Last Updated : 13 Oct, 2017 05:16 PM

Published : 13 Oct 2017 05:16 PM
Last Updated : 13 Oct 2017 05:16 PM

எல்லாவற்றையும் அரசாங்கம்தான் செய்ய வேண்டுமா? - பயணத்தின்வழியே சில பாடங்கள்

இலக்கற்ற பயணங்களில்தான் எதிர்பாராத தருணங்கள் சாத்தியம் என்பதால் நீண்ட நாள் கழித்து திடீர் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் விருப்பம் உருவானது.

கிடைத்த ஒருநாளான கடந்த செவ்வாய் (10.10.2017) அன்றைய பொழுதுக்குள் கிட்டத்தட்ட 400 கி.மீ தொலைவுக்கு சென்று திரும்பியபோது, தமிழ்நாட்டின் சிற்சில பகுதிகளைமட்டும் சுற்றும் பயணமாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. அதில் கிடைத்த அனுபவங்களும் சாதாரணமாக அமைந்திருக்கவில்லை.

பழைய வறட்சி ஞாபகத்திலேயே சென்றதால் சமீபத்திய மழைக்காட்சிகள் என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தின. அங்கங்கே மழைபெய்து வழியெங்கும் பச்சை பசேல் எனவும் மருத்துவ குணங்கள் நிரம்பிய செடிகளும், வண்ண வண்ண பண்ணைப்பபூண்டு மலர்களின் வாசமும் கிறங்கடித்தன.

சரிதான் நாம் செல்லவேண்டியது என்எச் 32 சாலைகளோ அல்லது என்எச் 45 சாலைகளோ அல்ல குக்கிராமங்களைக் கடந்து குறுகிய பாதைகள்தான் எனத் தோன்றியது. அங்கங்கே டவுன்பஸ்ஸில் ஏறி இறங்கி ஊர்ப்புறங்களை சுற்றிவரும் பயணமாகவும் அது மாறியது. சில இடங்களில் மேற்கொண்ட சிற்றுந்து வண்டிப் பயணம் பாராசூட்டில் மிதந்துசெல்வதாகவே பட்டது. ஆங்காங்கே நாற்றாங்கால் நீரில் சுற்றிலுமிருந்த இயற்கைக் காட்சிகள் கண்ணாடிபோல் தெரிந்தன.

நீள்கழுத்து நாரை வானில் பறந்த அழகு சேடை ஓட்டப்பட்டு நீர்நிரம்பிய நிலத்தின் அழகை மேலும் மெருகூட்டியது.

ஆனால் பல இடங்களில் மேடும் பள்ளமுமான கிராமத்து சாலைகள். இந்தப் பயணத்தையே அயர்வுக்குள்ளாக்கி நெடும்பயணமாக மாற்றிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட வைத்ததன அந்த மேடு பள்ளங்கள்.

ஒரு கிராமத்தில் பேருந்து நிறுத்ததில் பள்ளிமாணவிகள் 5 பேர் யாரின் வருகைக்காகவோ குறித்தநேரத்தில் வந்து காத்திருந்தது தெரிந்தது. நான் சென்ற பேருந்திலிருந்து ஒரு பெண்மணி இறங்கினார். அப்போது மாணவிகள் உற்சாகத்தோடு ஓடிவந்து ''வாங்க வாங்க டீச்சர் வணக்கம் டீச்சர்'' என ஒருசேர குரலிட்டுஅருகில் வந்து அவரை சூழ்ந்தனர்.

ஒரு சில விநாடிகள் இருந்து அவர்கள் புறப்பட்டனர். இக்காட்சி எனக்கு புதியதாக இருந்தது. தினம் தினம் பள்ளிக்கு வரும் ஆசிரியை ஒருவரை மாணவிகள் குறித்த நேரத்திற்கு பேருந்து நிறுத்தம் வந்து காத்திருந்து அழைத்துச் செல்கிறார்கள் என்றால் அந்த ஆசிரியைமீது அம்மாணவிகளுக்கு எவ்வளவு மரியாதையும்அன்பும் இருக்கக்கூடும்? அக்குழந்தைகளின் சில்லென்ற பூஞ்சிரிப்பு, ஆசிரியைக்கான வரவேற்பு பயம் சார்ந்தது இல்லை என்பதை உறுதிபடுத்தியது. எனக்குத் தெரிந்து இந்த பண்பாடு புதியது ஆனாலும் வரவேற்கத்தகுந்தது.

பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் போகும் சுற்றுப் பயணங்களில் எத்தனையோ திட்டங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்படும். எந்த திட்டமும் இல்லாத என்னை மாதிரி ஆசாமிகளின் பயணங்களில் ஏற்கெனவே போடப்பட்ட திட்டங்கள் பற்றி பயணங்களில் அருகே அமர்ந்துவருபவரிடம் லேசான உரையாடலை மேற்கொள்ளலாம். அதைத்தவிர திட்டங்கள் சார்ந்து வேறெதையும் செய்வதற்கில்லை.

அன்றைய தினம் கடுமையான மழை. முன்னெச்சரிக்கையாக எதையும் யோசிக்கவில்லை புறப்பட்டுவிட்டாயிற்று. ஆனால் புறப்படுகிற இடத்தில் தட்பவெப்ப நிலையும் பெரிய அளவில் பயமுறுத்தவில்லை. வழியில் போகும்போதுதான் அடடா ஒரு குடைகூட எடுத்துவரவில்லையே... எங்காவது இறங்கி ஏறும் இடத்தில் செமையாக மாட்டிக்கொண்டால் என்னாவது என்றெல்லாம் தோன்றினாலும் பெரும்பாலும் மழைக்கு தப்பித்தே பயணம் தொடர்ந்தது.

சில இடங்களில் நனைய நேர்ந்தபோது 'கனவில் பெய்த மழைபற்றிய இசைக்குறிப்புகள்' என்ற சிறுகதையின் நான்லீனியர் உருவாக்கம்பற்றிய சிந்தனைகள் லேசாக முகிழத் தொடங்கின.

அங்கங்கே மழையில் நனைந்தபடியே 1983ல் சைக்கிளில் உலகை சுற்றிவந்த பிரிட்டன் மார்க் பியூமண்ட் போல சாகசங்களில் ஈடுபடவில்லை யென்றாலும் ஒரு கணம் அந்த நேரம் அவர் ஞாபகம் வந்ததை தவிர்க்கமுடியவில்லை.

மழைநீர் தேங்கியிருக்கும் நெற்பயிர் வயல்களை ஒருவித மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருந்த என்னை டிரைவைர் அழைத்தார். ''சார் என்ன அப்படி திரும்பித் திரும்பிப் பார்க்கறீங்க?'' என்று கேட்டார்... ''இல்ல சார் இங்க இவ்வளோ மழையா பெய்ஞ்சது... ஆச்சரியமா இருக்கே'' என்று கேட்டேன். ''சார் பாருங்க இன்னும் நீங்க பாக்க வேண்டியது நிறைய இருக்கு...'' என்று வழியெங்கும் பல இடங்களில் தண்ணீர் பெரிய அளவில் பொங்கிப் பெருகி பாய்ந்துபோய்க்கொண்டிருந்ததைக் காட்டினார்... ''ஏரி உடைஞ்சிருக்கு தெரியுதா'' என்று காட்டினார்.

எனக்கு எது வயல்நிலம் எது ஏரி என்றே தெரியவில்லை... இது போல பல ஏரிகளை அவர் காட்டினார். அவர் காட்டியது எதுவுமே மிகப்பெரிய ஏரிகள் அல்ல.

ஆனால் கரையில் நின்ற பனைமரங்களை வைத்து அது ஏரிதான் என புரிந்துகொள்ளமுடிந்தது. அவரிடம் கேட்டேன்.. ''சார் என்னை எங்கேயாவது இறக்கி விடுங்க நான் கொஞ்சம் எல்லாத்தையும் பாத்துட்டு வர்றணும்...''

''இன்னும் இன்னா பாக்கப் போறீங்க... நீங்க எங்க போகணும்... இங்க இறங்கினீங்கன்னா அடுத்த வண்டி வர்ற நாலு மணி நேரம் ஆகும் பரவாயில்லையா'' என்று கேட்டார்....

''பரவாயில்ல சார் எனக்கு வேற எதுவும் முக்கியமான வேலை இல்லை. இறக்கி விட்டுருங்க...'' என்றேன். அவர் பாதியில் இறக்கிவிட்டுவிட்டு போய்விட்டார்.

