Published : 07 Oct 2017 02:43 PM
Last Updated : 07 Oct 2017 02:43 PM

யானைகளின் வருகை 51: கல்லாறு கெத்தனாரி பீட் வலசை!

 

பொலபொலவென்று பொழுது விடிந்து விட்டது. இரவு ஷிப்ட் முடிந்து வெளியில் வருவோரும், பகல் ஷிப்ட்டுக்கு உள்ளே போவோரும் சந்திக்கக்கூடிய காலை 8.30 மணி. அதற்கு முன்னதாகவே அந்தக் கம்பெனியின் முன்புறம் உள்ள தன் பெட்டிக்கடையை திறந்து வைத்தால் கொஞ்சம் பீடி, சிகரெட் மற்றும் பான்பராக் பொட்டலங்கள் கூடுதலாக விற்கும். அதற்காக அரக்க பறக்க வீட்டிலிருந்து புறப்பட்டு வந்தார் அந்த 62 வயது பெண்மணி. பெட்டிக்கடையின் பூட்டை திறந்தாரோ; அதன் கதவை அகற்றினாரோ, அவருக்கே வெளிச்சம்.

எப்படி அந்த ஒற்றை யானை வந்தது? எதற்காக அவரை தூக்கி வீசியது என்றே அவருக்கு தெரியவில்லை. நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லை. அந்தப் பெண்மணி காதுகளிலும், மூக்கிலும் தெறித்து ரத்தம் வெளியேற உயிரை விட்டிருந்தார். பெண்மணி தூக்கி வீசப்பட்ட கோலம். பெரிய பிளிறலுடன் அவளை சுற்றிச் சுற்றி வந்த ஒண்டி யானையின் வேகம். கம்பெனிக்குள்ளிருந்த ஆட்கள், கம்பெனிக்கு வெளியே இருந்து உள்ளே போகவிருந்த ஆட்கள் எல்லோருமே ஆடிப்போனார்கள்.

கூச்சல் போட்டு, பட்டாசுகளை வெடித்து அந்த ஒண்டி யானையை விரட்டுவதற்குள் படாதபாடு பட்டுப் போனார்கள். இந்த ஒண்டி யானை மட்டுமல்ல; கூட்டத்து யானைகளும அங்கே வந்துள்ளன. அந்த கம்பெனியின் வாயிற்கதவு மற்றும் சுற்றுச்சுவர்களை அடிக்கடி உடைத்து நொறுக்கியும் உள்ளன. கம்பெனியைப் பொறுத்தவரை கட்டப்படும்; இடிக்கப்படும்; மீண்டும் கட்டப்படும் கதைதான். ஆனால் தனி மனித கூலிக்கார வாழ்க்கை அப்படியில்லையே.

நடு இரவுக்குப் பின்னால், அதிகாலைக்கு முன்னால் இந்த யானைகள் வருவதும், கம்பெனியை முற்றுகையிடுவதும், சாலையிலேயே குறுக்கும் நெடுக்கிலும் உலாத்துவதையும் ஏற்றுக் கொள்ளலாம். காலை எட்டரை மணிக்கு இப்படி பகலில் வந்து இப்படி ஓர் அப்பாவி உயிரை கொல்லவும்தான் வேண்டுமா? என்றெல்லாம் காட்டு மிருகங்களிடம் நியாயம் கேட்க முடியாது.

எனவே இன்றைக்கு அந்த சம்பவம் நடந்து மூன்றாண்டுகள் ஆகியும், இந்தக் கம்பெனிக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் காலை எட்டரை மணிக்கு கூட அக்கம் பக்கம் பயப்பீதி ததும்ப சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். எங்கே யானை இருக்குமோ? போட்டுத்தாக்குமோ?

