Last Updated : 03 Oct, 2017 09:58 AM

 

Published : 03 Oct 2017 09:58 AM
Last Updated : 03 Oct 2017 09:58 AM

துல்லியத் தாக்குதலால் என்ன பயன்?

பா

கிஸ்தான் மீதான துல்லியத் தாக்குதல் நடந்து முடிந்து ஓராண்டாகிவிட்டபோதும், இன்னமும் துல்லியத் தாக்குதல் நடந்ததா, இல்லையா, இதனால் என்ன சாதிக்க முடிந்தது என விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த வேளையில், இரண்டு ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன. வழக்கமாக, ராணுவத் தளபதி ஒருவர் கையில் லேசர் பேனாவுடன், சில படங்களைக் காட்டி, ஆதாரமாக எதிரியிடம் கைப்பற்றிய பொருட்களைக் காட்டி பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கிக் கொண்டிருப்பார். ஆனால் இங்கு, அரசியல் தலைமை யின் உத்தரவின்படி, ராணுவத் தலைமை இந்தத் தாக்குதல் குறித்த தகவலை வெளியிட்டது.

அடுத்ததாக, ஓராண்டு நிறைவையொட்டி வெளியாகி இருக்கும் 2 புத்தகங்கள். இவை இரண்டும் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரிகள் மத்தியில் செல்வாக்குள்ள நிருபர்களால் எழுதப்பட்டவை. இருவருமே ராணுவ சாகசங்களை நேரில் பார்த்து எழுதப் பயிற்சி பெற்றவர்கள். எனவே இவர்களை நம்பலாம். துல்லியத் தாக்குதல் நடந்ததை இரண்டுமே உறுதி செய்கின்றன.

ஆனால், சில டிவி சேனல்களில் இது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாவதைத்தான் ஏற்க முடியவில்லை. மிகவும் குழந்தைத்தனமாக இருக்கிறது. முகமூடி அணிந்த, சிவப்பு தொப்பிகள், தோளில் அணிந்திருக்கும் பட்டை மட்டுமே தெரியும் ராணுவ கமாண்டோக்களின் பேட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த வீடியோ சம்பவங்கள் வேறு படங்களில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் 3 விஷயங்கள் மாறப்போவதில்லை. ஒன்று, துல்லியத் தாக்குதல் நடந்ததற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பது. இரண்டாவது, எந்த இழப்பும் இல்லாமல் இந்திய கமாண்டோ வீரர்கள் வெற்றிகரமாக திரும்பியது. மூன்றாவது, பழி வாங்கும் நடவடிக்கை என்பதைத் தவிர, இதனால் என்ன சாதிக்க முடிந்தது என யாரும் பேசாதது.

பாதுகாப்பு தொடர்பான செய்திகளை சேகரிப்பதில் திறமையான நிருபரான மனு பப்பி, நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட பதில்கள், அரசு வெளியிட்ட அறிக்கைகளின்படி, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்த ஆண்டு பாகிஸ்தானின் தாக்குதல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறார். இந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நிலவரப்படி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய தாக்குதல்கள் 228 முறை நடந்துள்ளன. ஆனால் 2016 முழு ஆண்டுக்குமே இத்தனை தாக்குதல்கள்தான் நடந்தன. எல்லைப் பாதுகாப்புப் படை கண்காணிக்கும் சர்வதேச எல்லைப் பகுதியில், முன்னேற்றம் தெரிகிறது. கடந்த ஆண்டு, 221 தாக்குதல்களைப் பாகிஸ்தான் நடத்தியது. ஆனால் தற்போது வரை 23 தாக்குதல்கள் மட்டுமே நடந்துள்ளன. அதேபோல், கடந்த ஆண்டு பலியான இந்திய வீரர்களின் எண்ணிக்கை 8. இதுவரை 4 வீரர்கள் பலியாகி உள்ளனர். பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே மக்களவையில் அளித்த பதிலில் இந்தத் தகவல் உள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவல் முயற்சியை இந்தியா முறியடித்தது குறித்து மாநிலங்களவையில் பேசியிருக்கிறார் பாம்ரே. 2016-ல் 27 முறை இந்திய ராணுவம் ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளது. 2017-ல் ஜூலை வரையில் 16 முறை. ஊடுருவல் முயற்சியில் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 37, இந்த ஆண்டில் ஜூலை வரை 36. இதில் முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் துல்லியத் தாக்குதலின் லட்சியம், பாகிஸ்தானின் எதிர்காலத் தாக்குதல்களை தடுப்பதுதான் என்றால், இந்த எண்ணிக்கை அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதையே காட்டுகிறது.

கடந்த 2005-ம் ஆண்டில் பிரிட்டனின் ராணுவ ஜெனரல் ரூபர்ட் ஸ்மித், தி யுடிலிட்டி ஆஃப் ஃபோர்ஸ் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில் இடம்பெற்ற போர் இனி கிடையாது (வார் நோ லாங்கர் எக்ஸிஸ்ட்ஸ்) என்ற ஆரம்ப வரிகள் குறித்து பல விமர்சகர்கள் ஆய்வு செய்து எழுதியிருந்தார்கள். அது மிகவும் முக்கியமான வாக்கியம். வெற்றியை நோக்கமாகக் கொண்டு வழக்கமாக போர் வீரர்கள் பெரிய பெரிய போர் தளவாடங்களுடன் போரிடும் காலம் முடிவுக்கு வந்து விட்டது. இனி நடக்கும் புதிய போர்கள் மக்களுக்குள்ளோ அல்லது மக்களுக்கு இடையேயோ நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார். பெரிய ராணுவத்தால் இவற்றை முடிவுக்குக் கொண்டு வர முடியாது. இதனால் போர் தளவாடங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் நாடுகள் அவற்றால் பலனில்லை என்பதை உணர வேண்டும்.

இஸ்ரேல் தனது அண்டை நாடான பாலஸ்தீனத்துடனும், அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலும் போரிட்டு வருவதைப் பார்க்கலாம். போரிடும் தீவிரவாதிகளுக்கு நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டும்போது நிலைமை மேலும் சிக்கலாகிறது. உதாரணமாக, காஷ்மீரில் எல்லைக்கு இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் இருக்கும் மக்களுடன் ஒரு நாடு (பாகிஸ்தான்) சம்பந்தப்பட்டிருப்பதை உதாரணமாகச் சொல்லலாம்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்துகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்கா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இந்தியாவும் தனது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும். தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்துக்கு கீழ் இருக்கும் ராணுவ செலவை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும். கடந்த 1987-88-ல் ராஜீவ் காந்தி 3.38 சதவீதமாக அதிகரித்தார். 1990-91-ல் பொருளாதார நெருக்கடியை பரிசாக அளித்தார். பாகிஸ்தானின் தொந்தரவை சமாளிக்க இந்தியா முழு மூச்சாக தனது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும். அல்லது செலவு குறைவான வேறு வழிகள் இருக்கிறதா? துல்லியத் தாக்குதல் ஆண்டுவிழாவைக் கொண்டாடுவதோடு, இது குறித்தும் இந்தியாவின் திட்டமிடும் அறிஞர்கள் விவாதிக்க வேண்டும்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

சேகர் குப்தா, ‘தி பிரிண்ட்’ தலைவர்,

முதன்மைஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x