Published : 24 Oct 2017 10:07 am

Updated : 24 Oct 2017 16:51 pm

 

Published : 24 Oct 2017 10:07 AM
Last Updated : 24 Oct 2017 04:51 PM

நத்தைகளை ஒழிக்க என்ன வழி?- களத்தில் இறங்கியகேரள வன ஆராய்ச்சி நிறுவனம்!

 கோவை காரமடை பகுதியில் உள்ள பாறப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொத்துக் கொத்தாய் கிளம்பி வரும் நத்தைகளால் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து, ‘நகர்த்த முடியாத நத்தைகள் முகாம்’ என்ற தலைப்பில் செப்டம்பர் 28-ம் தேதி இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.

அதைப் படித்துவிட்டு, ‘தி இந்து - இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் தொடர்பு கொண்ட ஊத்தங்கரை செந்தில்குமார், மதுக்கரை லீனா, அரியலூர் வள்ளியம்மை உள்ளிட்ட வாசகர்கள் பலரும் நத்தைகளை ஒழிப்பது குறித்து தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளைப் பதிவு செய்தனர். இந்த நத்தைகளைக் கட்டுப்படுத்த இ.எம். என்ற திரவத்தைப் பயன்படுத்துவது குறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜும் நமக்குச் சில தகவல்களைத் தந்தார்.


பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்கா

இதனிடையே, இந்த நத்தைகள் தொடர்பாக திருச்சூரிலுள்ள கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்தும் நம்மிடம் பேசினார்கள். அவர்கள் சொன்ன தகவல்கள் நம்மை அதிரவைத்தன. நத்தைகள் முகாமிட்டுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என அவர்கள் சொன்னதால் நாமே அவர்களை வெள்ளியங்காட்டுக்கு வரவழைத்தோம். போகும் வழியில், இந்த நத்தைகளைப் பற்றி கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி சுகந்த சக்திவேலும் ஆய்வு மாணவி கீர்த்தி விஜயனும் நமக்கு விவரித்தனர்.

“அகாட்டினா ஃபியூலிக்கா என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இவை, கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. இவற்றிலுள்ள உருளைப் புழுக்கள் (Angiostrongylus cantonensis) குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. பன்றி, எலி உள்ளிட்ட விலங்குகளில் உள்ளதை விட இவற்றிலுள்ள புழுக்கள் பத்து மடங்கு வீரியம் கொண்டவை. ஈரப் பதம் இருக்கும்போது வெளிப்படும் இந்த நத்தைகள், ஈரம் காய்ந்துவிட்டால் மண்ணுக்குள் விதையுறக்க (Dormency) நிலைக்குச் சென்றுவிடும். இவை 140 வகையான விளைபொருட்களை நாசம் செய்கின்றன. 1850-களில் இந்த நத்தைகள் இந்தியாவுக்குள் வந்ததாக தகவல் இருக்கு.

கொல்கத்தா டு சென்னை

கொல்கத்தாவைச் சேர்ந்த, நத்தைகள் ஆய்வாளரான வில்லியம் பென்சன் என்பவர் மொரீசியஸிலிருந்து ஆய்வுக் காக கொண்டு வந்த இந்த நத்தைகளில் சிலவற்றை அங்குள்ள விக்டோரியா கார்டனில் அஜாக்கிரதையாக விட்டுவிட்டார். அவை அங்கிருந்து டார்ஜிலிங், ஒடிசா என பரவி, 1900-ல் சென்னைக்குள் வந்ததன. சென்னையில் சர்ச் கார்டன் ஒன்றில் ஆங்கிலேயர் ஒருவர் இந்த நத்தை குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.

அதேபோல், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த ராஜகிருஷ்ணன் மேனன் வெப்புள்ளி என்பவரும் இந்த நத்தை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கிறார். இவர் தனது சொந்த ஊருக்குப் போகும்போது இந்த நத்தைகளை எடுத்துச் சென்று அங்கேயும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அப்படித்தான் இவை பாலக்காடு பகுதியில் பரவியிருக்கு. இது அரசின் கவனத்துக்கு வருவதற்குள்ளாக கேரளத்தின் 13 ஜில்லாக்களில் பல்கி பெருகிவிட்டன நத்தைகள்.

