

தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன்
சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா.
சிறுதானிய கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
கம்பு - ஒரு கப், தினை - ஒரு கப், கேழ்வரகு - ஒரு கப், ஏலக்காய் - 4, மண்டை வெல்லம் - 3 கப், தேங்காய்த் துருவல் - 1 கப்
எப்படிச் சமைப்பது?
கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வறுத்தவற்றை ஆறவைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மண்டைவெல்லத்தைத் துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய்த் துருவலைத் தனியாக வதக்க வேண்டும். தானிய கலவை, மண்டைவெல்லம், வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டையாகப் பிடிக்க வேண்டும். அவற்றை இட்லித் தட்டில் வைத்து வேகவைத்து எடுங்கள்.