Last Updated : 18 Sep, 2017 11:20 AM

 

Published : 18 Sep 2017 11:20 AM
Last Updated : 18 Sep 2017 11:20 AM

நவராத்திரி நல்விருந்து!- கோதுமைச் சுண்டல்

வராத்திரியை வழிபாட்டுப் பண்டிகையாக மட்டும் சுருக்கிவிட முடியாது; பெண்களும் குழந்தைகளும் ஒன்றுகூடும் விழாவாகவும் அது விளங்குகிறது என்று சொல்கிறவர்களும் உண்டு. புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை தொடங்கி அடுத்த ஒன்பது நாட்களும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சில வீடுகளில் கொலுவைத்து, அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்கரிப்பார்கள். விதவிதமான பலகாரங்கள் சமைத்து, வீட்டுக்கு வரும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுப்பார்கள். நவராத்திரியின் சிறப்பைக்கூட்டும் விதமாகப் புதுவிதமான பதார்த்தங்களைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன்.

முளைவிட்ட கோதுமைச் சுண்டல்

என்னென்ன தேவை?

முளைவிட்ட கோதுமை - 200 கிராம்

பச்சை மிளகாய் - 4

உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

புதினா, மல்லி (நறுக்கியது) - கால் கைப்பிடி

கடுகு - அரை டீஸ்பூன்

பெருங்காயப் பொடி - அரை சிட்டிகை

பொடித்த பொட்டுக்கடலை

- ஒரு டேபிள் டீஸ்பூன்

கேரட் - ஒரு டேபிள் டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

சம்பா கோதுமையைக் கழுவி, தண்ணீரில் பத்து மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டுங்கள். அதை ஈரத்துணியில் சுற்றி முளைகட்டவிடுங்கள். கோதுமை முளைவிடக் கிட்டத்தட்ட 12 மணி நேரம் ஆகும். முளைகட்டிய கோதுமையை மூழ்கும் அளவு நீர்விட்டு குக்கரில் ஆறு முதல் ஏழு விசில் விட்டு, வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். (வடிகட்டிய நீரில் சிறிது உப்பு, மிளகுத் தூள், சர்க்கரை சிறிது, அரை டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து ‘சூப்’போல் குடிக்கலாம்).

வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு தாளித்து, பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள். பிறகு வேகவைத்த கோதுமையைப் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிவையுங்கள். அதனுடன் மல்லி, புதினா, துருவிய கேரட், தேங்காய்த் துருவல், பொடித்த பொட்டுக்கடலை, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறுங்கள்.

 

மினி பூரி பாயசம்

என்னென்ன தேவை?

மைதா, ரவை - தலா 100 கிராம்

உப்பு - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 150 கிராம்

நெய் - 100 கிராம்

பால் - அரை லிட்டர்

சர்க்கரை - 150 கிராம்

வறுத்த முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன்

கசகசா விழுது - 2 டீஸ்பூன்

குங்குமப்பூ இதழ்கள் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

மைதா, ரவை இவற்றுடன் சிறிது உப்பு, நெய், தேவையான அளவு நீர்விட்டுப் பூரி மாவுபோல் பிசைந்துகொள்ளுங்கள். இதை ஈரத்துணியால் மூடி அரை மணி நேரம் அப்படியே வையுங்கள். கசகசாவை அரை மணி நேரம் ஊறவைத்துப் பால் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

சுண்டக் காய்ச்சிய பாலில் சர்க்கரையைக் கரையவிட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்குங்கள். பால் லேசாகக் கொதித்ததும் கசகசா விழுது, சிறிதளவு நீர் சேர்த்து இறக்கிவையுங்கள். அதில் ஏலக்காய்ப் பொடி சேர்த்து மூடிவையுங்கள்.

பிசைந்து வைத்திருக்கும் மாவுக் கலவையைப் பெரிய சப்பாத்தியாகத் திரட்டுங்கள். அதைச் சிறு சிறு வட்டமாக வெட்டி, சூடான எண்ணெய் அல்லது நெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள். பொரித்தெடுத்த பூரிகளை இளம் சூடான பாலில் போடுங்கள். அதில் வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூ தூவிப் பரிமாறுங்கள். பாலில் மிதந்து வரும் குண்டு குண்டான சிறிய பூரிகள் பார்க்க அழகாகவும் சுவைக்க அருமையாகவும் இருக்கும்.

கடுகு புளியோதரை

என்னென்ன தேவை?

உதிரியாக வடித்த பச்சரிசி சாதம்

- 2 ஆழாக்கு

கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்

பெருங்காயப் பொடி - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 150 கிராம்

புளி விழுது - 3 எலுமிச்சை அளவு

தாளிக்க

கடுகு, சீரகம், பெருங்காயம்

- தலா அரை டீஸ்பூன்

கடலைப் பருப்பு, உளுந்து, வேர்க்கடலை - தலா 3 டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது

பச்சை மிளகாய் (சிறியது) - 3

சிவப்பு மிளகாய் - 3

எப்படிச் செய்வது?

