

என்னென்ன தேவை?
பசும் பால் – ஒரு லிட்டர்
எலுமிச்சை சாறு – ஒன்றரை டீஸ்பூன்
தேன் – 3 டீஸ்பூன்
குங்குமப் பூ , ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு
எப்படிச் செய்வது?
பசும்பாலைக் காய்ச்சி, பொங்கிவரும் போது எலுமிச்சை சாறு விட்டுச் சிறிது நேரம் மூடிவைத்தால் பால் பிரிந்துவரும். அதை வடிகட்டி எடுத்து மெல்லிய துணியில் கட்டி, குழாய் தண்ணீரில் நேரடியாகக் காட்டி, நன்றாக அலசிப் பிழிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் எலுமிச்சையின் புளிப்புச் சுவை நீங்கும். பிறகு அதன் மேல் ஒரு கனமான பாத்திரத்தை ஒரு மணி நேரத்துக்கு வைத்தால் பனீர் தயார். இந்த பனீருடன் தேன், ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தால் சுவையான சந்தேஷ் தயார். பனீரை நன்கு பிசைந்து அதனுள்ளே தேங்காய்ப் பூரணம் வைத்து விரும்பிய வடிவங்களில் செய்தும் சாப்பிடலாம்.