

தீபாவளியின் தொடர்ச்சியாக விளக்குகளின் விழாவான திருக்கார்த்திகை வந்துவிடும். கார்த்திகை மாதத்தில் பகல் பொழுது முடிந்து சீக்கிரமே இரவுப் பொழுது தொடங்கிவிடும் என்பதால் அந்தக் காலத்தில் வீடுகளிலும் வெளியிலும் விளக்குகளை ஏற்றிவைப்பார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றும் மாதம் முழுவதும் மாலை நேரங்களில் விளக்கேற்றுவது வழக்கம். “கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றுவது வழக்கம். பலர் விதவிதமான நைவேத்தியங்களைக் கடவுளுக்குப் படைப்பார்கள்” என்று சொல்கிறார் சென்னை காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த விசாலா ராஜன். கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடிய பலகார வகைகள் சிலவற்றைக் கற்றுத் தருகிறார் இவர்.
என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு - 200 கிராம்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
ஏலக்காய்த் தூள், நெய் - தலா ஒரு டீஸ்பூன்
மைதா- கால் கிலோ
உப்பு - சிறிதளவு
வாழை இலை - 2
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பை வேகவைத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிக்கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலை நெய் விட்டு வதக்கிக்கொள்ளுங்கள். ஒரு வாணலியில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து இளகியதும், அரைத்த கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் , சிறிது நெய் விட்டுச் சுருளக் கிளறுங்கள்.
மைதாவுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். வாழை இலையைச் சிறு சிறு சதுரங்களாக வெட்டி எண்ணெய் தடவி , பிசைந்துவைத்த மாவை மெலிதாகத் தட்டுங்கள். அதன் மேல் பூரணம் வைத்து, இரண்டாக மடித்து, இட்லி தட்டில் வேகவைத்து எடுங்கள். இந்த இலை அடை நாஞ்சில் நாட்டில் செய்யப்படுவது. மைதாவுக்குப் பதிலாகப் பச்சரிசி மாவையும் பயன்படுத்தலாம்.