

வேளை தவறாமல் சாப்பிடுவது எத்தனை முக்கியமோ அதைவிட முக்கியம் குறிப்பிட்ட இடைவெளியில் விரதம் இருப்பதும். அதனால்தான் விரதத்தை ஆன்மிகத்துடன் இணைத்துக் கடைப்பிடிக்கும் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். விரதமிருக்க ஒரு வாய்ப்பாகக் காரடையான் நோன்பு வரப்போகிறது. அன்று விரதமிருந்து உருகாத வெண்ணெயும் ஓர் அடையும் வைத்து அம்மனை வழிபடுவார்கள் சிலர். இன்னும் சிலர் மாதம் தோறும் கிருத்திகை நாட்களிலிலோ சதுர்த்தியன்றோ விரதமிருப்பர். “தினமும் சாப்பிடுவது போல விரத நாளன்று சாப்பிட முடியாது. விரத தினத்துக்கென்று சில விசேஷ உணவு வகைகள் உண்டு” என்று சொல்கிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். விரத நாட்களில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத்தருகிறார் அவர்.
மாவிளக்கு
என்னென்ன தேவை?
பச்சரிசி - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய் - 2
நெய் - 3 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அரிசியைச் சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு தண்ணீரை வடித்து, வெள்ளைத் துணியில் பரப்பி, அரை மணி நேரம் நிழலில் ஆறவிடுங்கள். பிறகு அரிசியை நன்றாக அரைத்து, சலித்துக்கொள்ளுங்கள். சலித்த மாவுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள் கலந்து தேவையென்றால் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையுங்கள். இந்த மாவை விளக்கு போலச் செய்து நடுவில் குழி அமைத்து அதில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம்.
- சீதா சம்பத்