

தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ்
மயக்கும் மாங்காய் சமையல்
மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி. ஜெயலட்சுமி.
மாங்காய் கார அல்வா
என்னென்ன தேவை?
தோத்தபுரி (பெங்களூரா) மாங்காய்கள் – 5, கடுகு - கால் டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், பனைவெல்லத் தூள் - 250 கிராம், மஞ்சள்தூள், எண்ணெய், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து, நறுக்கிவைத்த மாங்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்குங்கள். அடுப்பின் தணலைக் குறைத்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்குங்கள். சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.
மாங்காய் நன்றாக வெந்து அல்வா போல் பதமாக மாறியவுடன் இறக்கி வையுங்கள். கலவை சூடாக இருக்கும்போதே தூள் செய்யப்பட்ட பனைவெல்லத்தைக் கலந்து மீண்டும் மிதமான சூட்டில் சிறிது நேரம் வைத்து, கிளறி இறக்கினால் சூடான மாங்காய் அல்வா தயார்.