வகை வகையாக மதிய உணவு: ஷாங்காய் ரைஸ்

வகை வகையாக மதிய உணவு: ஷாங்காய் ரைஸ்
Updated on
1 min read

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாச்சு. காலையில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டுமே என்ற கவலை குழந்தைகளுக்கு என்றால் அவர்களின் மதிய உணவுக்கு எதைத் தந்தனுப்புவது என்ற கவலை பெற்றோருக்கு. என்னதான் சுவையாகச் சமைத்தாலும் மீதி வைத்துவிடும் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி விதவிதமாகச் சமைக்கும் பக்குவத்தை கற்றுத் தருகிறார், சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஆதிரை வேணுகோபால்.

பள்ளிக் குழந்தைகளுக்கான சிற்றுண்டி வகைகள் குறித்துப் புத்தகம் எழுதிய அனுபவமும் கைகொடுக்க, நிமிடங்களில் தயாரித்துவிடக்கூடிய மதிய உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் இவர்.

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி - 2 கப்

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 6 பல்

காய்ந்த மிளகாய் - 6

கேரட், பீன்ஸ், குடமிளகாய், முட்டைகோஸ்

(பொடியாக நறுக்கியது) - அரை கப்

நறுக்கிய வெங்காயம் - அரை கப்

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ், வினிகர் - தலா அரை டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். பாசுமதி அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய மற்ற காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்திருக்கும் விழுது, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். காய்கள் வதங்கியதும், சாதத்தைக் கொட்டிக் கிளறி, இறக்கவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in