

குலோப்ஜாமூன் என்றால் உருண்டையாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. அதனால் நீள் வடிவில் செய்து புதுமையைப் படைக்கலாம். ஒரு மாறுதலுக்காக, பாதுஷா போல் தட்டையாகச் செய்து நடுவில் குழி செய்து அதில் முந்திரி, பிஸ்தா இவற்றைக் கலந்து வைத்து, மாவால் மூடி நெய்யில் பொரித்தெடுத்து பாகில் ஊறவிடுங்கள். வட இந்திய இனிப்பையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்குச் சுவை பிரமாதமாக இருக்கும்.
பக்குவமாகப் பாகு காய்ச்சியும் அதிரசத்தை ஆள்வைத்துதான் பிய்க்க வேண்டியிருக்கிறதா? கவலையை விடுங்கள். அதிரசத்தை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் லேசாக வேகவிட்டு எடுத்துப் பரிமாறுங்கள். கையில் எடுக்கும்போதே வாயில் கரைந்துவிடும்.
அதிரசம் உதிர்ந்துபோவதைச் சரிசெய்வதற்கும் வழி இருக்கிறது. ஒரு கப் அரிசியை ஊறவைத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் மாவாகப் பொடித்து, சலித்து அதை அதிரச மாவுடன் சிறிது பால் தெளித்துப் பிசைந்து அதிரசம் இட்டுப் பாருங்கள், பிரமாதமான பக்குவத்தில் இருக்கும்.
மைசூர்பாகு, பர்ஃபி கடினமாகி விட்டால் அதை வீணாக்காமல் சமாளிக்கக் கைவசம் ஐடியா இருக்கிறது. அவற்றை மிக்ஸியில் போட்டுத் தூள் செய்து, சோமாஸ் செய்வதற்குப் பூரணமாகப் பயன்படுத்தலாம்.
தீபாவளிக்கு வழக்கமான பலகாரம்தான் செய்ய வேண்டுமா? தினமும் செய்கிற இட்லியையே இனிப்பாக மாற்றலாம். வேகவைத்த பாசிப் பருப்பு, தேங்காய், வெல்லம் இவற்றைக் கலந்து பூரணம்போல வைத்துக்கொள்ளுங்கள். இட்லி வார்க்கும்போது மாவை ஊற்றி இந்தப் பூரணத்தை நடுவில் வைத்து வேகவைத்தால், சூப்பர் சுவையோடு ஸ்வீட் இட்லி ரெடி.
- தேவி, சென்னை.