

தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
என்னென்ன தேவை?
அகத்திப்பூ, சிப்பிக்காளான் - தலா 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை, மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலைப் பருப்பு, உளுந்து
- தலா அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1 கப்
எப்படிச் சமைப்பது?
அகத்திப்பூவையும் சிப்பிக்காளானையும் அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து ஆகியவற்றைப் போட்டுச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அதில் போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள அகத்திப்பூவையும் காளானையும் போட்டு நன்றாகக் கிளறுங்கள். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவையுங்கள். பூவும் காளானும் நன்றாக வெந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து இறக்கிவையுங்கள். சூடான சோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். குழம்புடன் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.