அங்கிருந்து நின்றவாறே சுற்றும் முற்றும் பார்த்தவாறு மிரட்சியாய் இருந்த என்னை நோக்கி ஒரு பெரியவர் வந்தார். ''என்ன தம்பி எங்கிருந்து வர்றீங்க... என்ன விஷயம் ஏன் பாதியிலேயே இறங்கிட்டீங்க'' என்று அடுக்கடுக்காக கேட்டார்... ''ஒன்னும் இல்ல சும்மா வந்தான்.. நிலமெல்லாம் மூழ்கியிருக்கறத பாத்துட்டு அப்படியே போகமுடியல'' என்றேன்... அவர் ஒரு நிமிடம் தமது கண்களை மூடி திறந்தார்...

''நாத்துவிட்டு ஒருவாரம்கூட ஆகலை என்னுடைய ரெண்டு ஏக்கரும் மூழ்கிடுச்சி... நல்ல விலை, நல்ல மகசூல்வரும் வெள்ளைப்பொன்னி விட்டிருந்தேன் தம்பி. எல்லாம் போச்சி'' என்றார். அவர் குரல் கம்மியிருந்தது. ''சரி மனச தேத்திக்குங்க அடுத்த பயிர்ல எடுத்துறலாம்.'' '

'எங்க எடுக்கறது. போனமுறை காஞ்சி கெடுத்தது. இந்தமுறை பேஞ்சி கெடுக்குது. அடுத்த முறை எப்படியோ?'' விரக்தியிலும் கிராமத்து வார்த்தைகள் வக்கனையாய் வந்தன. பேசிக்கொண்டே அச்சிறு கிராமத்திற்குள் அழைத்துச் சென்றார். அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு டீக்கடைக்கு அழைத்துச் சென்றார். வெளியே இருந்த பெஞ்சில் என்னை அமரும்படி கேட்டுக்கொண்டு அவரும் அமர்ந்தார்...

எங்கள் பேச்சின் விவரம் அறிந்த அந்த டீக்கடைக்காரர்... வயது அறுபது இருக்கும் ஆனால் பேச்சும் வேகமும் இருபதை எண்ணவைத்தன.

''ஏன் சார் எது ஏரி எது நிலம்னு தெரியாத அளவுக்கு தண்ணி நெறையுதுன்னு ஒரு வெளியூர்காரரே சொல்றாரு... ஏன் இந்த ஊருல இருக்கறவங்களுக்கு எங்க போச்சி அறிவு... கரையைக் கொஞ்சம் ஏத்தி கட்டாலாம் இல்ல....''

நான் குறுக்கிட்டேன். ''இதை அரசாங்கம், பிடபிள்யூதான் சார் செய்யணும். ஏரில யாரும் கைவைக்க முடியாதே... ''

''ஏன் சார் கை வைக்க முடியாது. அந்த காலத்துல காமராஜர் ஆர்டர் போட்டுட்டு பைல் ரெடி பண்ண கதையெல்லாம் நடந்திருக்கு. ஊர்மக்கள் ஒன்னா சேர்ந்து கரையை ஏத்தி தூர்வாரியிருக்கலாமே... எல்லாத்தையும் அரசாங்கம்தான் செய்யணுமா? என்ன பேச்சு சார் இது...'' என்றார்... ''எங்க செய்யப் போறாங்க... நூறு நாள் வேலை திட்டம் ஒன்னு வந்து மக்களை சோம்பேறியாக்கிடுச்சி... ஆட்டாளுக்கு ஒரு மோட்டாளாம் அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்டையாம்...'' அவரே அதற்கு பதில்போல பழமொழி ஒன்றையும் சொன்னார்...

''இல்லங்க ஐயா... நீங்க நெனைக்கற மாதிரி இல்ல... அது கஷ்டப்படறவங்க கொஞ்சம் கரையேறட்டுமேன்னு ஆரம்பிக்கப்பட்ட திட்டம்.''

