Published : 22 Oct 2016 10:13 AM
Last Updated : 22 Oct 2016 10:13 AM

அதிசய உணவுகள் - 16: பிரம்மாண்ட தகி வடை!

‘இந்தியா மனித இனத்தைத் தாங்கும் தொட்டிலாகத் திகழ்கிறது. இந்தியா மனித மொழியின் பிறப்பிடம். உலக வரலாற்றின் தாய். புராணக் கதைகளின் பாட்டி. பாரம்பரியத்தின் கொள்ளுப் பாட்டி. மிகவும் அரிய, அக்கபூர்வமான மனித வரலாற்றுச் சாதனங்கள் பொக்கிஷமாக இருப்பது இந்தியாவில் மட்டும்தான்!’’ - மார்க் டிவைன்

பன்னாட்டு அறிஞர்கள் போற்றிப் புகழும் இந்தியா, என் தாய் நாடாக இருப்பது… நான் முற்பிறவிகளில் செய்த தவப்பயனாகவே எண்ணுபவள். உலகின் பலநாடுகளைக் கண்ணாறக் கண்டு, பலவிதமான கிடைப்பதற்கு அரிய அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், தாய்நாட்டுக்குத் திரும்பும்போது, என் மனம் சொல்ல முடியாத அளவுக்கு இன்பத்தில் ஆழ்ந்துவிடும்!

இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன். பலவிதமான உணவு வகைகளை உண்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இன்டூரில் உள்ள இரவு உணவு பஜாரான ‘சராபா’வில் ஒரே இரவில் சாப்பிட்ட தின்பண்டங்களைப் போல வேறு எங்குமே உண்டது இல்லை.

இந்தியாவின் ஒரே உணவு பஜா ரான சராபாவில் சாப்பிட முடிவு செய்து விட்டோம். ஆனாலும், மனதில் சிறு கலக் கம் இருந்தது. உள்நாடு என்றாலும் வெளி நாடுகள் என்றாலும் உணவு விஷயத்தில் நானும் என் கணவரும் உஷாராக இருப்போம். வயிறு கெட்டால் எப்படி ஊர் சுற்றுவது? ஆனால், எங்களை அங்கே சென்று சாப்பிடச் சொன்ன நண்பர் கூறினார்: ‘‘கலங்காதீங்க… அங்கே போய் பாருங்க. பிறகு நீங்களே புகுந்து விளையாடுவீர்கள்.’’

இன்டூரின் ராஜ்வாடா என்ற இடம் வரை காரில் சென்றோம். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பிறகு, நடைபயின்றால்தான் சராபா பஜாரின் குறுகிய தெருக்களில் போக முடி யும் என்பதால் நடக்கத் தொடங்கி னோம்.

திரும்பிய இடங்களில் எல்லாம் நகைக் கடைகள் என்கிற பெயர்ப் பலகைகள் கண் சிமிட்டின. பகல்வேளைகளில் ஜரூராக நகை வணிகம்… இரவுவேளைகளில் உணவுக் கடைகள். இரவு 8 மணிக்கு மேல் நகைக் கடைகள் மூடிய பிறகு பலவிதமான சாப்பாட்டுக் கடைகள் திறக்கப்படுகின்றன. வியாபாரம் தடபுடலாக சூடு பறக்கிறது.

சராபா உணவு பஜாரின் ஒரு தெருவில் நுழைந்ததுமே, நானும் என் கணவரும் கண்களை இமைக்க மறந்தோம். கற்பனைகளுக்கு மிஞ்சிய சாப்பாட்டுக் கடைகள் நியான் பல்புகள் கக்கிய வெளிச்சத்தில் பளபளத்தன. பலவிதமான தின்பண்டங்கள் வறுபடும் வாசனை என் மூக்கில் மோத, வாய் உமிழ்நீரை அதிகமாக சுரக்கத் தொடங்கியது. எங்கும் கடாயில் மோதும் கரண்டிகளின் சத்தம்… திருவிழாக் கூட்டம்!

வரிசை கட்டி நின்ற கடைகளில் விற்கப்பட்ட தின்பண்டங்களின் எண் ணிக்கை என்னை மிரள வைத்தது. சில வற்றின் பெயர்களையாவது சொல் கிறேன். தகி வடா, போகா, ஆலு பேட் டீஸ், சமோசாஸ், கச்சோரீஸ், பானிபூரி, பாவ்பாஜி, செளமின், பீட்சா, ஆலு மட்டர் பேட்டீஸ், நாரியல் பேட்டீஸ், புட்டி காகீஸ், மால்புவா, தோசா, இட்லி, ஜிலேபி, குலோப் ஜாமூன், ரசகுல்லா, ஷிகன்ஜி, ஃபலூடா, ஐஸ்கிரீம், குல்பி, ரபடி, கராடு, காஜர் ஹல்வா… அப்பாடி முடியலை சாமீ… மூச்சு வாங்கியது!

