

அல்வா தவிர திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மற்றொரு இனிப்பு திரிபாகம். பால்கோவா பதத்தில் இருக்கும் இந்த இனிப்பைச் செய்வது வெகு சுலபம். விசேஷ நாட்களில் செய்வதற்கேற்ற எளிதான, சுவையான பண்டம்.
எப்படிச் செய்வது?
பாலில் குங்குமப்பூவைப் போட்டு கால் மணி நேரம் ஊறவையுங்கள். சலித்த கடலை மாவைப் பாலில் கொட்டி, கட்டி விழாமல் மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள். முந்திரியைக் கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தில் கடலைமாவு - பால் கரைசலை விட்டு, சிறு தீயில் கிளறிக்கொண்டேயிருங்கள்.
கடலை மாவு கலவை இறுகிவரும்போது, சர்க்கரையைச் சேருங்கள். சர்க்கரை சேர்த்ததும் கலவையின் அளவு அதிகரிக்கும். தொடர்ந்து கிளறிக்கொண்டேயிருங்கள். கலவை இறுகி வரும் போது, சிறிது சிறிதாக நெய்யைச் சேருங்கள். பொடித்த முந்திரியையும், கையால் பொடித்த பச்சைக் கற்பூரத்தையும் இறக்குவதற்கு முன் சேருங்கள். 20 நிமிடங்களில் சுவையான திரிப்பாகம் தயார்.
திரிபாகத்தை, சிறு தீயில் மட்டுமே செய்ய வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் செய்வது உகந்தது. தொடர்ந்து கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- சங்கரி பகவதி