

ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டத்தில் வீடே அமர்க்களப் படும். நுழைகிற வீடுகளில் எல்லாம் பொரி கடலையைக் கொடுத்து உபசரிப்பார்கள். வீட்டிலும் பொரிகடலை ஏராளமாகக் குவிந்துவிடும். இவ்வளவு பொரியை என்ன செய்வது என்று மலைத்து உட்கார்ந்துவிட வேண்டாம். பண்டிகைக் காலப் படையல் பண்டங்களை வைத்தே விதவிதமான பலகாரங்களைச் செய்து ருசிக்கலாம் என்று தெம்பூட்டுகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. ஒரே மாதிரி பண்டிகை பலகாரங்களைத் தவிர்த்து இந்த வருடம் புதுப்புது பலகாரங்களைச் செய்து படையலிடலாம் என்று சொல்லும் ராஜபுஷ்பா, அவற்றைச் சமைக்கவும் கற்றுத் தருகிறார்.
என்னென்ன தேவை?
தினை, பாசிப்பருப்பு தலா 1 கப்
வெல்லம் 2 கப்
வறுத்த வேர்க்கடலை சிறிதளவு தேங்காய்ப் பல் அரை கப்
பொடித்த ஏலக்காய் சிறிதளவு
எப்படிச் செய்வது?
தினையரிசியையும் பாசிப் பருப்பையும் தனித்தனியாகச் சிவக்க வறுத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தில் கெட்டிப் பாகு வைத்து அதில் அரைத்த மாவு, தேங்காய்ப் பல், வேர்க்கடலை, ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கலந்து உருண்டை பிடியுங்கள். இது கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.