சென்ற அத்தியாயத்தில் விரிவாக பார்த்தோமல்லவா? அமெரிக்காவின் குப்பைக் கழிவுகளை கப்பல் கப்பலாக இறக்குமதி செய்த அந்தக் கம்பெனிக்கு அருகாமையில் அமைந்துள்ளதுதான் இந்த கம்பெனியும். சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இந்த கம்பெனி வெளிநாடுகளுக்கு டர்க்கி டவல் தயாரித்து அனுப்பி வருகிறது. இது யானைகள் வழிப்பாதையில் அமைந்திருப்பதோடு, தனது கம்பெனி அமைந்திருக்கும் நிலத்திற்கு அருகாமையில் உள்ள நீரோடைகளை எல்லாம் தனக்கே என மூடி முத்திரையிட்டு விட்டது.

அது மட்டுமல்லாது, அமெரிக்க குப்பை பிரிப்பு பணியை செய்த கம்பெனி போலவே இங்கே தான் விடும் கழிவு நீரை அப்படியே குட்டை அமைத்தும், வறண்டு போன தனது போர்வெல் கிணற்றில் செலுத்தியும், தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில்தான் பவானி ஆறு. அதைத்தாண்டிய கரையில்தான் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக நீர் அருந்திச் செல்கின்றன. இந்த நீர்வளம், நிலவளம், இயற்கை வளம் கருதித்தான் இந்த இடத்திற்கு அருகாமையில் 48 நாட்கள் தமிழக அரசின் கோயில் யானைகள் நலவாழ்வு முகாமை நடத்தினர் அதிகாரிகள்.

அந்த முகாம் யானைகள் மட்டுமல்ல, வழக்கமாக வரும் காட்டு யானைகளும் கூட இந்த குட்டையிலிருந்து கசியும், நச்சுக்கழிவுகளை தாங்கிய நீர், ஆற்றிலும், அதன் அதன் வழிப்பாதைகளில் தேங்கும் நீர்ப்படுககைளிலும் கலந்த பின்பு அதைத்தான் அருந்துகின்றன என்பதை சுற்றுப்பகுதி மக்கள் அனைவரும் அறிந்தே வைத்துள்ளனர். ஆனால் அதை வாய்திறந்து சொல்லும் சக்தி யாருக்கும் இருந்ததில்லை.

 

ஏனென்றால் அந்தக் கம்பெனி அதிபர்களும், நம் ஆட்சியாளர்களும், அதிகாரிகளுக்கும் அப்படியொரு நெருக்கம். ஒரு சில நேர்மையான வனத்துறை அதிகாரிகள் வந்துவிட்டு 'ம்' என்று மூச்சுவிட்டால் போச்சு. அவர் அப்புறம் எந்தப் பகுதியில் இருப்பாரோ அவருக்கே தெரியாது. இந்த கம்பெனியின் நிலை இப்படி என்றால் வனபத்திரகாளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில், நந்தவனம் அருகே சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பிளிச்சிங் சாய ஃபாக்டரி கதை அதை விடக் கொடுமை.

இது தொடங்கப்பட்டு 30 வருடங்களாகிறது. ஆரம்பத்தில் பெயரளவுக்கு புதுத்துணிகளின் சலவைப் பட்டறையாகவே செயல்பட்டு வந்த இந்த கம்பெனி, ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நெருக்கடிகள் கொடுத்து மூடியதன் எதிரொலி இங்கே துணிகள் சலவை செய்வதும், சாயமிடுவதும் அதிகரித்துவிட்டது. இதன் கழிவுகளை நேரடியாகவே பவானி ஆற்றில் விடவும் ஆரம்பித்தனர்.

