

மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் பெரும்பாலான குழந்தைகள் க்ரீம் பிஸ்கட், சாட் வகைகள், பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி ஆகியவற்றைச் சாப்பிடுகிறார்கள். இவற்றில் இருக்கும் சுவையூட்டிகளும் மணமூட்டிகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும். வீட்டிலேயே சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் வகைகளைச் செய்யலாம்.
அவை தரத்துடன் இருப்பதுடன் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்கிறார் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பிருந்தா ரமணி. நிமிடங்களில் தயாரித்துவிடக்கூடிய சில மாலை நேர நொறுக்குத் தீனி வகைகளை நம்முடன் இங்கே அவர் பகிர்ந்துகொள்கிறார்.
என்னென்ன தேவை?
அரிசி மாவு, பொரிகடலை மாவு, கடலை மாவு, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு - தலா கால் கப்
பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம் - தலா அரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து அவற்றுடன் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். சூடான எண்ணெயை இந்த மாவுக் கலவையில் ஊற்றிக் கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். இந்த மாவைச் சிறு சிறு பக்கோடாக்களாக சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.