மூளைக்காய்ச்சல் ஆபத்து

கேரளத்தின் வழியாக தமிழகத்தின் பொள்ளாச்சி, நாகர்கோவில், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும் இவை ஊடுருவின. இந்த நத்தைகள் கடித்த அல்லது ஊர்ந்து சென்ற காய்கறிகளை கவனமாக கையாள வேண்டும். இல்லாவிட்டால் அவற்றில் உள்ள கிருமி களால் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட ஆபத்துக்கள் வரலாம். இதெல்லாம் தெரிந்த பிறகு தான், நத்தைகளை ஒழிப்பதற்கான ஆராய்ச்சிகளை வேகப்படுத்தியது கேரள அரசு. 1970-களில் தொடங்கிய இந்த ஆய்வுகள் நத்தைகள் குறித்த மேலும் பல தகவல்களையும் அறிவதற்கு வாய்ப்பாக அமைந்தது” என்று சொல்லி முடித்தார்கள் சுகந்த சக்திவேலும் கீர்த்தி விஜயனும்!

தொடர் ஆராய்ச்சிகளின் பலனாக கேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இந்த நத்தைகளின் பெருக்கம் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, குமரி, கோபி என இந்த நத்தைகள் உற்பத்தியாகும் இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று, அவற்றை அழிக்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள் கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள். இந்த நத்தைகள், ஒருமுறைக்கு ஐநூறிலிருந்து அறுநூறு முட்டைகள் வரை இடும். இதிலிருந்து வெளிப்படும் குஞ்சுகளும் ஆறே மாதத்தில் இனப் பெருக்கத்துக்கு தயாராகிவிடும் என்பதால் இவை மிக வேகமாக பெருக்க மெடுத்துவிடும்.

தக்காளி நாற்றுகள் மூலமாக..

இவற்றை அழிக்கும் வழிமுறைகள் குறித்துப் பேசிய கேரள வன ஆராய்ச்சி நிறுவன குழுவினர், “25 கிராம் புகையிலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அதேபோல், 40 கிராம் காப்பர் சல்ஃபேட்டை1 லிட்டர் தண்ணீரில் தனியாக கரைத்து ஊறவைக்க வேண்டும். இந்த இரண்டு கலவைகளையும் ஒன்றாக கலந்து வடிகட்டி அதை நத்தைகள் மீது ஸ்பிரேயர் மூலம் தெளித்தால் அவை செத்துவிடும்.

25 கிராம் புகையிலைக்கு பதிலாக 1 கிராம் அக்டாரா என்னும் பூச்சிக் கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்தும் பயன்படுத்தலாம். நத்தைகள் பெருக்கமெடுக்கும் பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்த மருந்தைப் பயன்படுத்தினால் தான் நத்தைகளை முழுமையாக அழிக்க முடியும்” என்றனர்.

பாறப்பள்ளம் விவசாயிகளை சந்தித்த இந்த குழு வினர், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நத்தைகள் இருந்ததை பத்து ஆண்டுகளுக்கு முன்பே தாங்கள் உறுதிப்படுத்தியதாகவும் இப்போது, அங்கிருந்து எடுத்துவரப்பட்ட தக்காளி நாற்றுகள் மூலமாகவே பாறப்பள்ளம் பகுதிக்கு இந்த நத்தைகள் பரவியிருக்கின்றன என்றும் உறுதிப்படுத்தினர்.

நத்தைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட குழுவினர், அவற்றால் ஏற்படும் தீங்குகள் மற்றும் அவற்றை அழிப்பதற்கான வழிமுறைகள் குறித்த குறிப்பேடுகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய சுகந்த சக்திவேல், “இது ஆரம்பக்கட்ட வழிகாட்டல்தான். இந்தப் பகுதியில் எந்தெந்த தோட்டங்களில் நத்தைகள் தென்படுகின் றனவோ அந்த விவசாயிகள் அனைவரையும் ஓரிடத்தில் அமர்த்தி இன்னும் விளக்கமளிக்க வேண்டும். அதற்கு பல முகாம்களை நடத்த வேண்டியிருக்கும். இதற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைத்தால் மட்டுமே நத்தைகளை அழிப்பது சாத்தியமாகும்” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x