

பருப்பு வடை, உளுந்து வடை, கம்பு வடை என்று எந்த வடை வேண்டுமானாலும் செய்யலாம். யானை முகத்தானுக்குக் கம்பு, கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றைப் படைப்பது விசேஷம்.
என்னென்ன தேவை?
கம்பு - 2 கப்
காய்ந்த மிளகாய் - 5
கடலைப் பருப்பு, உளுந்து, துவரம் பருப்பு - தலா கால் கப்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கம்பு தானியத்தை ஆறு மணி நேரம் ஊறவையுங்கள். பருப்பு வகைகளைத் தனியாக ஊறவையுங்கள். முதலில் கம்பு தானியத்தை அரைத்து, அது பாதி மசிந்ததும் பருப்பு வகைகள், தேங்காய்த் துருவல், உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்துக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த மாவுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.