Last Updated : 21 Dec, 2015 11:16 AM

 

Published : 21 Dec 2015 11:16 AM
Last Updated : 21 Dec 2015 11:16 AM

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ப்ரௌனி

வீட்டிலேயே செய்யலாம் கிறிஸ்துமஸ் கேக்!

எத்தனை பெரிய துயரமாக இருந்தாலும் அதைச் சின்ன சின்ன கொண்டாட்டங்கள் மூலமாகக் கடந்துவர முடியும். அந்த வகையில் மழையின் பாதிப்பிலிருந்து மீண்டுவரும் போராட்டத்துக்கு இடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கும் கொஞ்சம் இடம் தரலாம். “பண்டிகை மரபுகளைக் கடைப்பிடிப்பது பெரியவர்களுக்கு நிறைவு என்றால் விதவிதமான பண்டிகை பலகாரங்களைச் சுவைப்பது சிறியவர்களுக்குப் பேரானந்தம்” என்று சொல்கிறார் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த கவிதா சுரேஷ். அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் பேக்கரி துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், வீட்டிலேயே செய்யக் கூடிய விதவிதமான கிறிஸ்துமஸ் பண்டங்கள் செய்யக் கற்றுத் தருகிறார். “பார்ப்பதற்கு எளிய செய்முறை போல இருந்தாலும் கொஞ்சம் கவனம் பிசகினாலும் பதம் கெட்டுவிடும்” என்கிறார் கவிதா.

என்னென்ன தேவை?

மைதா - 100 கிராம்

சரக்கரை, வெண்ணெய், டார்க் சாக்லேட் - தலா 100 கிராம்

கோக்கோ பவுடர் - 10 கிராம்

வால்நட் - 30 கிராம்

பேக்கிங் பவுடர் - 3 கிராம்

எப்படிச் செய்வது?

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். டார்க் சாக்லேட்டைத் துண்டுகளாக்கி, ஒரு சிறிய பாத்திரத்தினுள் போடுங்கள். இதை கொதிக்கும் தண்ணீரில் வைத்தால் அந்தச் சூட்டில் சாக்லேட் உருகிவரும். இதை டபுள் பாய்லிங் என்று சொல்வார்கள். சாக்லேட்டைப் பாத்திரத்தில் போட்டு நேரடியாக உருக்கினால் தீய்ந்துவிடும்.

வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து எக் பீட்டரால் நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் சலித்த மைதா, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து மிருதுவாகக் கலந்துகொள்ளுங்கள்.

மைதாவைச் சேர்த்த பிறகு எக்காரணம் கொண்டும் கலவையை வேகமாக அடிக்கக் கூடாது. பிறகு உருக்கிய டார்க் சாக்லெட், பொடியாக நறுக்கிய வால்நட் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். அவன் - ஐ 165 டிகிரி செண்டிகிரேடில் 15 நிமிடங்களுக்கு ப்ரீஹீட் செய்யுங்கள். ப்ரௌனி கலவையை வெண்ணெய் தடவிய பேக்கிங் டிரேவில் கொட்டி 165 டிகிரி செண்டிகிரேடில் 25 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x