சந்தர்ப்பம் கிடைத்தால் சராபாவுக்கு போய் வாருங்க. ‘கல்யாண சமையல் சாதம்…’ என்று ஹம்மிங் செய்தபடி… ஒரு வெட்டு வெட்டுங்க. நான் இப்படித்தான் செய்தேன்!

சராபா உணவு பஜாரில் ‘ஜோஷி தகி வடா’ என்ற கடையில் கூட்டம் அதிகமாக இருக்கவே, உணவு வேட்டைக்கு தொடக்கமாக நாங்கள் பிள்ளையார் சுழி போட, அந்தக் கடைக்குள் நுழைந் தோம். எங்கள் முறை வந்தது, ‘‘ஒரு தகி வடை தாருங்கள்…’’ என்றேன்.

மறுவிநாடியே என் முன் வந்த அந்த வடையைப் பார்த்து அதிர்ந்துபோனேன். தயிர் வடையா அது? நம்ம ஊர் வடை யைப் போல மூன்று மடங்கு பெரிய அளவில் இருந்தது! கடைக்காரர் அந்த வடையை ஒரு கரண்டியில் எடுத்தார். மறுகையில் ஒரு தொன்னை. சுமார் நாலடி உயரத்துக்கு வடை மேல் நோக்கி வீசப்பட்டது. அடுத்து மேலே வீசப்பட்ட வடை கீழ்நோக்கி பயணப்பட்டபோது, சரியாக தொன்னையைப் பிடித்திருந்த கை நகர்ந்து அதை கேட்ச் பிடித்தது. வடை தொன்னையில் விழுந்தது. எல் லாம் ஒரு விநாடியில் நிகழ்ந்து முடிந்து விட்டது. அப்படி பிடிக்கப்பட்ட தயிர் வடையின் மீது மேலும் தயிர் ஊற்றப்பட் டது. பிறகு, அதன் மீது பிளாக் சால்ட், நன்றாக வறுக்கப்பட்ட சீரகப் பொடி, மிள காய்ப் பொடி போன்றவைத் தூவப்பட் டன. கடைசியாக சிறிது கொத்துமல்லித் தழையைப் போட்டு ஒரு ஸ்பூனை வடையில் குத்தி என்னிடம் நீட்டினார் கடைக்காரர்.

கூரையை நோக்கி வீசப்பட்ட வடையைப் பார்த்த பிரமிப்பில் இருந்து நீங்காத நிலையில் இருந்த என்னை வடையின் சுவை மீண்டும் பிரமிப்பில் தள்ளியது.

‘விஜய் சாட் ஹவுஸ்’ என்கிற உணவ கத்தில் விற்கப்படும் ஆலு பேட்டீஸை யும், கம்மன் டோக்லாவையும் சாப்பிட, போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். சுடச் சுட ஆலு பேட்டீஸை எடுத்து வாயில் போட்டேன். அந்தச் சுவை தந்த உற்சாகத்தில் ‘வாவ்’ என்றேன். வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து, அதோடு தண்ணீரில் முக்கி, பிறகு பிழிந்து எடுத்த ரொட்டித் துண்டுகளைச் சேர்த்து பிசைந்து லைட் டாக மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்தால் ஆலு பேட்டீஸ் ரெடி!

இதில் கோக்கனட் பேட்டீஸ் என்பது இந்த கலவைக்கு நடுவே துருவிய தேங்காயை வைத்து உருட்டி, பொரித்து எடுப்பதாகும்.

‘‘இதன் பேரு செளமின். இரண்டு வாய் சாப்பிடுங்க…’’ என்று சொல்லி என் முன் ஒரு தட்டு நீட்டப்பட்டது. வேக வைத்த நூடுல்ஸும், காய்கறிகளும் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது அது. ஊற வைத்த அவலில் செய்த போகா; ஊற வைத்த ஜவ்வரிசியில் செய்யப்பட்ட சமுதானா; வேக வைத்து வெட்டி… எண்ணெயில் பொரித்து… சாட் மசாலாத் தூவி சுடச் சுடத் தரப்படும் சேனைக் கிழங்கு போன்றவையும் இங்கு சாப்பிட வேண்டியவை.

நகோரி ஸ்வீட் கடையில் விற்கப் படும் ஷிகன்ஜி, தூத் ரபடி, மாம்பழ பாசந்தி, விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரம் போன்று மிகப் பெரிய சைஸில் அசல் நெய்யில் வறுக்கப்பட்டு, பிறகு சர்க்கரைப் பாகில் ஊறப்போட்டு கொடுக்கும் ஜிலேபி என்று சாப்பிட்டு வயிறு நிரம்பிப் போனது. ஆனால், அவை எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. சராபாவில் பழையது என்று எதுவும் இல்லை. குளிர் பெட்டிகளின் ராஜ்ஜியம் இல்லை. சராபாவுக்கு ஜே போட்டது என் குளிர்ந்த வயிறு. இந்த உணவு பஜாரில் சைவ உணவுகள் மட்டுமே விற்கப்படுகின்றன என்பது கூடுதல் தகவலாகும்.

- பயணிப்போம்... | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x