புளியை ஊறவைத்துக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். வடித்த சாதத்தில் ஐம்பது கிராம் நல்லெண்ணெய், சிறிது உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, கடுகுப் பொடி இவற்றைக் கலந்துவையுங்கள். மீதமுள்ள நல்லெண்ணெய்யை வாணலியில் ஊற்றிச் சூடானதும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்துத் தாளியுங்கள். அவை நன்றாகப் பொரிந்ததும் புளி விழுது, சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். புளிக்காய்ச்சல் பதம் வந்தவுடன் ஆறிய சாதத்தில் கொட்டிக் கலந்து நன்றாகக் கிளறுங்கள். நன்றாக ஊறிய பிறகு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 

பழுப்பரிசி புட்டு

என்னென்ன தேவை?

 

பழுப்பரிசி - 200 கிராம்

பாகு வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய்ப் பொடி - சிறிது

தேங்காய்த் துருவல் - முக்கால் கப்

வறுத்த முந்திரி, திராட்சை - 50 கிராம்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

பாதியளவு வேகவைத்த துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்

தேன் - ஒரு டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

பழுப்பரிசியைத் தண்ணீரில் கழுவி, வெயிலில் உலர்த்தி, ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளுங்கள். பழுப்பரிசி ரவையைச் சிறு தீயில் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். அதில் உப்பு கலந்து சிறிதளவு வெந்நீர் தெளித்துப் பிசறி, பத்து நிமிடம் ஆவியில் வேகவையுங்கள். ஆறியதும் உதிர்த்துக்கொள்ளுங்கள்.

வெல்லத்தில் ஒரு கரண்டி நீர் விட்டுக் கரைத்து, லேசாகக் காய்ச்சி வடிகட்டுங்கள். மீண்டும் அதை அடுப்பில் ஏற்றி, வெல்லப்பாகு நுரை வரும்போது உதிர்த்த ரவை, நெய், துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்றாகக் கிளறி மூடி, அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அரை மணி நேரத்துக்குப் பின் பாகில் வேகவிட்ட ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கைவிடாமல் கிளறுங்கள். உதிரி உதிரியாக வரும். கூடுதல் சுவைக்கு ஒரு டீஸ்பூன் தேனை ஊற்றிக் கிளறிப் பரிமாறுங்கள்.

மைதா கோதுமை நொறுக்கு

என்னென்ன தேவை?

 

மைதா, கோதுமை மாவு - தலா 100 கிராம்

பாசிப் பருப்பு - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி,

வறுத்த எள் - தலா ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 300 கிராம்

நெய் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

 

பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, வேகவையுங்கள். அந்த நீருடனேயே ஆறவிடுங்கள். உருக்கிய நெய், உப்பு, மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி, வறுத்த எள், மாவு வகைகளைப் பாசிப் பருப்பில் சேர்த்து, பூரி மாவு போல் கெட்டியாகப் பிசையுங்கள்.

பத்து நிமிடம் கழித்து மாவைச் சிறிய சுண்டைக்காய் அளவு எடுத்து உருட்டி, சிறிய பட்டன் போல் தட்டுங்கள். எல்லா மாவையும் இப்படி உருட்டி, சூடான எண்ணெய்யில் மிதமான சூட்டில் சிவக்கப் பொரித்தெடுங்கள். இது 15 நாட்கள்வரை கெடாது.

இனிப்புச் சோளச் சுண்டல்

என்னென்ன தேவை?

 

சோள முத்துக்கள் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் - சிறிது

 

தாளிக்க

நெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

தேங்காய்த் துருவல் - தேவையான அளவு

சிவப்பு நிற டூட்டி ஃபுரூட்டி - ஒரு டீஸ்பூன்

மதுளை முத்துக்கள் - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

இனிப்புச் சோளத்தை வேகவைத்து, முத்துக்களை உதிர்த்துக்கொள்ளுங்கள். நெய் உருகியதும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்துத் தாளியுங்கள். உப்பு, சோள முத்துக்கள் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். அதில் தேங்காய்த் துருவல், மாதுளை முத்துக்கள் டூட்டி ஃபுரூட்டி சேர்த்துப் பரிமாறுங்கள்.

இனிப்புச் சதுரம்

என்னென்ன தேவை?

 

மைதா - 200 கிராம்

சர்க்கரை - 200 கிராம்

நெய், டால்டா - 50 கிராம்

ஆப்ப சோடா, கசகசா

- தலா ஒரு சிட்டிகை

கொப்பரைத் தேங்காய்த் துருவல்

- ஒரு டீஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன்

சமையல் எண்ணெய் - 200 கிராம்

நெய் - 100 கிராம்

எப்படிச் செய்வது?

சர்க்கரையை ஒரு கப் நீர்விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்துச் சூடாக்குங்கள். இதில் நெய், ஏலக்காய்ப் பொடி, கசகசா, கொப்பரைத் துருவல், ஆப்ப சோடா சேர்த்து இறக்கிவையுங்கள்.

மைதா மாவைச் சிறிதளவு நீர்விட்டுப் பூரி மாவு போல பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவைப் பத்து நிமிடம் ஊறவிடுங்கள். வாணலியில் நெய்யும் எண்ணெயும் ஊற்றிச் சூடாக்குங்கள். ஊறிய மாவைச் சப்பாத்தி போல் இட்டு, சிறு சிறு சதுரங்களாக வெட்டிச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

 

படங்கள்: எல்.சீனிவாசன்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x