதவியாளர்களும் கதறி அழுதது கல் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

சமீபத்தில் கூட சாடிவயல் முகாமிற்கு சென்றிருந்தேன். அங்குள்ள யானைப் பாகன்களிடம் நஞ்சன் என்று சொன்னேன். அதன் மலரும் நினைவுகளை சொல்லி அவர்கள் அழுததைக் கேட்டபோது என்னாலும் உணர்வுளை அடக்க முடியவில்லை.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x