

என்னென்ன தேவை?
வரகரிசி, பனீர் துண்டுகள் - தலா ஒரு கப்
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 1
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி, வெங்காயம் - தலா 1
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வரகரிசியைச் சுத்தம் செய்து நீரை வடித்துவிட்டு, 10 நிமிடம் ஊறவையுங்கள். குக்கரை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய், இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். சிறிதளவு புதினா, மல்லித்தழை சேர்த்து வதக்குங்கள்.
பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். மஞ்சள் தூள், பனீர் துண்டுகளைச் சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து, ஊறவைத்துள்ள வரகரிசியைச் சேர்த்துக் கிளறுங்கள்.
மீதமுள்ள புதினா, மல்லித்தழை, நெய் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடிவிடுங்கள். தீயை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து, கிளறிவிட்டு சூடாகப் பரிமாறலாம். இந்த வரகரிசி பனீர் புலவைத் தயிர்ப் பச்சடியுடன் சாப்பிடலாம்.