இந்த ஃபாக்டரி மேட்டுப்பாளையம் நகராட்சிக்குள்ளேயே வருகிறது. சுற்றிலும் வீடுகளும், வணிக வளாகங்களும் உள்ளன. இந்த ஃபாக்டரி இரவு பகல் பாராமல் வெளிவிடும் புகையால் சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு நிறத்தில் புகைத்துகள்கள் படிய ஆரம்பித்தது. அதேபோல் பகலில் துணி துவைத்துக் காயப்போட்டால் அதில் எல்லாம் இந்த புகைத்துகள்கள் நிறைந்தன. இதனால் கொந்தளித்த மக்கள் பல முறை இந்த கம்பெனிக்கு எதிராக போராட்டங்களும் செய்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த கம்பெனியின் கதவுகளை, ஜன்னல்களை அடித்து நொறுக்கியதும் நடந்தது. போலீஸ், ரெவின்யூ, சூழல் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி மக்களை அமைதிப்படுத்தவும் செய்துள்ளனர். பல முறை நாங்கள் கழிவுகளை ஆற்றில் விடமாட்டோம். புகை போக்கியில் பில்டர் வைக்கிறோம் என்றெல்லாம் வாக்குறுதிகளும் அளித்துள்ளனர் ஃபாக்டரிக்காரர்கள். என்றாலும் அது கட்டுப்படுத்தப்பட்டதா என்றால் அதுதான் இல்லை.

 

பில்லூர் அணையில் எப்போது நீர்மின்உற்பத்தி முடிந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறதோ, அந்த நேரம் பார்த்து இவர்களும் தேக்கி வைத்த சாய, சலவை கழிவு நீரை திறந்து விட்டு விடுகிறார்கள். அதுவும் இல்லாவிட்டால் இரவு 2 மணி முதல் 4 மணி வரை கழிவுநீர் பாய்ச்சல் வேகத்தில் பவானி நதியில் துள்ளிக்குதித்து ஓடிக் கலக்கிறது. பவானி ஆற்றிற்கும் இந்த கம்பெனியின் முகப்புக்கும் சுமார் 60 அடி இடைவெளிதான். இடையே ஒரு தார்ச்சாலை செல்கிறது. அதற்கு கீழே குழாய் பதித்து கழிவுநீரை வெளியேற்றுகிறார்கள். இவர்களுக்கு உள்ளூர் அரசியல் புள்ளிகள், அதிகாரப்புள்ளிகள் எல்லாமே உறுதுணை என்பதால் மக்களுக்கு எதிரான இந்த சங்கதி தொடர்ந்து எந்தக் கட்டுப்பாடுமின்றி நடந்து கொண்டேயிருக்கிறது.

இங்கே இந்த நிலைமை என்றால் ஊட்டி, கோத்தகிரி சாலையில் நடக்கும் சூழல் கேடுகள், இயற்கைக்கு மாறான சங்கதிகள் ஏராளம். அதைப் பார்த்து மனதளவில் ரத்தம் சொறியாத சூழலியாளர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

எப்படி?

இந்தியாவிலேயே ஆசிய யானைகள் வழித்தடங்கள் என்று கண்டறியப்பட்ட இடங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. அதில் 11 இடங்கள் மிக முக்கியமானவை. அதில் ஒன்றான கல்லாறு - கெத்தனாரி பீட் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் வருவதுதான். கேரளா- தமிழ்நாடு- கர்நாடகா என நகர்ந்து கொண்டேயிருக்கும் யானைகள் இந்த பகுதியை மையம் கொள்ளாமல் செல்வது என்பது அரிதிலும், அரிதான ஒன்று. அந்த அளவுக்கு இங்கே நீர் சொறிய வைப்பது வருடம் முழுக்க வற்றாத ஓடிக் கொண்டிருந்த பவானி நதி. அதன் நீரோடைகளின் ஒன்றான கல்லாறு பகுதியில்தான் அமைந்திருக்கிறது மேற்சொல்லப்பட்ட கல்லாறு கெத்தனாரி பீட்..

அந்த வலசையில் இப்போதுபெரிய சர்வதேச பள்ளிக்கூடமும், ஆன்மீக மையமும், இன்னபிற தங்கும் விடுதிகளும், ஆசியப்புகழ் பெற்ற கேளிக்கை நீர் விளையாட்டுப் பூங்காக்களும் அமைந்துள்ளன.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x