தலைவாழை: கோல்டன் பிரெட் டோஸ்ட்
நிபந்தனையற்ற அன்பு காதலில்தான் சாத்தியம் எனப் பலர் நம்புவதைக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் நிரூபிக்கின்றன. மனத்துக்குப் பிடித்தவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துத் தருவதும் காதல்தான் எனச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். ஆண், பெண் என்கிற பேதமின்றி இருவருமே தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் சமைத்துத்தரும் வகையில் எளிய காதலர் தின சமையல் குறிப்புகளை அவர் தருகிறார்.
என்னென்ன தேவை?
பிரெட் துண்டுகள் - 6
வெல்லத் துருவல் - கால் கப்
நெய்யில் வறுத்த உலர் வெள்ளரி, பூசணி விதைகள் - தலா 1 ஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
டூட்டி ஃபுருட்டி - 2 டேபிள் ஸ்பூன்
விதை நீக்கிய பேரிச்சை - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை
நெய் - தேவைக்கு
உலர் செர்ரி - 4
எப்படிச் செய்வது?
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய் தடவி பிரெட் துண்டுகளைப் போட்டு இரண்டு பக்கங்களும் டோஸ்ட் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சுங்கள். அதில் ஏலக்காய்ப் பொடியைத் தூவி இறக்கி ஆறவிடுங்கள். டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளை இதய வடிவ கட்டரில் வெட்டுங்கள். ஒரு பிரெட் துண்டின் மேல் இதய வடிவ பிரெட்டை வையுங்கள். அதன் மேல் வெல்லப்பாகு, உலர் திராட்சை, வறுத்த விதைகள், செர்ரி, பேரிச்சை, டூட்டி ஃபுருட்டி ஆகியவற்றை வைத்துப் பரிமாறுங்கள்.