''எது கஷ்டப்படறவங்களுக்கான திட்டம். நீங்க வேற தம்பி அப்படிதான் எல்லாம் அப்படி நெனைச்சிட்டிருக்கீங்களா? ஊர்ல அவ்வளோ பேருடைய பேரும் அந்த ரிஜிஸ்டர்ல இருக்கு... நூறுநாள் வேலைக்கு போகலைன்னாலும் அவங்களுக்கு காசு வந்துடும்'' என்றார்.

''சார் சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க. அப்படி காசு வருதுன்னா அதுக்கு உண்மையா உழைக்கணும்னு முடிவு செஞ்சி எல்லாரும் அந்த ஏரியை சீர் செஞ்சிருக்கலாமே''

''அத யார் முடிவு செய்யறது...?''

''யார் செய்யறது எல்லாரும்தான் செய்யணும்... ஏன் இந்த ஊர் இளைஞர்கள் என்ன செய்யறாங்க. அவங்க நெனைச்சா பிரமாதமா இதை நிறைவேத்தியிருக்கலாமே...''

''என்ன இளைஞர்களா?... ஹாஹாஹா... அதோ பாருங்க இளைஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்துல மும்முரமா இருக்கறதை... அவங்களோட பைக்ல கௌம்பிடுங்க.,.. மழை தூற ஆரம்பிச்சிடுச்சி... அப்புறம் பலமா வந்துடப் போகுது..''

''என்னது விழிப்புணர்வு பிரச்சாரமா'' சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன்...

''இதனால் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்... தீபாவளிக்கு ரிலீசாகப்போகும் நமது தலைவர் படத்தை தியேட்டரிலேயே வந்து பார்க்கவும். யாரும் திருட்டு விசிடியில் பார்க்கவேண்டாம்... எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் நமது தலைவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இதை செய்யவேண்டும்'' ஒரு இளைஞர் மெகாபோன் போன்ற ஒரு கருவியில் பேசிக்கொண்டிருந்தார்.

வேறுவழியின்றி நகரத்திற்கு சென்று பேனர் வாங்கிவரப்போகும் அவர்களுடன் நானும் பயணித்தேன்... எத்தனை மணிக்கு தருவதாகச் சொன்னார்கள்.. எந்தெந்த இடங்களில் பேனர் கட்ட வேண்டும். தியேட்டரில் கட்டவேண்டிய தோரணங்களை எப்போது தயார் செய்வது போல அவர்கள் பேச்சு சென்றது.... அவர்களது பைக்கில் அமர்ந்து நகரத்திற்கு வந்து அங்கிருந்து இன்னொரு நகரத்திற்குச் செல்ல அரசுப் பேருந்து ஒன்றில் ஏறி சன்னலோரம் வந்தமர்ந்து லேசான தூறலில் நனைந்தேன்.

பசி வயிற்றைக் கிள்ள இங்க நல்ல ஓட்டல் இருக்கா பாட்டி என்று முன் சீட்டில் இருந்தவரை விசாரித்தேன். அந்த வயசான பாட்டி கைநிறைய பச்சை வேர்க்கடலைத் தந்தார். ''4 மணிக்கு சாப்பாடு இருக்காது தம்பி.. அப்படியே கிடைச்சாலும் நல்லாருக்காது இந்தாங்க சாப்பிடுங்க தம்பி நல்லாருக்கும்'' என்றார்.

அவருக்கு நன்றி சொல்லியபடியே அதை உரித்து தின்றவாறே.... திரையில் பேசுவதையெல்லாம் உண்மை என்று நம்பும் அந்த இளைஞர்களைப் பார்த்தேன். அதோ தியேட்டர் எதிரே பைக்கை நிறுத்திவிட்டு அருகே ஒலித்துக்கொண்டிருந்த பிரபல பாடல் ஒன்றுக்கு அவர்கள் குத்தாட்டம் ஆடிக்கொண்டிருந்தது தெரிந்தது.

அன்றைய தினத்தில் புறப்பட்ட இடத்திற்கு வந்துசேரவேண்டிய இரவுப் பயணத்தின்போது அடிப்படையாக ஒரு கேள்வி பிரமாண்டமாக எழத் தொடங்கியது. துடிப்பும் உற்சாகத்தோடும் களமிறங்கி நாட்டை வடிவமைக்க வேண்டிய இளைஞர்களை எப்படி யார் வழிநடத்தப் போகிறார்கள்? என்பதுதான் அது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x