

தொகுப்பு: தமிழ்
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மாலதி. அவர் கற்றுத்தரும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சமைக்க எளிமையானவை, சத்து நிறைந்தவை.
தினை லட்டு
தினை அரிசியை மாவாக அரைத்து, வெறும் கடாயில் போட்டுச் சிவக்கும்வரை வறுத்து ஆறவையுங்கள். ஒரு கப் மாவுக்கு முக்கால் கப் கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாகத் தூள் செய்து மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள். பாதாம், முந்திரி, திராட்சை, வால்நட், பேரீச்சை ஆகியவற்றைச் சிறியதாக நறுக்கி நெய்யில் வறுத்துச் சேருங்கள்.
ஒரு சிட்டிகை சுக்குப் பொடி, ஒரு சிட்டிகை ஏலப்பொடி இரண்டையும் சேர்த்துக் கலக்குங்கள். நெய்யைக் காய்ச்சி மாவில் ஊற்றி உருண்டைகளாகப் பிடித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். கருப்பட்டி அல்லது வெல்லத்தைச் சேர்க்கும்போது நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டி கொஞ்சம் கெட்டியாக ஆனதும் மாவில் கலக்கலாம். கெட்டிப் பாகாகக் காய்ச்சக் கூடாது.