

தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன்
சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா.
வேப்பம்பூ ரசம்
வேப்பம்பூ ரசம், வாந்தி, மயக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன் செரிமான ஆற்றலையும் அதிகரிக்கும். இதைச் சிறுவர்களுக்குக் கொடுத்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும். வேப்பம்பூ ரசம் வைக்கக் கற்றுத்தருகிறார் பாக்யா பிரபு.
என்னென்ன தேவை?
வேப்பம்பூ - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - அரை கப்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 1
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
சீரகம், கடுகு,
நெய், மல்லி - தலா 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய்விட்டு வேப்பம்பூவைப் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளுங்கள். துவரம் பருப்பில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். மிளகு, சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொடித்துக்கொள்ளுங்கள்.
மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, புளித் தண்ணீர், அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், தக்காளி அனைத்தையும் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள். நெய்யில் வறுத்த வேப்பம்பூவைச் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். கொத்தமல்லித் தழையைத் தூவி, தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்குங்கள்.