

மரபு உணவு, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்துவருகிறது. சீர்கெட்டுவிட்ட உணவுப் பழக்கத்தைச் சீரமைக்கும் வழிகளில் ஒன்றாக, மரபு உணவு வகைகளுக்குத் திரும்பும் போக்கும் பரவலாகிவருகிறது. மரபு நெல் ரகங்களைக் கொண்டு எப்படிச் சுவையாகச் சமைப்பது என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. ‘இன்றைய தலைமுறையினர் விரும்பும் வகையில் நவீன உணவு வகைகளை மரபு நெல், அருந்தானியங்களைக் கொண்டு செய்யலாம்’ என்கிறார் சென்னை ஹயாட் ரெஜென்சி எக்சிகியூட்டிவ் செஃப் ஆர். தேவகுமார். மரபு நெல் ரகங்களைக் கொண்டு சில உணவு வகைகளை அவர் தயாரித்துக் காட்டுகிறார்.
ப்ரதிமா
என்னென்ன தேவை?
குதிரைவாலி அரிசி - 500 கிராம்
நெய் - 200 கிராம்
பட்டை, லவங்கம்,
பிரியாணி இலை - 10 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
கடுகு - அரைத் தேக்கரண்டி
கரம் மசாலாப் பொடி - 1 தேக்கரண்டி
கேரட், காலிஃபிளவர்,
பீன்ஸ் - தலா 200 கிராம்
பச்சைப் பட்டாணி,
குடைமிளகாய் - தலா 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது
- 1 மேசைக்கரண்டி
புதினா, கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
குதிரைவாலி அரிசியை அரை மணி நேரம் ஊறவையுங்கள். காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி அதில் பட்டை, லவங்கம், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். நறுக்கிய வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்குங்கள். மசாலாப் பொடி, புதினா இலை, நறுக்கிய காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். ஊறவைத்த குதிரைவாலி அரிசியைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறுங்கள். நான்கு கப் தண்ணீரை ஊற்றி, கொத்துமல்லித் தழையைச் சேர்த்துப் பாத்திரத்தை மூடுங்கள். அரை மணி நேரம் கழித்து எடுத்துப் பரிமாறலாம்.