வழிகாட்டும் வாட்ஸ் அப் குழுக்கள்.. வழிநடத்தும் வேளாண் அதிகாரி

வழிகாட்டும் வாட்ஸ் அப் குழுக்கள்.. வழிநடத்தும் வேளாண் அதிகாரி
Updated on
2 min read

‘வா

ட்ஸ் அப்’ குழுக்களை பலரும் வெட்டி அரட்டைக்குத்தான் பயன் படுத்துகிறார்கள். ஆனால், திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ், அதை இயற்கை விவசாயிகளுக்கும் பயன் தரும் ஊடகமாக பயன்படுத்தி வருகிறார்.‘

‘கிரவுண்டு வாட்டர் அண்டு ஃபார்ம் டெவ். (நிலத்தடி நீர் மற்றும் பண்ணை மேம்பாடு)’ - இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைக்க பிரிட்டோராஜ் உருவாக்கியிருக்கும் ‘வாட்ஸ் அப்’ குழு இது. இப்படி ஒன்றல்ல.. 7 குழுக்களை உருவாக்கியிருக்கிறார் இவர்.

தொடக்கத்தில், உள்ளூர் இயற்கை விவசாயிகளை மட்டுமே ஒருங்கிணைத்து இந்த ‘வாட்ஸ் அப்’ குழுவை உருவாக்கினார் பிரிட்டோராஜ். இதற்கு, விவசாயிகளிடம் வரவேற்பு பெருகியதால், தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயி களையும் இந்த ‘வாட்ஸ் அப்’ குழுவில் ஒருங்கிணைத்தார். அப்படி இதுவரை, 7 குழுக்கள் மூலம் 1,749 இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 141 பேர் வெளிநாடுகளில் வசிப்பவர்கள். 65 பேர் பிற மாநிலத்தவர்கள். இவர்கள் அனைவரிடமும் பிரிட்டோராஜ் தினமும் ‘வாட்ஸ் அப்’ மூலம் பேசுகிறார்.

வெறும் சம்பிரதாய சடங்காக இல்லாமல் விவசாயிகளுக்கு உபயோகமான தகவல்களை தனது ‘வாட்ஸ் அப்’ குழுக்களில் பகிர்கிறார் பிரிட்டோராஜ். மாட்டு எரு, நாற்றுகள், விதைகள் கிடைக்கும் இடங்கள், எந்த பருவத்தில், எந்த மண்ணுக்கு எதை பயிரிடலாம் உள்ளிட்ட தகவல்களைத் தருகிறார். அதுமட்டுமில்லாமல், நாட்டு கால்நடைகள் இருக்கும் இடம், அதன் சிறப்புகள், தற்போதைய விலை, பராமரிப்பு போன்ற தகவல்களையும் தரும் இவர், குறைந்த செலவில் வேளாண் இடுபொருட்களைத் தயாரிப்பதற்கான தகவல்களையும் ‘வாட்ஸ் அப்’பில் வலம்வர வைக்கிறார்.

முக்கியச் சந்தைகளிலும் சர்வதேச சந்தையிலும் விளைபொருட்களின் விலை நிலவரங்களையும் தினமும் இந்த ‘வாட்ஸ் அப்’ குழுக்களில் பதிவிடுகிறார் பிரிட்டோராஜ். நீர் மேலாண்மை, குறைந்த செலவில் இயற்கை வேளாண்மை செய்வது, பூச்சி மேலாண்மையில் உள்ள எளிய தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பண்ணையத்தின் காரணிகளான ஆடு, கோழி, காடை, மீன் வளர்ப்பு போன்ற தகவல்களையும் இவரது ‘வாட்ஸ் அப்’ குழுக்களில் பார்க்க முடிகிறது.

பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை, ஊடு பயிர்களை பயிரிடும் முறைகள் பற்றி விவசாயிகள் கேட்கும் சந்தேகங்களுக்கும் ‘வாய்ஸ் கால்’ மூலமாக வகுப்பெடுக்கிறார் பிரிட்டோராஜ். அதேசமயம், ‘வாட்ஸ் அப்’ பரிமாற்றங்ளோடு நின்றுவிடாமல் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விவசாயக் குழுக்களை நேரில் சந்தித்தும் கலந்துரை யாடுகிறார்.

இந்த ‘வாட்ஸ் அப்’ யோசனை எப்படி வந்தது என்று அவரிடம் கேட்டோம். ‘‘2010-ல் நிலவிய கடும் வறட்சியின் போது, திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை பெருக்குவது குறித்த ஆய்வில் ஈடுபட்டேன். அப்போது, பலதரப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தச் சந்திப்புகளின் போது, விவசாயிகளுக்கு விவசாயம் குறித்த போதிய விழிப்புணர்வும், அரசின் மானியத் திட்டங்கள் குறித்த புரிதலும் இல்லாததை உணர்ந்தேன். அதனால், அவர்களுக்குத் தேவையான தகவல்களை நான் திரட்டிக் கொடுத்தேன்.

அதன் பிறகும் என்னோடு அலைபேசி தொடர்பில் இருந்த அந்த விவசாயிகள், அடிக்கடி என்னைத் தொடர்பு கொண்டு சந்தேகங்கள் கேட்பார்கள். இவர்களுக்கு தனித் தனியாக சந்தேகங்கள் களைவதைவிட ‘வாட்ஸ் குழு’வில் இவர்களை ஒருங்கிணைத்து அதன் வழியாக சந்தேகங்களுக்குப் பதில் சொன்னால் அனைத்து விவசாயிகளுக்கும் உதவியாக இருக்குமே என யோசித்தேன்.

அப்படி ஆரம்பித்ததுதான் இந்த ‘வாட்ஸ் அப்’ குழுக்கள். எனது யோசனைகள் ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலமாக விவசாயிகளைச் சென்றடைந்து செயல் வடிவம் பெறுவது மனதுக்கு மகிழ்வாய் இருக்கிறது” என்று சொன்னார் பிரிட்டோராஜ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in