

நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார்.
என்னென்ன தேவை?
மைதா மாவு - 1 கப்
வேகவைத்த சோள முத்துக்கள் - கால் கப்
வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு - அரை கப்
அரிந்த வெங்காயம் - கால் கப்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
சாட் மசாலா - அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
புதினா இலை - 2 டேபிள் ஸ்பூன்
மல்லித் தழை - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்குங்கள். அதில் வேகவைத்த உருளைக் கிழங்கு, புதினா இலை, சாட் மசாலா, கரம் மசாலா, மல்லித் தழை ஆகியவற்றைத் தூவி இறக்கி ஆறவிடுங்கள். ஒரு பாத்திரத்தில் மைதாவுடன் சமையல் சோடா, சிறிதளவு உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்துப் பிசைந்து இரண்டு மணி நேரம் மூடிவையுங்கள். பிறகு சப்பாத்தி போல் திரட்டிக் கொள்ளுங்கள். அதை இதய வடிவ பிஸ்கட் கட்டரில் இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு துண்டின் மேல் உருளைக் கிழங்கு கலவையை வைத்து அதன்மேல் மற்றொரு இதய வடிவத் துண்டை வைத்து மூடி, சுற்றிலும் ஒட்டுங்கள். அதை எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.