

தமிழர்கள் பொங்கலை மிகப்பெரிதாகக் கொண்டாடுவதுபோல் கேரள மக்கள் ஓணத்தை கொண்டாடுகிறார்கள். சிங்க மாதத்தின் ஹஸ்த நட்சத்திரத்தன்று தொடங்கும் விழா, தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கும். பத்தாம் நாளான திருவோண நட்சத்திர நாளை ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வோர் ஆண்டும் ஓணத் திருநாளன்று தங்கள் வீடுகளுக்கு வருகை தருவதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள். அதனால் அவரை வரவேற்க வாசலில் பலவகை மலர்களால் அத்தப்பூ கோலமிடுவார்கள். ஓணம் பண்டிகையின்போது 23 வகையான பதார்த்தங்கள் கொண்ட ‘ஓண சத்யா’ விருந்து சமைக்கப்படும். ஓணம் விருந்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதார்த்தங்களைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார்.
பாலடை பாயசம்
என்னென்ன தேவை?
பாலடை - அரை கப்
தேங்காய்ப் பால் - இரண்டு கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
நெய் – சிறிதளவு
முந்திரி (உடைத்தது) - இரண்டு டேபிள்ஸ்பூன்
சீவிய பாதாம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய் விட்டுச் சூடானதும் பாலடையைப் போட்டு வறுத்து, தனியாக எடுத்துவையுங்கள். முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் தேங்காய்ப் பால் விட்டுக் கொதி வந்ததும் குறைந்த தணலில் வையுங்கள். வறுத்துவைத்திருக்கும் பாலடையைப் போட்டு வேகவிடுங்கள். வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி தூவி, அடுப்பை அணைத்துவிடுங்கள். வறுத்த முந்திரி, குங்குமப்பூ தூவிப் பரிமாறுங்கள். விரும்பினால் சீவிய பிஸ்தா தூவலாம். இதைச் சூடாகவும் பருகலாம், ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.
பெரும்பாலான கடைகளில் பாலடை கிடைகிறது. இல்லையென்றால் நாமே செய்யலாம்.