

வரலாற்றுச் சின்னங்கள், பொருளாதாரத் தலைநகர், பளபளக்கும் பாலிவுட் இவை மட்டுமல்ல மும்பையின் சிறப்புகள். பார்த்ததுமே சுவைக்கத் தூண்டும் மும்பையின் சாலையோரக் கடைகள், உலகப்புகழ் பெற்றவை. ‘‘அங்கு செய்யப்படுகிற சாட் வகைகளின் சுவையே தனி. தமிழகத்தில் பரவலாக அறியப்படும் உணவு பாம்பே சட்னி’’ என்று சொல்கிறார் சென்னை போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி. மும்பையின் அடையாளமாக விளங்கும் சில உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர்.
என்னென்ன தேவை?
சோள மாவு - ஒன்றேகால் கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - கால் கப்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
ஆரஞ்சு எசென்ஸ் - 2 துளிகள்
பாதாம், பிஸ்தா - தலா 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் இரண்டு கப் சர்க்கரையைப் போட்டு எலுமிச்சை சாறு, ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்துப் பாகு காய்ச்சுங்கள். தீயைக் குறைத்து வைத்து ஒன்றேகால் கப் சோளமாவை முக்கால் பங்கு நீர் ஊற்றிக் கரைத்து, பாகில் சேர்த்துக் கைவிடாமல் கிளறுங்கள்.
இடையிடையே நெய் ஊற்றி, அல்வா பதம் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டுங்கள். பாதாம், பிஸ்தாவை மெலிதாகச் சீவி அல்வாவில் மேல் தூவுங்கள். ஆறியதும் துண்டாக்கிப் பரிமாறுங்கள். செலவு குறைவு, சமைப்பதும் எளிது.